செப். 1 முதல் கரோனா குறையத் தொடங்கிவிடும்: ராகு - கேது பெயர்ச்சி விளைவு!

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல்  வரும் செப்டம்பர் 1 -ல் ராகு - கேது பெயர்ச்சியுடன் குறையத் தொடங்கிவிடும் என்கிறார் ஜோதிட ஆய்வாளர் நித்ய ஸன்யாஸ்! நல்லதுதானே!
ராகு - கேது பெயர்ச்சி
ராகு - கேது பெயர்ச்சி

"சாருவரி ஆண்டதனில் சாதிபதி னெட்டுமே

தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை

பூமிவிளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்

ஏமமின்றிச் சாவார் இயம்பு"

தற்போது நடந்துகொண்டிருக்கும் சார்வரி ஆண்டுக்குரிய இடைக்காட்டுச் சித்தரின் வருஷாதி பாடல்தான் இது.

தொடக்கப் பாடலிலேயே 18 ஜாதிகளும் நோயில் அவதிப்படுவார்கள், மழை இல்லை, பூமி விளையாது, சிறார்களும் மற்றவர்களும் பாதுகாப்பு இல்லாமல் உயிரிழக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. இங்கே ஜாதி எனக் குறிப்பிடப்படுவது நம் ஊரில் குறிப்பிடப்படும் வகையிலானதல்ல. இந்த இடத்தில் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு மக்கள் என்பதுதான் பொருள்.

இந்த மாபெரும் தீநுண்மியாகிய கரோனா, இவ்வாறு தீவிரமாகப் பரவுவதற்கு  ஜோதிட, கோள்களின் அடிப்படையிலான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

12  ராசிகளில் தனுசு வீடு மற்றும் மீன வீடு ஆகியவை குருவின் வீடுகளாகும். இந்த வீடுகள் மிகவும் சுபத்துவம் வாய்ந்ததும் ஆன்மிகத்துடன் தொடர்புடையதுமான ராசிகள்.

இந்த வீடுகளில் சனியுடன் ராகு அல்லது கேது நெருக்கமாக இணையும் காலகட்டங்களில் பொதுவாக நாத்திகக் கருத்துகள் மேலோங்கியிருக்கும். இத்தகைய அமைப்புகளில் பிறந்தவர்கள், நாத்திகர்களாகக்கூட இருப்பார்கள்.

சனியுடன் ராகு அல்லது கேது இணையும்போது நோய்க் கிருமிகளால் மாபெரும் தொற்று பரவும் வாய்ப்புள்ளது.

நடப்பு சார்வரி ஆண்டில் தனுசு வீட்டில் சனி மற்றும் கேது ஆகிய கோள்கள் மிகவும் நெருக்கமாக இணைந்திருந்தது இந்த கரோனா நோய்த் தொற்று பரவலாவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

அத்துடன் குரு வக்கிர கதியில் நீசமடைந்த காலகட்டத்தில், கடந்த சில மாதங்களில், இந்த நோய்த் தொற்று மிகவும் தீவிரமாகப் பரவியது.

ஆன்மிக கோளான குரு நீசமடைந்து, அதன் தனுசு வீட்டில் சனி மற்றும் கேது இணைவு தொடர்ந்தபடியே இருந்ததால், கரோனா மிகவும் மோசமாகப் பரவும் சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்த நோய்த் தொற்று எப்போதுதான் விலகும்? என்று பார்ப்போமானால்...

தற்போது குரு, வக்கிர கதி முடிந்து, தனுசு வீட்டிற்குள் நுழைந்துவிட்டது.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி ராகு - கேது ஆகிய கோள்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23 ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சி).

தனுசு வீட்டை விட்டு நகர்ந்து, விருச்சிகத்துக்குக் கேது  செல்வதுடன், சனியின் சேர்க்கையிலிருந்தும் விடுபடுகிறது. இதேபோல ராகுவும் மிதுனத்திலிருந்து வெளியேறி ரிஷபத்துக்குச் செல்கிறது.

செப்டம்பர் 1 ஆம் தேதி தொடக்கம் படிப்படியாக கரோனா நோய்த் தொற்றுப் பரவலும் பாதிப்பும் குறையத் தொடங்கிவிடும் என்று நம்பிக்கை கொள்வதற்குப் பல வாய்ப்புகள் இருக்கின்றன.

தவிர, செப்டம்பர் 9 ஆம் தேதி, குரு, முழுமையாக வக்கிர நிவர்த்தியடைந்து தனுசு வீட்டில் ஸ்திரமாக ஆட்சியடைகிறது.

எனவே, செப்டம்பர் தொடக்கத்திலிருந்தே கரோனா பாதிப்பு குறையத் தொடங்கிவிடும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

குரு ஆட்சியடைவதால் கோயில்கள் மீண்டும் திறக்கப்படவும் மக்களின் இயல்பு வாழ்க்கை சீரடையவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆடி 28-ல் (ஆகஸ்ட் 12-ல்) செவ்வாயும் இடப்பெயர்ச்சியடைகிறது. கடந்த 40 நாள்களுக்கும் மேலாக செவ்வாய், ராகுவைப் பார்த்துக்கொண்டிருந்ததும்கூட நோய்த் தொற்று தீவிரமாகப் பரவுவதற்கு ஒரு காரணமெனக் கூறலாம்.

அடுத்தடுத்து வரும் காலகட்டங்களில் எல்லா கோள்களுமே நல்ல சூழ்நிலையை நோக்கி நகருவதால், நோய்த் தொற்று முற்றிலுமாகக் குறைந்தொழியும் என எதிர்பார்க்கலாம்.

ஜோதிடம் என்பது மாபெரும் கடல். மாபெரும் ஜோதிடரே கூட துளியளவே கற்க முடியும். ஒருசில கணிப்புகளின் அடிப்படையில்தான் அனைத்தையும் சொல்கிறோம். இயற்கையின் ரகசியங்களை இறைவன் மட்டுமே அறிவார்.*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com