ஜோதிட ரீதியாக நவக்கிரகத்துக்கு உகந்த தாவரங்களும், உணவுப் பொருட்களும்!

ஜோதிட ரீதியாக நவக்கிரகங்களுக்கான தாவரங்களும், பலம் பெற உதவும் உணவுப் பொருட்களைப்  பற்றியும் விரிவாகப் பார்ப்போம். 
ஜோதிட ரீதியாக நவக்கிரகத்துக்கு உகந்த தாவரங்களும், உணவுப் பொருட்களும்!

ஜோதிட ரீதியாக நவக்கிரகங்களுக்கான தாவரங்களும், பலம் பெற உதவும் உணவுப் பொருட்களைப்  பற்றியும் விரிவாகப் பார்ப்போம். 

சூரியனுக்குரிய தோட்ட மருத்துவம் 

சூரியன் பலம் பெற உதவும் உணவுகள்: செம்பருத்தி, சோளம், சிவப்பு அரிசி, கோதுமை, குங்கும பூ, மிளகு, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு வகை உணவுகள் சரியான முறையில்  உட்கொண்டால் சூரியன் பலம் பெரும். இது உடம்பில் சூட்டினால் ஏற்படும் நோய்கள் மற்றும் மன அழுத்தத்தை சரிப்படுத்தும். சூரியனின் வெப்பத்தால் உடலில் சூடு  அதிகரித்து பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான், பித்தம், வாதம், மூளை இரத்த ஓட்ட பாதிப்பு, பூச்சுக்கடி, கட்டி, குதிகால் வலி, ஆஸ்துமா, சளி என்று கூறும்  அனைத்து பாதிப்பும் சூரியனுக்குரிய தாவரத்தால் குறைக்கப்படும் என்று மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. மருத்துவ ஜோதிடத்தில் இதைப் பற்றிய ஆராய்ச்சி தொடருகிறது.
சூரியனுக்கு உரியத் தாவரங்களை அதாவது எருக்கு (வெள்ளெருக்கு), ருத்திராட்ச மரம், செம்பருத்தி செடி, குளம் இருத்தல் செந்தாமரை வளர்த்து அல்லது கோவிலுக்கு  தாவரங்களைத் தானமாகவோ, காய், கனி, மலர்களை கடவுளின் பாதங்களுக்குச் சமர்ப்பிக்கலாம். இதனால் கிரகப் பாதிப்பு குறையும்.
       
வெள்ளெருக்கு பற்றிய சிறு தொகுப்பு: "வெள்ளெருக்கு பூக்குமே வேதாளம் பாயுமே" என்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம். சூரிய ஒளியிலுள்ள தண்ணீரைக் கிரகித்து வளரும்  தன்மை சூரியனுக்குரிய செடியான எருக்கு செடிக்கு உண்டு. இது பலவகையான எருக்குகள் இருக்கின்றன. ஏழைக்கு வைத்தியம் எருக்கு என்பார்கள். இதை வீட்டில் வளர்க்கக்  கூடாது. சூரியன் கேது பாதிப்பு உள்ள ஜாதகருக்கு இது சரியான பரிகாரமாகும். ஜாதகருக்கு உரியக் கிழமைகளில் வெள்ளெருக்கு விநாயகருக்கு, அரைத்த மஞ்சள்  கலவையைத் தடவவும், பின்பு பூஜை, தூப தீப, நைவேத்தியம் செய்து வரவும். பிரதி வாரம் இதனைத் தொடர்ந்து செய்துவரக் கிரக பாதிப்பு குறையும். எருக்கன் இலையில்  உள்ள கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும். ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகளும் எருக்கன் செடியை ஆக்கிரமிக்கவும்  வாய்ப்பும் இருக்கிறது.

ருத்திராட்சம் பற்றிய சிறு தொகுப்பு: சுட்டெரிக்கும் ருத்ரனை குறிக்கும் ருத்திராட்சம் சூரியனுக்கு உரிய மரமாகத் திகழ்கிறது. பகவான் சிவனின் கண்ணீரே ருத்திராக்கத்தின்  தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. ருத்திராட்சம் அணிவதால் மன ஆற்றல் வலிமை பெரும் மற்றும் மனம் சார்ந்த நிலைக்கு செயல்படும். இதை வீட்டில்  வளர்க்கக்கூடாது என்று அகத்தியர் நூலில் கூறப்படுகிறது.

