அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி! திருக்கார்த்திகை தீபம் தரும் ஜோதிட செய்திகள்!

இன்று பரணி தீபம் எனப்படும் அண்ணாமலை திருக்கார்த்திகை தீபம். கார்த்திகை தீபம் என்பது..
அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி! திருக்கார்த்திகை தீபம் தரும் ஜோதிட செய்திகள்!

பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக விளங்கும் திருவண்ணாமலையில்  திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று மாலை (22/11/2018) பரணி தீபம் ஏற்றுகிறார்கள். அதனைத் தொடர்ந்து நாளை அனைத்து ஆலயங்களில் சர்வாலய தீபம் ஏற்றப்படும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி. சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசித்தால் முக்தி. காசியிலோ இறந்தால் முக்தி. ஆனால் நம்ம திருவண்ணாமலையையும் அண்ணாமலையானையும் நினைத்தாலே முக்தி. "ஸ்மரணாத் அருணாசலம்” என்ற வாக்குக்கிணங்க நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால் இம்மாதம் கார்த்திகை எனப்பெயர் பெற்றது. கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. அன்றைய தினம் திருவண்ணாமலை ஜெகஜோதியாக திகழும்.

திருவண்ணாமலை புண்ணிய பூமி. ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள், தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலை. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி தரும் மலை. உலகப்புகழ் பெற்ற தீப தரிசனம், பௌர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும். அடி முடி காணமுடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம்பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது.

ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டுதென்னோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து “சொக்கப்பனை”க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை தீபத்திருநாள் ஆகும்
 

இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர். சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய்-ஆறுமுகக்குழந்தையாய்- தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அச்சமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.

சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி” உங்களுக்கு மங்களம் உண்டாகுக! உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

ஜோதிடத்தில் கார்த்திகை தீபம்

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான். ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாகக் கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது. விபூதி எனும் சாம்பலுக்கு ஜோதிட காரகர் யார் தெரியுமா? ஞான காரகன் என்றும் மோட்ச காரகன் என்றும் வர்ணிக்கப்படும் கேது பகவான்தான். கேதுவை ஞான காரகன் எனவும் மோட்ச காரகன் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. கேது தான் இருக்கும் இடங்களையும் (பாவங்கள்) பார்க்கும் இடங்களையும் அழித்து அந்த பாவ காரகங்களின் மூலமாக ஞானத்தை வழங்கி பின் மோட்சத்தையும் வழங்கி விடுகிறார்.

கேதுவின் அதிதேவதை ருத்ரன் ஆகும். அதாவது சிவனின் மிக ஆக்ரோஷமான ஸ்வருபம் ஆகும். எனவேதான் கேதுவும் அழிக்கும் தன்மையை பெற்றிருக்கிறார் போலும்! கேதுவின் தன்மை நெருப்புத்தன்மை ஆகும். தேவையற்ற அனைத்தையும் அழித்துப் பிடி சாம்பலாக்கிப் படைப்பின் மறுசுழற்சிக்கு உதவுபவர் கேதுவாகும். மேலும் கேதுவின் காரகங்களில் மயானம், கல்லரை, சுடுகாடு, பிணவறை, பிண ஊர்தி, கழிவு அகற்றுதல், முடி, முடி திருத்துதல், பிணம் எரித்தல், அடக்கம் செய்தல், பிரளயங்கள், குரூர சம்பவங்கள், கொத்து கொத்தான மரணங்கள், தீ விபத்துகள், எரிந்து நாசமாகுதல் போன்றவை அடங்கும்.

ஆக்கத்திற்கு உபயோகிக்கும் நெருப்பிற்குச் சூரியனும் செவ்வாயும் காரகனாகின்றனர். ஆனால் அழிவைத் தரும் நெருப்பு, தீ விபத்துகள், பிணத்தை எறிக்கும் நெருப்பு, எரிமலை, தூமகேது எனப்படும் எரிகற்கள் (தூமகேது கேதுவின் மகனாவார்) ஆகியவை கேதுவின் ஆதிக்கமும் காரகமும் கொண்டவையாகும்.

திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் பல சித்தர்களும் யோகிகளும் வாழ்ந்தும் பலருக்கு காட்சி தந்தும் வருகிறார்கள். அத்தகைய யோகிகளும் ஞானிகளும் சித்த புருஷர்களும் சிவ பூஜை செய்யும் ஆகோரிகளும் கேதுவின் ஆதிக்கம் பெற்றவர்களே.

