கோடைக்கால நோய்கள்: அம்மை நோய் பற்றி மருத்துவ ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

இன்னும் அக்னி நக்ஷத்திரம் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே கோடையும்..
கோடைக்கால நோய்கள்: அம்மை நோய் பற்றி மருத்துவ ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

இன்னும் அக்னி நக்ஷத்திரம் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே கோடையும் அதிரடியாகத் தொடங்கி இப்போதே வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது. போதிய மழை இல்லாமல், வெயில் தலைகாட்ட முடியாத அளவுக்குக் கொளுத்திக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் வறட்சி மிகுந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டோடு கோடைக்கால நோய்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளும், வயதானவர்களும், நோயாளிகளும் இப்போதே வெயிலின் கொடுமையால் வதங்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் இந்த கோடை வெயில் பாதிக்காத அளவிற்கு எல்லோருமே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

அம்மை நோய்

தற்போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாகப் பெருகி நோய்களைப் பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரங்களால் ஏற்படுகின்றன. வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டிஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரங்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. இந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

அம்மை நோய்க்கான அறிகுறிகள்

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போலச் சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களிலிருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களைத் தாக்கும். மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்குப் பரவ வாய்ப்புள்ளது.

அம்மை நோய்

அம்மை நோயைப் பொறுத்தவரை "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்" என்ற சித்தர்களின் வாக்கிற்கு ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு மாந்த உடல் தட்பவெப்ப மாறுதலடையும். கோடைக்காலத்தில் வெய்யிலின் கொடுமையால் மனித உடல் சூடாகி அழல் குற்றம் (பித்தம்) மிகுந்து அந்த சூழலில் மழை பெய்தால் கப குற்றம் சேர்ந்து கிருமி தொற்று ஏற்பட்டு இந்த நோயை உண்டாக்குகிறது. தற்போது அக்னி நக்ஷத்திரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் பல பாகங்களில் அவ்வப்போது மழை பெய்வது சீதோஷன நிலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மை நோயின் வகைகள்

பனை முகரி, பாலம்மை, வரகு திரி, கொள்ளம்மை, கல்லுதிரி, கடுகம்மை, மிளகம்மை, உப்புத்திரி, கரும்பனிசை, வெந்தய அம்மை, பாசிபயரம்மை, விச்சிரிப்பு, குளுவன், தவளையம்மை, என பதினான்கு வகைப்படும். இவைமட்டும் அல்லாது பெரியம்மை சிறிய அம்மை (விளையாட்டம்மை) தட்டம்மை புட்டாலம்மை எனவும் கூறப்படுகிறது.

முதலில் சாதாரண காய்ச்சல் போலத்தான் நோய் தொடங்கும். இரண்டாம் நாளில் உடல்வலி, தலைவலி, சோர்வு அதிகமாகும். காய்ச்சல் கடுமையாகும். உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் ஏற்படும். வாயிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள் தெரியும். மார்பிலும் முதுகிலும் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றும். அடுத்த 24 மணி நேரத்தில் இவை எல்லாமே நீர் கோத்த கொப்புளங்களாக மாறிவிடும். சின்னம்மைக் கொப்புளங்கள் முகம், மார்பு, வயிறு, முதுகு, அக்குள் போன்ற பகுதிகளில் மிக நெருக்கமாகவும் அதிகமாகவும் காணப்படும். முன் கை மற்றும் முன் கால்களில் மிகப் பரவலாகவும் எண்ணிக்கையில் குறைந்தும் தெரியும். இது சின்னம்மைக்கே உரிய முக்கியத் தடயமாகும்.

வழக்கமாக இந்த நோய் தொடங்கிய ஏழாம் நாளில் காய்ச்சல் குறையும். அடுத்த நான்கு நாட்களில் கொப்புளங்கள் சுருங்கி, பொருக்குகள் உதிரும். அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் சிறிது சிறிதாக மறைந்துவிடும். ஒருமுறை சின்னம்மை வந்து குணமானவருக்கு, அவரது உடலில் இந்த நோய்க்கான எதிர்ப்பு அணுக்கள் உருவாகிவிடுவதால், ஆயுள் முழுவதும் அவருக்கு இந்த நோய் மீண்டும் வராது.

