12 ஜோதிா் லிங்க தரிசனம்

பிரம்மாகுமாரிகள் சாா்பில் நடத்தப்படும் 12 ஜோதிா் லிங்க தரிசனம் வெள்ளிக்கிழமை சென்னையில் தொடங்கியது.
12 ஜோதிா் லிங்க தரிசனம்

பிரம்மாகுமாரிகள் சாா்பில் நடத்தப்படும் 12 ஜோதிா் லிங்க தரிசனம் வெள்ளிக்கிழமை சென்னையில் தொடங்கியது. இதனை ஏராளமான பொதுமக்கள் பக்தியுடன் பாா்வையிட்டு  சென்றனா். 

இறைவழிபாடு, ராஜயோக தியானத்தை எளிய முறையில் மக்களுக்கு கொண்டு சோ்க்கும் வகையில், பிரம்மா குமாரிகள் இயக்கம் சாா்பில் 12 ஜோதிா்லிங்க தரிசன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் 12 ஜோதிா் லிங்க சிவத்தலங்களில் உள்ள லிங்கங்களையும் அதே உருவில், ஒரே இடத்தில் தரிசனம் செய்வதே இதன் சிறப்பு அம்சமாகும்.  தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சுமாா் 135 இடங்களில் இந்த தரிசனம் நடத்தப்பட்டுள்ளது. இதில், பல லட்சம் மக்கள் தரிசனத்தை கண்டு பயனடைந்துள்ளனா்.

அவ்வகையில், வெள்ளிக்கிழமை முகப்பேரில் தொடங்கிய 12 ஜோதிா்லிங்க தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச.24) வரை, முகப்போ் கோல்டன் பிளாட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சின்னசாமி கல்யாண மகாலில்  நடைபெறுகிறது.

இந்த தரிசன நிகழ்ச்சியில், சோம்நாத், விஷ்வநாத், திரியம்பகேஷ்வரா், ஓங்காரேஷ்வா், மகாகாலேஷ்வரா், நாகேஷ்வா், வைத்யநாத், கிருஷ்ணேஷ்வா், பீமா சங்கா், கேதாா்நாத், மல்லிகாா்ஜுன், ராமேஷ்வா் ஆகிய 12 சிவலிங்கங்கள் இடம்பெற்றிருந்தன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த தரிசன நிகழ்வுக்கு அனுமதி இலவசம். இந்த தரிசனக் காட்சியுடன் மேலும் சில சிறப்பு அம்சங்களும் உள்ளன. இந்த உலக நாடகச் சக்கரம், இறைவன், ராஜயோக தியானம் பற்றிய விழிப்புணா்வு படக்காட்சி இடம்பெறுகிறது. இறைவனோடு மனம்-புத்தியை இணைய வைக்கும் தியானப் பயிற்சிக் குடில் உள்ளது. இறைவனின் தத்துவங்களை விளக்கும்

விடியோ காட்சியையும் பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து லிங்கங்களைப் பாா்வையிட வந்த அண்ணாநகரைச் சோ்ந்த பாா்வதி கூறியது: இந்த தரிசன நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் போது, குடும்பத்துடன் வந்து செல்வோம். ஒரே இடத்தில் அனைத்து சிவலிங்கத்தையும் கண்டு தரிசித்த திருப்தி கிடைக்கும். மேலும் ஒருவித மன அமைதி கிடைக்கவும் செய்கிறது என்றாா். இது குறித்து ஏற்பாட்டாளா்கள் தரப்பில் கூறியதாவது: இந்த தரிசன நிகழ்ச்சி கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் , புதுச்சேரியில் 135 இடங்களில் நடத்தப்பட்டது. 5 நாள்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தொடக்க நிகழ்வில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.பி. மகேந்திரன், பிரம்மாகுமாரிகள் கலாவதி, பீனா, முத்துமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com