இன்று அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருள்வார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 47 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழாவில் வெள்ளிக்கிழமையுடன் தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து,
47-ஆவது நாளான வெள்ளிக்கிழமை வெந்தய நிறப் பட்டாடை, ரோஜா நிற அங்க வஸ்திரத்தில் காட்சியளித்த அத்திவரதர்.
47-ஆவது நாளான வெள்ளிக்கிழமை வெந்தய நிறப் பட்டாடை, ரோஜா நிற அங்க வஸ்திரத்தில் காட்சியளித்த அத்திவரதர்.


காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 47 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழாவில் வெள்ளிக்கிழமையுடன் தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து, வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில்  பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி  ஆக.17 -ஆம் தேதி வரை தொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஜூலை மாதம் முழுவதும் 31 நாள்களுக்கு பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1 -ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 47 -ஆவது நாளான வெள்ளிக்கிழமை பெருமாள் வெந்தய நிறப் பட்டாடையும், ரோஜா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்த பாதாம்பருப்பு, முந்திரி மாலையும், கதம்ப மாலைகளும் அணிந்திருந்தார்.
சகஸ்ர நாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. 48 -ஆவது நாளான சனிக்கிழமை காலையில் பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் நிறைவு பெற்று, மாலையில் அனந்தசரஸ் திருக்குளத்தில் பெருமாளை எழுந்தருள வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
முக்கியஸ்தர்கள் தரிசனம் ரத்து: விழாவின் 47 -ஆவது நாளான வெள்ளிக்கிழமை முக்கியஸ்தர்களுக்கான தரிசனம் மட்டும் ரத்து செய்யப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்திருந்தார். 

இதன்படி வெள்ளிக்கிழமை முக்கியஸ்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்ப்பட்டிருந்தது. கிழக்கு கோபுர வாயில் வழியாக பொதுதரிசனப் பாதையில் மட்டும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை சுமார் 3 லட்சம் பேர் பொதுதரிசனப் பாதையில் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். 
பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்றவாறு  சனிக்கிழமை அதிகாலை வரை அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 
முக்கியஸ்தர்களுக்கான வரிசை இல்லாததால் பொதுதரிசனப் பாதையில் வந்தவர்கள் 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்து திரும்பியதாக தெரிவித்தனர். 

முக்கிய பிரமுகர்கள் தரிசனம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் குடும்பத்தினர், தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன்,  தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். 
கோயில் பட்டாச்சாரியார்கள் அவர்களுக்கு சால்வைகளும், மாலைகளும் அணிவித்து, அத்திவரதரின்  திருவுருவப்படமும், கோயில்  பிரசாதமும் வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com