அம்மை வந்தவர்களுக்கு இடுப்பில் ஒரு மெல்லிய பருத்தியாடையைக் கட்டிவிட்டு அவர்களைத் தனியறையில் இருக்கச் செய்ய-வேண்டும். மெல்லிய துணிகளைப் பரப்பி, அதில் நிறைய வேப்பிலைகளைப் போட்டு அதில் படுக்கவைக்க வேண்டும். அம்மை வந்தவர்களுக்கு உடம்பெல்லாம் சொறியத் தோன்றும். அப்போது விரல்களால் சொறிந்தால் புண்ணாகிவிடும். எனவே, வேப்பிலையால் வருடிவிட்டால் அரிப்பு தீரும். புண் ஏற்படாது. வேப்பிலையின் இரு விளிம்பும் கூர் கூராக மென்மையாக இருப்பதால், அரிப்பு தீர்க்கும்.

உண்பதற்கு வாழைப்பழத்தில் பேயன்பழம் கொடுக்கவேண்டும். வேப்பிலைக் காற்று அம்மைக் கிருமியைக் கொல்லக்கூடியது. அதனால்தான் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலை ஒரு இருபது எடுத்து அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பாதியாகச் சுண்டும்வரை கொதிக்க வைத்து இறக்கி, நன்றாக ஆற வைத்து, காபி டம்ளரில் 1/2 டம்ளர் சாறு அம்மை வந்தவருக்குக் கொடுக்கவேண்டும். ஒரு நாளைக்கு, காலை மாலை இருவேளைகள் கொடுக்க அம்மை நோய் விரைவில் குணமாகும்.

மாரியாத்தாள்

சாஸ்திரங்களிலும் வழக்கத்திலும் அம்மைநோய் சுத்தமின்மையாலும், கிருமித் தொற்றாலும் ஏற்படுகிறது. அதுபரவக்கூடாது என்பதற்காகத்தான் மாரியாத்தாள் என்ற பயத்தை ஏற்படுத்தித் தீட்டு திடக்கு ஆகாது எனும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்கள்.

பச்சை பட்டினி விரதம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை அம்மை போன்ற கொடுமையான நோய்கள் மற்றும் துயரங்களிலிருந்தும் ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்தியம் படைக்க மாட்டார்கள். இளநீர், பானகம், நீர் மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட பானங்களே அன்னையின் ஆகாரம். இதற்கு ‘பச்சை பட்டினி விரதம்’ எனப் பெயர்.

அம்மை நோய்க்கு ஜோதிட காரணங்கள்

என்னங்க! இந்த விஞ்ஞான உலகத்தில் இதற்கெல்லாம் கூட ஜோதிட தொடர்பு இருக்கிறதா? உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?  எனக் கேட்பவர்களுக்கு ஆம்! இருக்கிறது என்பது தான் பதில்.

1. அம்மை நோய் ஏற்பட முக்கிய காரக கிரஹம் செவ்வாய் என்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் ஆறாம் வீட்டுத் தொடர்பும் முக்கியமானதாகும்.

2. ஆத்மகாரகன் எனப்படும் சூரியன் ஒன்றாம் பாவாதிபதி ஆகிறார். கால புருஷ ஜாதகத்தில் செவ்வாய் முதல் வீட்டு அதிபதி ஆகிறார். எனவே லக்னம், லக்னாதிபதி, சூரியன், செவ்வாய், ஆறாம் பாவாதிபதி, புதன் இவர்களோடு ராகு/கேது தொடர்பு கொண்டு தசா புத்தி நடைபெற்றால் அம்மை நோய் ஏற்படும். மேலும் அம்மை நோய் ஒரு வெம்மை நோய் என்பதால் உஷ்ண கிரஹங்களான சூரியன் மற்றும் செவ்வாய் முக்கிய காரகம் பெறுகின்றனர்.  