மோக்ஷ ராசிகள்

ஜோதிடத்தில் கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளை நீர் ராசிகள் மற்றும் மோக்ஷ ராசிகள் என்றும் அழைக்கப்படுகிறது. அத்தகைய மோக்ஷ ராசிகளில் விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாவது வீடாகவும் மரணத்தையும் மோட்சத்தையும் குறிக்குமிடமாக விளங்குகிறது. கார்த்திகை மாதத்தில் தீபத்திருநாள் அமைந்திருப்பது அதை மேலும் உறுதி செய்கிறது. தற்போது கோட்சாரத்தில் மோக்ஷ கால புருஷனுக்கு அயன சயன போக மோக்ஷ வீடான மீனத்தின் அதிபதி குரு பகவான் விருச்சிக ராசியில் நின்று தனது ஐந்தாவது பார்வையால் மீனராசியை மற்றும் ஒன்பதாம் பார்வையால் கடகத்தைப் பார்ப்பதும், ஞான மற்றும் மோக்ஷ காரகரான கேது பகவான் மகரத்தில் நின்று தனது மூன்றாம் பாவத்தால் மீனத்தையும் ஏழாம்பார்வையால் கடகத்தையும் பதினோராம் பார்வையால் விருச்சிகத்தையும் பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

விஷ ஜெந்துக்களுக்கும் மோட்சம்

கார்த்திகை மாதத்தை கீட மாதம் என்று கூறுவார்கள். மேலும் கார்த்திகை மாதம் மழைக் காலத்தில் வருவதால் புழுக்களும், கொசுக்களும் வண்டுகளும் விஷ ஜெந்துக்களும் அதிகமாக உருவாகும். புழுக்களுக்கும், கொசுக்களுக்கும், வண்டுகளுக்கும், மரங்களுக்கும், ஜலத்தில் வசிக்கக்கூடியவற்றுக்கும் ஆகாசத்தில் வசிக்கக்கூடியவற்றுக்கும், நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து, சிவ பூஜை முடிந்த பிறகு, குங்கிலியம் போட்டு பிரார்த்தனை செய்வார்கள். 

மண் அகல்விளக்கு

ஜோதிடத்தில் மண்ணைக் குறிக்கும் கிரகம் சனைஸ்வரன் எனும் சனீஸ்வர பகவானாவார். மண்ணில் உதித்த உயிர்களெல்லாம் மண்ணோடு மண்ணாக மாறுவதைக் குறிக்கும் வகையில் ஆயுள் காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். நவக்கிரகங்கள் ஆயுள் காரகன் என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் சிறப்பாக அமைந்தால் ராஜ போக வாழ்வு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் மகரம் கும்பத்தில் அமைந்து ஆட்சி பெற்றோ, சனி துலாத்தில் அமைந்து உச்சம் பெற்று இருந்து சனி அமைந்த வீடு லக்கின கேந்திரமாகவோ, சந்திர கேந்திரமாகவோ இருந்தால் சச யோகம் உண்டாகிறது. சச யோகம் ஆனது பஞ்சமகா புருஷ யோகத்தின் ஒரு பிரிவு ஆகும். ஆயுள் காரகனான சனியால் இந்த யோகம் உண்டாவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார்.

வள்ளால மகாராஜாவிற்கு மோட்சம்

திருவண்ணாமலையை ஆட்சி செய்த வள்ளால மகாராஜா குழந்தைப் பேறு இல்லாமல் இறைவனை நோக்கித் தவமிருந்ததால் இறைவனே அவருக்குக் குழந்தையாகப் பிறந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனால் குழந்தைப் பேறு வேண்டுபவர்கள், வேண்டுதல் நிறைவேறிய பிறகு கார்த்திகை தேர்த் திருவிழா அன்றும், 5-ம் திருவிழா அன்றும், திருவூடல் திருவிழா அன்றும் கரும்பில் தொட்டில் செய்து, அத்தொட்டிலில் குழந்தையை வைத்து கோயிலை வலம் வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். வள்ளால மகாராஜா இறந்த பிறகு இறைவனே ஈமக்கிரியைகளைச் செய்ததால் இக்கோயிலில் மோட்ச தீபமிடுவதும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ரமணருக்கு முக்தி

காற்று ராசியான துலா ராசியை லக்னமாக கொண்டு திரிகோணத்தில் கும்பத்தில் குருவும் மிதுனத்தில் கேதுவும் நிற்கும் ஜாதக அமைப்பைக் கொண்ட மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், “பாதாள லிங்கம்” இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்குப் பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

இந்த குரு நாளில் அமைந்த கார்த்திகை திருநாளில் மண் அகல் விளக்குகளை நிறைய வாங்கி சுத்தமான நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி குரு பகவானின் அருளோடு கேதுவின் அருளைப் பெற்று மோக்ஷ கதி அடைவோமாக! 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com