அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று சூரசம்ஹாரம்: முருகனை தரிசிக்க மறக்காதீங்க! 

பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுளிலும், பிரசித்தி பெற்ற மற்ற முருகன்..
அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று சூரசம்ஹாரம்: முருகனை தரிசிக்க மறக்காதீங்க! 

பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுளிலும், பிரசித்தி பெற்ற மற்ற முருகன் கோயில்களிலும் இன்று மாலை சூரசம்ஹாரம் மிக விமரிசையாக நடைபெற உள்ளது. 

கடந்த நவம்பர் 8-ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. நவம்பர் 13-ம் தேதியான இன்று மாலை சூரசம்ஹாரமும், நாளை திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். 

திருச்செந்தூர் முருகன்
இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். அங்கு கஜமுகம், சிங்கமுகம் மற்றும் சுயரூபத்தோடு வரும் சூரபத்மனை, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி வதம் செய்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக அலங்காரமாகி, தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேருகிறார். நாளை (நவம்பர் 14) திருக்கல்யாணம் நடைபெறும்.

சூரசம்ஹாரத்தைக் காண இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூரில் 3,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சூரனை அழித்து வதம் செய்த தலமான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடும் இத்தல முருகனை, வருடம் ஒரு முறை இவ்விழாவின் போது ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட மூர்த்தியாக முழுமையாகத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அங்கவஸ்திரம் அலங்கரித்திருக்கும். ஆகவே, சஷ்டி விழா பக்தர்களின் வருகையால் சிறப்புமிக்கதாகிறது.

பழநி தண்டாயுதபாணி 
இன்று நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, மலைக் கோயில் சன்னதியில் மதியம் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு, சூரர்களை வதம் செய்யும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும்
நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு மலைக் கோயில் நடை அடைக்கப்பட்டு, சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைகிறார். இதனால், மலைக் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு
ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைவார். அங்கிருந்து, திருஆவினன்குடி கோயிலுக்குச் செல்வதற்கு முன் வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

அதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக நாளை திருக்கல்யாணம் நடைபெறும்.

சிக்கல் சிங்காரவேலன் 
நாகை அடுத்த சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோயில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரபத்மனின் சூரசம்ஹாரத்திற்கு இக்கோவிலில் தான் முருகப்பெருமான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார் என்பது கந்தபுராண வரலாறு.

இன்று திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக நேற்றிரவு அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சிக்காக திருத்தேரில் வீதியுலா வந்த முருகப்பெருமான் ஆவேசத்துடன் கோவிலுக்குள் வந்து அன்னையிடம் சக்திவேல் வாங்கும்போது ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். அன்னையிடம் சக்திவேலை பெற்று, தமது சன்னதியில் அமர்ந்த முருகப்பெருமானுக்கு, மானிடருக்கு வியர்ப்பது போன்று, திருமேனியெங்கும் வியர்வைப் பொழியும் மகிமை நடந்தது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் சன்னதியின் சுவர்களிலும் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்த காட்சி, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com