சூரிய பலம் பெறச் செம்பருத்தி, செந்தாமரை கடவுளிடம் சமர்ப்பித்து மந்திரங்கள் உச்சரித்து வணங்கலாம். கிழக்கு திசையில் அமர்ந்து இந்த சூரிய மந்திரம் ஜபித்து  அவருக்குரிய மலர்களால் பூஜிக்க வேண்டும்.

ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹ!

பாஸ்கராய நமஹ! தினகராய நமஹ!

திரைலோக்யாய நமஹ! சூடாமணியே நமஹ!

திவாகராய நமஹ! லோகமித்ராய நமஹ!

ஜோதி ஸ்ருபாய நமஹ! அருணாய நமஹ!

வரத ஹஸ்தாய நமஹ! ரவியே நமஹ!

சூர்யநாராயண சுவமியே நமஹ!

சந்திரனுக்குரிய தோட்ட மருத்துவம்

சந்திரன் பலம் பெற உதவும் உணவுகள்: ஜாதகத்தில் சந்திரன் ஆதிக்கம் ஏற்ற தாழ்வுடன் இருக்கும்பொழுது நீர்க்கட்டி, நாள்பட்ட புண்கள், கட்டிகள், சிறுநீர் சம்பந்தமான  நோய், தாய்மார்கள் பால் சுரப்பை நிறுத்த மற்றும் தோல் நோய், வாயுத்தொல்லை, பித்தம், ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை, வைரஸ் காய்ச்சலால், தொழுநோய்  போன்றவற்றை ஏற்படும். சந்திரனுக்குரிய உணவுகளான நீர், நெல், பச்சரிசி, பால், தயிர், வேப்ப மருந்து உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் இந்த நோய்களின்  தாக்கம் குறையும். 

சந்திரனுக்கு உரிய தாவரங்களான பலாசம் மரம் என்னும் முருக்க மரம் (இரவில் ஒளிரும் பூ), வெள்ளை அரளி மற்றும் சந்திரன் என்பது ஜாதகத்தில் பார்வதியை குறிக்கும்  அவளுக்கு உகந்த மரம் வேப்ப மரம். இவைகளை தோட்டத்தில் வளர்த்தோ கோவிலுக்கு தனமாகவோ கொடுக்கலாம்.
     
பலாச மரம் பற்றிய சிறு தொகுப்பு: சோழர் கோயில்களில் இவற்றின் மருத்துவப் பயன்கள் கருதியே தல மரங்களாகக் கருதுகின்றனர். இந்து, புத்த, சமண மதத்தினரும் பலாச  மரத்தைப் புனித மரமாகக் கருதினர். இதன் புனிதத்தன்மை காரணமாக இந்த மரம் வனங்களில் வளர்க்கப்பட்டதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. மாகாளிக்கு உயிர்ப்பலி  கொடுப்பதற்குப் பதிலாக மத்தியப் பிரதேசப் பகுதிகளில் ரத்தச் சிவப்பான பலாச மலர்கள் பலிப் பொருளாகப் படைக்கப்படுகின்றன. இரவில் ஒளிரும் பிரகாச சந்திரன்  மகத்துவம் கொண்ட இந்த பலாச மரம் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் முக்கியத்துவம் பெற்ற பலாசம் பிரம்மாவின் மரம் (பிரம்ம தரு) என்று கருதப்படுகிறது. இறப்புச்  சடங்குகளிலும் பலாசம் பயன்படுத்தப்படுகிறது. குழந்தை இல்லாத தமிழகப் பெண்கள் பலாச மரத்தை ஒரு மண்டலம் சுற்றிவந்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்ற  நம்பிக்கை. இந்த மரம் திருமணத்தின்போது திருமண அறைகள், மேடை போடவும் மற்றும் அதன் மலர்கள் அலங்காரத்துக்கு பயன்படுத்துவது நல்லது.