3. மருத்துவத்தை போலவே மருத்துவ ஜோதிடமும் அம்மை நோய் அசுத்தத்தினால் ஏற்படுகிறது என்கிறது. உடலிலுள்ள அசுத்தங்கள் சிறுநீறு மற்றும் பிற வழிகளில் வெளியேற வாய்ப்பில்லாமல் போனால் ரத்தம் அசுத்ததன்மை அடைகிறது. எனவே அசுத்தங்களை சரும துவாரங்களின் மூலமாக வெளியேற்றும்போது அது அம்மை மற்றும் பலவித சரும நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே சரும வியாதிகளுக்கு அசுத்தங்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்குபெற்ற சுக்கிரன் முக்கியமான காரக கிரகமாகிறார்.

4. அம்மை நோய் காற்றில் பரவும் நோய் என்பதால் அதற்கு காரக கிரகங்கள் புதன் மற்றும் ராகு/கேது தொடர்பு மற்றும் ஆறாம் பாவ சம்மந்தம் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

5. சுக்கிரனும் சந்திரனும் உடம்பிலுள்ள நீர் மற்றும் ரத்தத்தைக் குறிப்பவர்கள். அவர்களுடன் அசுப கிரக சேர்க்கை பெற்றால் அம்மை மற்றும் பல சரும நோய்கள் ஏற்படும்.

6. பலமிழந்த சந்திரனுடன் நீர் ராசியில் சூரியன் அல்லது செவ்வாய் நின்று கால புருஷனுக்கு 6-ம் வீட்டதிபதியான புதன் மற்றும் ஜாதக ஆறாம் வீட்டதிபதி தொடர்பு கொண்டு தசா புத்தியை நடத்தினால் அம்மை நோய் ஏற்படுவது நிச்சயம் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறும் சில முக்கிய கிரக சேர்க்கைகள்

1. சூரியன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் மூவரும் எந்த ராசியிலும் சேர்க்கை பெற்றாலும் அம்மை நோய் ஏற்படும்.

2. சூரியன் மேஷத்தில் உச்சம் மற்றும் சிம்மத்தில் ஆட்சி பெற்று சுக்கிரன் எந்த நிலையில் தொடர்பு கொண்டாலும் அம்மை நோய் ஏற்படும்.

3. சந்திரன் செவ்வாய் சனி சேர்க்கை மேஷத்திலோ அல்லது ரிஷபத்திலோ நின்று தசா புத்தி நடைபெற்றால் அம்மைநோய் ஏற்படும்.

4. சந்திரன் மிதுன கடக மீன நவாம்சத்தில் நின்று செவ்வாய் மற்றும் ராகுவுடன் தொடர்பு கொள்வது.

5. சந்திரன் புதன் லக்னாதிபதி ராகு/கேதுவுடன் சேர்க்கை பெற்று நிற்பது.

6. சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகிய நால்வரும் அசுபதன்மையோடு சேர்க்கை பெறுவது.

7. சூரியன், செவ்வாய், சனி எந்த ராசியிலும் சேர்க்கை பெற்று நிற்பது.

8. சூரியன், சனி, சுக்கிரன் ஆறாம் வீட்டதிபதியோனு தொடர்பு கொண்டு லக்னத்தில் நிற்பது.

9. மேற்கத்திய ஜோதிடம் திடீர் நிகழ்வுகளுக்கு யுரேனஸ் காரகர் என்கிறது. யுரேனஸ் மேற்கண்ட இணைவுடன் கோசாரத்தில் அசுப தொடர்பு கொள்ளும்போது அம்மை நோய் ஏற்படும்.

ஜனன ஜாதகத்தில் மேற்கண்ட கிரக இணைவு பெற்று தசாபுத்தி அந்தரங்கள் ஏற்படும்போது அல்லது கோசாரத்திலும் இத்தகைய தொடர்புகள் ஏற்படும்போது அம்மை நோய் போன்ற சரும நோய்கள் ஏற்படும் காலமாகக் கொள்ளவும்.

