அணிவுடை ஆதிரை நாள்!

அணிவுடை ஆதிரை நாள்!

வானம் எங்கும் நிறைந்திருக்கின்ற நட்சத்திரக் கூட்டத்தையும், சந்திரனையும், சூரியனையும் முதன் முதலாகத்..

வானம் எங்கும் நிறைந்திருக்கின்ற நட்சத்திரக் கூட்டத்தையும், சந்திரனையும், சூரியனையும் முதன் முதலாகத் தோற்றுவித்தான் சிவபெருமான் பின்னால் தோன்றிய அலை வீசும் கடலையே வேலியாகக் கொண்ட இவ்வுலகம் "ஆதிரையான் ஆதிரையான்" என்றே உளம் உருகி மனம் நெகிழ்ந்து வழிபாடு செய்கின்றது என்னும் பொருள்பட அமைந்த முத்தொள்ளாயிரம் என்னும் முத்தமிழ்க் காவியத்தின் வாழ்த்துப்பாடல் போற்றுகின்றது, எனில் அந்த திருவாதிரைத் திருநாளுக்கு அப்படி என்ன பெருமை?

நட்சத்திரங்கள் இருபத்தேழினுள் ஆதிரை சிவபிரானுக்கு உரியது. ஓணம் திருமாலுக்கு உரியது. இந்த இரண்டிற்கு மட்டுமே "திரு" என்ற அடைமொழி கொடுத்து நம்முன்னோர் அழைத்தனர். திருஞானசம்பந்தர் திரு அவதாரம் செய்த நாள் திருவாதிரை ஆகும். இது மட்டுமன்று; அவர் சிவஞானப்பால் ஊட்டப்பெற்ற நாளும் திருவாதிரையே ஆகும். சேக்கிழார் இயற்றியருளிய பெரியபுராணத்தினை ஒரு சித்திரைத் திருவாதிரையில் அரங்கேற்றம் செய்யத்தொடங்கி மறு சித்திரைத் திருவாதிரையில் அதனை முடித்தனர் என்று திருத்தொண்டர் புராண வரலாறு கூறுகிறது. வைணவ சமயப்பெரியோர் இராமானுஜர் தோன்றியருளியதும் திருவாதிரையே.

திருவாதிரைத் திருநாளில் சிவபெருமானுக்குச் சிறப்பாக வழிபாடு புரிவதையும் சிவனடியார்களுக்கு அமுதளித்துப் பணிவிடை செய்வதையும் தமது கடமையாகக் கொண்டிருந்தனர் என்பதைப் பெரிய புராணத்தில் நரசிங்க முனையரையர் வரலாற்றில் காண முடிகிறது. இவர் சுந்தர மூர்த்தி சுவாமிகளை தமது மகன் போல் வளர்த்த அரசர் ஆவார்.

மார்கழி மாதம் திருவாதிரைக்கு பத்து நாள் முன்னதாகத் தொடங்கி திருவாதிரையன்று நிறைவு பெறும் காத்யாயினி விரதத்தை கன்னிப் பெண்கள் கடைப்பிடிப்பர். இது பாவை நோன்பு எனும் மார்கழி நீராடல் ஆகும். 'ஆருத்ரா' என்னும் சொல்லுக்கு 'ஈரமான, 'நனைதல்' ஆகிய பொருள்கள் உண்டு. அதாவது இறைவனின் திருவருட் கருணை மழையில் - அருள் வெள்ளத்தில் நனைந்து, மூழ்கித் திளைத்து இன்புறுதலையே மார்கழி நீராடல் புலப்படுத்துகிறது. சிவபெருமானின் ஐந்தொழிலையும் (பஞ்ச கிருத்யம்) இயற்றும் திருவருள் திறத்தினை ஆருத்ராதரிசன பலன் உணர்த்துகிறது.

திருவாரூரில் திருவாதிரைத் திருவிழாவின் சிறப்பினை "முத்து விதானம் மணி பொற்கவரி" என்று தொடங்கும் அற்புதமான தேவாரப் பதிகத்தின் மூலம் அருளிச் செய்தார் அப்பர் பெருமான். தமிழகத்தின் எல்லாத் தலங்களிலுமே திருவாதிரைத் திருவிழா கொண்டாடப்பெற்றதை இதன் நிறைவுப்பாடலில் "ஓரூர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்தேத்தும் ஆரூரன் தன் ஆதிரைநாள்" என்று பாடுகிறார்.

திருமலையில் திருவாதிரைப் பெருவிழா நிகழ்ந்ததை பூம்பாவைப் பதிகத்தில் போற்றுகிறார் திருஞானசம்பந்தர். மூவர் திருமுறைகளில் ஆதிரை நாளை சிவபெருமானுடன் இணைத்து "தலைமகன் தன் நாள் ஆதிரை", 'ஆதியன் ஆதிரையன்', 'ஆதிரை நாள் உகந்தானும்' 'ஆதிநாயகன் ஆதிரைநாயகன்' இப்படி பல குறிப்புகள் காணப்படுகின்றன.

மார்கழி திருவாதிரையன்று இறைவனுக்கு நெய் அபிஷேகம் செய்து சந்தனக்கலவை அணிவித்து அன்புடன் வழிபாடு செய்பவர்கள் இகபரசுகங்களைப் பெற்று இறையருளில் கலந்து மகிழ்வார்கள் என்று கச்சியப்பமுனிவர் சிறப்பாகப்பாடுகிறார்.

பட்டினத்தார் துறவு கொள்ளுமுன் அவரிடம் பணியாற்றிய சேந்தனார் என்னும் சிவனடியார் பின்னாளில் ஏழ்மையாக தில்லையில் வசித்து வரும் நாளில் அவரது இல்லத்திற்கு சிவபெருமான் வறியவராக வந்து அவர் அளித்த விரகு அரிசிக்களியை உண்டு அதனை தன் திருமேனியில் கனகசபையில் காட்டி அவருடைய சிவபக்தியை வெளிப்படுத்தினார். மறு நாள் தில்லையில் திருவாதிரையன்று ஓடாது தடைப்பட்ட தேரை, "சேந்தனே! தேர் நடக்கப்பல்லாண்டு பாடுக" என இறைவன் அசரீரியாக ஒலிக்கத் திருப்பல்லாண்டு பதிகம் தேரை நடக்கச் செய்தார். 

தேவ தேவனாகிய சிவபெருமானது மார்கழித்திருவாதிரைத் திருவிழாவைத் தேவர்கள் பலரும் ஒருங்கு கூடி சிறப்பித்தனர் என்பதை "ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணிவுடை ஆதிரை நாள் நாராயணனோடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார்வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே" என்று சேந்தனார் பாடிப்பரவுகிறார். 

- வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com