ஒருவரின் திருமண காலம் பற்றி ஜோதிடம் தெரிவிக்குமா?

நிச்சயமாக, ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும், ஒருவரின் திருமண காலத்தை ஜோதிடம் தெரிவிக்கும்.
ஒருவரின் திருமண காலம் பற்றி ஜோதிடம் தெரிவிக்குமா?

1. நிச்சயமாக, ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும், ஒருவரின் திருமண காலத்தை ஜோதிடம் தெரிவிக்கும். இதனைக் கொணர்ந்த ரிஷிகளும், ஜோதிட விற்பன்னர்களும், தெளிவாகப் பாமரரும் அறியும் வண்ணம் அறிவித்துள்ளனர். ஆனால் அதனைக்காண, பொறுமையும் சற்று நிதானமும் தேவை ஆகும். சிறிது கணித அறிவு அதாவது கூட்டல், கழித்தல், வகுத்தல் தேவை. இதனை அறிந்துகொண்டால் போதும் ஜோதிட அறிவு பெருக்கெடுத்து ஓடும். ஆர்வம் கூடும். 5+3 =8 இது அனைவருக்கும் ஒன்று போல் தான் வரும், வரனும். ஆனால், அதன் கூட்டுத் தொகையை வேண்டுமானால், பல்வேறு மொழிகளில், (எட்டு, EIGHT, ஆட்) கூறலாமே தவிர அதன் மதிப்பு மாறாது. அதனைப் போலவே, இதனைச் சிறிது சிரமப்பட்டால் போதும் நமது உடன்பிறப்புகளுக்கு, மகன், மகளுக்குத் திருமணம் எப்போது என நாமாகவே அறிய முடியும். 

2. ஒருவர், திருமண வயதிற்கு வந்துவிட்டாலோ அல்லது பெற்றோர்கள் தனது மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்ய நினைத்தாலோ உடனடியாக திருமணப் பதிவு மையம் சென்று பதிவு செய்து அதில் வரும் வரன்களை ஜோதிடரிடம் எடுத்துச் சென்று பொருத்தம் பார்த்தல், திருமண காலம் அறிதல் போன்றவற்றில் இறங்கி விடுகின்றனர். சில ஜோதிடர்கள், கொண்டுவந்த வரன்களின் நட்சத்திரப் பொருத்தம் கண்டு பொருந்துகிறது என்றோ அல்லது பொருந்தாது என்றோ மட்டும் கூறியவுடன் பெற்றோர் அடுத்த கட்ட நடவடிக்கைகளாக, வரனை நேரில் பார்க்கச் சென்று விடுகின்றனர். அங்குப் பலவித கருத்துக்கள், தகவல்கள் அறியப்படுகிறது / பரிமாறப்படுகின்றன. 
               
3. ஆனால், இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க யாவரும் விட்டு விடுகின்றனர். அது தான் பிறகு பெரிய பிரச்னையில் வந்து விடிகிறது. திருமண வரவேற்பு வரை நின்ற மணமகன், மணமகள் மறுநாள் காலை நடக்கும் திருமாங்கல்ய வைபவத்தின் போது இருவருள் ஒருவர் ஓடி விடுகின்றனர். காரணம் அவர்களின் மனநிலை கடந்த கால காதல் / திருமணமே ஆகாத நிலை போன்ற சில, பல நிகழ்வுகள் மனதை அப்படிச் செய்ய வைக்கிறது. அப்படியானால், நாம் அதற்குச் செய்ய வேண்டியது என்ன எனக் கேட்டால், வரன் தேடும் முன்னரே சரியான அனுபவம் வாய்ந்த ஜோதிடரை / உள்ளதை உள்ளபடி சொல்லும் ஜோதிடரை அணுகி, மணமகன் / மணமகளுக்கு அவர்கள் தம் ஜனன கால ஜாதகத்தில், காந்தர்வ விவாகம் செய்யும் யோகம் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் குறை அவர்களுக்கு உள்ளதா, எனக் கேட்டு அறிந்து, ஏதும் அது போல் இல்லை எனக் கண்டு பின்னர் வரன் பார்க்கும் நிகழ்வுக்குள் நுழைவதே சரியாகும். ஏன் எனில், இன்றைய சூழலில், பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களில் பல, 
விவகாரத்துக்குள் சென்று முடிகிறது. 

4. ஜோதிடத்தில், பலவகையான செய்திகளை ஒருவரின் ஜனன கால ஜாதகத்தைக் கண்டு அதனை ஆய்வு செய்து பார்த்தால் பின்வரும் அனைத்து வகையான தகவல்களையும் அறியும் வண்ணம் அதில் பொதிந்து கிடக்கிறது என்றால் அது மிகை ஆகாது.

1) உரியக் கால திருமணம்.

2) தாமதத் திருமணம்.

3) திருமணம் உறவிலா அல்லது அந்நியத்திலா?

