மகாசுவாமிகள் மதித்த மயூரபுரி மகாத்மியம்!

மயிலாப்பூரை அலங்கரிக்கும் ஆலயங்களில், அருள்மிகு மாதவப் பெருமாள் 
மகாசுவாமிகள் மதித்த மயூரபுரி மகாத்மியம்!

மயிலாப்பூரை அலங்கரிக்கும் ஆலயங்களில், அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல்லவர் காலத்து தாழ்வரைக் கோயில் கட்டட அமைப்பைச் சார்ந்ததாய் சுமார் 1000 வருடங்களுக்கு முற்பட்டது. ஒரு வைணவ ஆலயத்திற்குரிய அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்ற இத்தலம், ஒரு காலத்தில் மாதவப்பெருமாள்புரம் என அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. இன்றும் அரசு ஆவணங்களிலும், இப்பகுதி நியாயவிலைக் கடையிலும் அந்தப் பெயரே பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.

1956- ஆம் ஆண்டில் மயிலை சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாமிட்டிருந்த காஞ்சி மகாசுவாமிகள் தான் அங்கு தங்கியிருந்த இரண்டுமாத காலகட்டங்களில் தினசரி அருகிலுள்ள மாதவப் பெருமாள் கோயிலில் நீராடி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பெருமாளைத் தரிசிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தாராம்.

சாதாரணமாக, மகாசுவாமிகள் எந்த பழைமையான ஆலயத்திற்குச் சென்றாலும் அத்தலத்தின் சிறப்புகள், ஆலய கட்டட அமைப்புகள், அங்கு நடைபெறும் விழாக்கள் எனப் பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளுவதில் மிகுந்த அக்கறையும், ஆர்வமும் காட்டுவார். அவ்வகையில் ஓலைச்சுவடிகளில் இத்தலத்தின் சிறப்பைப் பற்றி ப்ரம்மாண்ட புராணத்தில் ஸ்ரீபிருந்தாரண்ய க்ஷேத்திரத்திற்கு உட்பட்ட மயூரபுரி மகாத்மியம் என்ற பகுதியில் ஐந்து அத்தியாயங்களில் 379 ஸ்லோகங்களில் சொல்லப்பட்டதை படித்து அறிந்து புளகாங்கிதமடைந்தார். 

புராதனமான புண்ணியச் சிறப்பை உடைய இத்தலத்தைப் பற்றி அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் 1957-ஆம் வருடம், தலவரலாறு அச்சில் வருவதற்கு ஏற்பாடு செய்தார். இந்த பேருதவியைச் செய்த மகாசுவாமிகளுக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி,   இத்தலத்தில் புஷ்கரணி அமைந்த இடம் முன்பு ப்ருகு முனிவரின் ஆஸ்ரமமாக இருந்ததாகவும், காச்யபர் முதலான முனிவர்கள் கலிதோஷம் இல்லாது தவம் செய்யச்சிறந்த இடமாக இத்தலத்தையே பகவான் உணர்த்தியதாகவும், பாற்கடலில் அமிர்தம் கடையும்போது தோன்றிய ஸ்ரீமகாலட்சுமி ஒரு கன்னிகையாக அம்ருதவல்லி என்று பெயர் கொண்டு முனிவரின் ஆஸ்ரமத்தில் வளர்ந்து வந்ததாகவும், தாயாரைத் தேடி மாதவன் மயூரபுரிக்கு வருகை தந்ததையும், முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் தாயாரை ஒரு பங்குனி உத்திரத்தில் விவாஹம் செய்து கொண்டதையும் தெரிவிக்கிறது.

தமிழ்த்தலைவன் என்று அடியார்களால் அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீபேயாழ்வார் மயிலையில் இவ்வாலயம் அருகில் அவதரித்த வரலாற்று வைபவங்களையும், மாசி மாதத்தில் பெüர்ணமித் திதியில் சகல தீர்த்தங்களும் இத்திருக்குளத்தில் உள்ள புஷ்கரணியை வந்தடைவதாகவும், அவ்வமயம் அதில் நீராடுபவர்கள் பலனாக சந்தானப் பேற்றினை பெறுவதாகவும் பல்வேறு அரிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். அண்மைக் காலங்களில் இந்த சந்தான புஷ்கரணியில் நீராடி குழந்தைப் பேறு பெற்றவர்கள் பலர்.

எதிர் வரும் மார்ச் 12 (ஞாயிற்றுக்கிழமை) மாசிப் பெளர்ணமியன்று மாதவப் பெருமாள் காலை 7.00 மணி அளவில் வங்கக் கடற்கரைக்குச் சென்று தீர்த்தவாரி கண்டு ஆலயம் திரும்புவார். அன்று ஆலயத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி, கல்யாண மாதவனைக் கண்ணாரக்கண்டு பிறவிப்பயனை அடைவோமாக. 
தொடர்புக்கு : 044 - 24985112.
- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com