மாரியாத்தாள் எனப்படும் அம்மை நோய்க்கான பரிகாரங்கள்

பொதுவாக மாரியம்மன் தர்மத்தினை அனைத்துத்தரப்பு மக்களிடமும் நிலை நாட்டுபவள். எனவே தர்ம கர்மாதி யோகத்தை ஆதரிப்பவள் மாரியம்மன். மாரியம்மனின் பிரியமான ஆடை மஞசள் மற்றும் வேப்பிலையாடை ஆகும். மஞ்சள் என்பது குருவின் காரகம். வேப்பிலை என்பது சனியின் காரகம். இருவரின் இனைவு என்பது தர்மகர்மாதி யோகம் தானே. மஞ்சளும் வேப்பிலையுமே அனைத்து மருத்துவ முறையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்மை நோய்க்கான மருத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டும் ஒருவரின் அக அழுக்கையும் புற அழுக்கையும் நீக்கும் என்பது சத்தியம். 

காலபுருஷனின் தர்மஸ்தானத்தில் வக்கிரம் பெற்று நிற்கும் கர்ம ஸ்தானாதிபதி சனைச்சர பகவான் வக்கிர கதி  நீங்கும் வரை அம்மையின் வெம்மை அதிகமாகவே காணப்படும்.

தெய்வீக பரிகாரங்கள்

1. அம்மை நோய் கண்டவர்கள் காதில் கேட்கும்படி மாரியம்மன் தாலாட்டு எனும் பாடலை அவர்கள் காதில் கேட்கும்படியாக காலை மாலை படிப்பது.

2. சீதளம் என்கிற சொல்லுக்கு குளிர்ச்சி என்று பொருள். அப்படி தம் பக்தர்களின் மனத்தை ஏமாற்றம் துக்கம் தோல்வி போன்றவற்றால் ஏற்படும் வெம்மை தாக்காமலும் வெப்பு நோய்களான அம்மை கட்டிகள் போன்றவை உடலைத் தாக்காமலும் காப்பாற்றுபவள் சீதளா தேவி. மாரியம்மனை ஸீதளாதேவி என அழைக்கப்படுவாள். எனவே ஸீதளாஷ்டகம் எனும் ஸ்லோகத்தை காலை மாலை பக்தியுடன் அம்மைநோய் கண்டவர்கள் காதில் விழும்படி படிப்பது.

3. அம்மை நோய் கண்டவர்கள் வீட்டு உறுப்பினர்கள் தீட்டு சம்மந்த காரியங்களில் மூன்று நீர்விடும் வரை கலந்துகொள்ளக் கூடாது.

4. அம்மனே வீட்டில் இருப்பதாக நம்பப்படுவதால் எந்த கோயிலுக்கும் செல்லக்கூடாது. ஆனால் சமயபுரம் மாரியம்மன், திருமயிலை முன்டககண்ணியம்மன், கௌமாரியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், படவேடு ரேணுகா பரமேஸ்வரி போன்ற கோயில்களுக்குச் சென்று தீர்த்தம், வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை வாங்கி வந்து அம்மை நோய் கண்டவர்களின் உடலில் பூசுவது நன்மை பயக்கும். இதற்கு விதிவிலக்கு உண்டு.

5. முத்து முத்தாக இருக்கும் முத்து மாரியம்மன் இறங்கினால் குளுமை தரும் கூழமுது படைப்பதாக மாரியம்மன் கோயில்களில் பிரார்த்தனை செய்து வர அம்மன் மனமிறங்கி அம்மை நோய் விரைவில் குணமாகும்.

6. சந்திரன் மற்றும் சுக்கிரனின் காரகம் பெற்ற இளநீர், நீர் மோர், பழச்சாறு போன்றவை அதிகமாகப் பருகிவர உடலின் வெம்மை குறைந்து விரைவில் நோய் குணமாகும்.

7. மதுரை மீனாட்சி அம்மன் சன்னிதி எதிரில் பொற்றாமரை குளத்தின் அருகில் 'மடப்பள்ளி சாம்பல்' வைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டிற்கு சிறிது எடுத்துச்சென்று 'மந்திரமாவது நீறு' என்னும் இத்தல சம்பந்தரின் பதிகம் பாடி இந்த மடப்பள்ளி சாம்பலை உடலில் தொடர்ந்து பூசிவந்தால் வெப்பு நோய்கள், அம்மை நோய்கள், பிற உடல் உபாதைகள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com