4) காதல் திருமணத்தைத் தரும் யோகங்கள்

5) காதல் கலப்பு திருமணம்

6) இரகசிய காதல் திருமணம்

7) இல்வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை

8) விவாகரத்து

9) காதல் திருமண பிரிவினை / விவாகரத்து

10) திருமணமே நடைபெறமுடியாத நிலைக்கான கிரக அமைப்பு

11) சந்நியாசி யோகம் 

12) பெண்கள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படும் நிலை

13) கணவரை இழக்கும் நிலை (விதவா தோஷம்)

14) மனைவியை இழக்கும் நிலை (விதவா தோஷம்)

15) இரண்டாம் திருமண யோகம் 

16) பலருடன் தொடர்பு கொள்ளும் நிலை (இரு பாலருக்கும்)

17) சக களத்திர யோகம் (சக்களத்தி யோகம்)

18) அலி யோகம் (ஆண்)

19) அலி யோகம் (பெண்)

20) ஒரு தலைக்காதல் 

21) காவல் நிலையம் செல்லும் நிலை

22) தனி சிறப்புப் பெற்ற திருமண வாழ்வு (விதவையை மணப்பது, குழந்தையுள்ள பெண்ணை மணப்பது, விலை மாதர் வீட்டிலேயே இருப்பது, மனைவியை இழந்த ஒரு ஆணை மணப்பது, மைத்துனியை மணப்பது) இது போல் பலவகைகள் உள்ளது. இப்போது கூறுங்கள் வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் போதும் என்றும், இன்னும் சிலர் கழுத்துப் பொருத்தம், வயிற்றுப் பொருத்தம் போதுமென்று கேட்டு இவை இருந்தால் திருமணம் செய்விக்கிறார்கள். முடிவு, திருமணம் ஆகி சில நாள் / வாரம் / மாதம், ஏன் இரு குழந்தை பெற்ற பின்னர் விவாகரத்து பெறுவதோ, வேறு ஒருவருடன் வாழ துடிப்பதோ, அல்லது தற்கொலை செய்து கொள்வதோ நிகழ்கிறது. 

5. பெற்றோர்களும், ஏதோ திருமணம் செய்து முடித்து விட்டோம் தமது கடமை முடிந்ததெனக் கருதுகிறார்கள். இது சரிதானா என யோசிப்பதற்குள், ஏதேனும் துர்சம்பவங்கள் நடந்தேறிவிடுகிறது. கண் போன பின் சூரிய வழிபாடு போன்ற நிலையில் ஒன்றும் செய்வதற்கில்லை. விதி வழியே மதி செல்கிறது என்று சொல்லித் தப்பித்து விடுவர். விதியை மதியால் வெல்லலாம் என முயற்சித்து பார்ப்பவர்கள் ஒரு சிலரே. 

6. எதில் அவசரம் காட்ட வேண்டும் எதில் நிதானம் வேண்டும் என்பதனை புரிதல் நன்று. சரியான பிறப்பு தகவல்களைத் தந்தும், சரியான ஜோதிடரைக் கண்டும், அவசரகதியில் செயல்படாமல் இருப்பின் நல்வாழ்க்கை அமையப்பெற்று எந்த குறையும், சலனமும் இன்றி பல்லாண்டு வாழ்வர்.உண்மைக்கு அவசரம், ஒரு போதும் உண்மையாக இருக்க முடியாது. 

7. திருமணம் எப்போது நடக்கும்?

2 ஆம் இடம் குடும்ப ஸ்தானம் , 7-ஆம் இடம் களத்திர ஸ்தானம் (வரப்போகும் கணவன் / மனைவி பற்றிய குறிப்பு) மற்றும் 11 லாப ஸ்தானம் (திருமணம் நடந்தேறுவது). இந்த மூன்று வீடுகளின் தசா புத்தி காலங்களில் நடைபெறும். ராசி கட்டத்தில் உள்ள லக்கின அதிபதி அம்சத்தில் எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசியில் கோச்சார குரு வரும் போது (அல்லது) குருவின் பார்வை விழும் போது) கோச்சார குரு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது. குருவின் பார்வை ராசிக்கு 1, 2, 4, 7, 12-க்கு விழும் போது லக்கினம் அல்லது ராசி அல்லது சுக்கிரன் நின்ற ராசிக்கு 7-ல் குரு வரும் போது இவை சிலவே இன்னும் நிறைய உள்ளது. 

8. சர்வாஷ்டக வர்கப்பரல்கள் மூலம் திருமண நேரம் அறிவது:-

சர்வாஷ்டக வர்க பரல்களை, லக்கினம் முதல் லக்கினத்திற்கு 7-ஆம் வீடு வரை உள்ளவற்றைக் கூட்டி, வரும் என்னை 27-ஆல் வகுத்து (27 நக்ஷத்திரம்) மீதி வரும் எண்ணுக்குரிய நக்ஷத்திரத்தை, பெண் என்றால் குருவும், ஆண் என்றால் சுக்கிரனும் தொடும் / கடக்கும் போது நிச்சயம் திருமணம் நடந்தேறும். அதே போல் குரு அல்லது சுக்கிரன் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 7 ஆம் வீட்டைத் தொடும்போதோ அல்லது ஏழாம் வீட்டைத் தொடர்பு (பார்வை) கொள்ளும்போதோ திருமணத்துக்கு ஒரு நல்ல நேரமாகக் கருதப்படும்.  

9. இன்னும் பலவகைகள் உண்டு, ஒவ்வொரு கிரக பாகைக் கணக்கீட்டு முறைகளும் உள்ளது. இவை அனைத்தையும் கண்டு சொல்வது என்பது மிகச் சிரமம் தான். அதற்காக ஆகும் செலவும் அதிகமாக இருக்கக்கூடும். ஆனால் வருகிறவர்கள் எங்கெங்கோ கால, நேர, பணத்தைச் செலவழித்து விட்டு ஜோதிடரிடம் அவசரம் காட்டுவது எந்த வகையில் சரி என்பதனை இதனைப் படிக்கும் அனைவரிடமும் விட்டு விடுகிறேன். நமது மகன் / மகள் /சகோதரர் / சகோதரி இவர்களின் மேல் நாம் கொண்டுள்ள நிஜ அன்பும், பாசமும் இதனைத் தீர்மானிக்கட்டும். 

ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

- தொடர்புக்கு: 98407 17857 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com