சஞ்சீவி மரமாக வேம்பு பற்றிய சிறு தொகுப்பு: சந்திர கிரகம் என்பது ஜோதிடத்தில் பார்வதியை குறிக்கும் அவளுக்கு உகந்த மரம் வேம்பு. வேப்ப மரத்திலிருந்து வீசும்  காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் கேட்ட நீர் மற்றும் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தியை உடையது. வேப்பமர  பகுதிகளிலிருந்தால் மனோகாரகன் சந்திரன் நிலையான மன இறுக்கம் குறையும், உடல் உபாதைகளும் நீங்கும், கண்களுக்குக் குளிர்ச்சி உண்டாகும். சந்திரனுக்கு உரிய  நோயைக் கட்டுப்படுத்த வேப்ப இலை, பூ. காய், பழம், கொட்டை, பட்டை, எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து மருந்தாகவும் மற்றும் தைலங்களாகவும்  கொடுத்துக் குணப்படுத்துவர். காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்குக் கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன. பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச  நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள். வேப்பெண்ணெய்க்கு விந்திலுள்ள உயிர் அணுக்களைச் செயலிழக்கச் செய்யும் ஆற்றல்  உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது. இதன் பயன்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

வெள்ளை அரளி பற்றிய சிறு தொகுப்பு: அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. இதை உட்கொள்ளக் கூடாது. இவற்றைக் கைதேர்ந்த  மருத்துவர்கள்தான் களிம்பாக உருவாக்குவார்கள். இதன் களிம்பு பால்வினை நோய், குஷ்டம், தொழுநோய், நாட்பட்ட புண், ரத்தம் கட்டி குறைப்பானாகப் பயன்படுகிறது.  அரளியில் எடுக்கப்பட்டுச் செயல்படும் வேதிப்பொருட்களின் கராபின், நீரியோடெரின், நீரியோமோசைடுகள், நீரியாசைடு, புளூமெரிசின், கிளைகோசைடு, ஆகியவை  முக்கியமானவை. சந்திரனுக்கு, அம்பிகைக்கு உரிய மலராகக் கருதப்படுகிறது.

வடமேற்கு திசையில் அமர்ந்து கீழே உள்ள சந்திர சுலோகம் ஜபித்து வெள்ளை அரளி மலர்களால் திங்கட் கிழமைகளில் சந்திரனை அல்லது துர்க்கையை வணங்க  வேண்டும்.

"ஓம் பத்வ த்வஜாய வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி

தன்னோ ஸோம பிரசோதயாத்"

செவ்வாய்க்குரிய தோட்ட மருத்துவம்

செவ்வாய் பலம் பெற உதவும் உணவுகள்: மாதுளை, பேரீச்சை, செவ்வாழை பழம், துவரை, பீட்ரூட், கேரட், புதினா, அனைத்து கீரை வகைகள், முக்கியமாக அகத்திக் கீரை,  குதிரை வாலி தானியம், இந்த உணவுகளை உண்ணச் செவ்வாய் என்னும் கிரகம் பலம் குறைவாக இருந்தாலும் பலம் கூடிவிடும். இதனால் எந்தெந்த செடிகள்  வளர்க்கமுடியுமோ வளர்க்கலாம்.
செவ்வாய்க்குரிய தாவரங்களான கருங்காலி (எபனி) மரம், செண்பக மரம், வில்வ மரம் போன்றவற்றைக் கோவிலுக்குத் தானமாகவோ, வளர்க்கவோ செய்யலாம்.  செவ்வாய் பலம் இல்லாதவர்கள் இந்த மரத்தில் அடியிலிருந்து தியானம் செய்யலாம்.
     
கருங்காலி பற்றிய சிறு தொகுப்பு: நம் முன்னோர்கள் கோவில்களில் கருங்காலி தல விருட்சமாக வளர்த்து வணங்கினர். ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடையக் கருங்காலியைத் தொழுவோம்..! இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது. கருங்காலி மரம் கருப்பாக, இரும்பை ஒத்த உறுதியுடன்  கூடியது. வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொண்டு வளரும். செவ்வாயின் முழு காரகத்துவம் கொண்டது இந்த மரம். கருங்காலி மரத்திலிருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது.  இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள். சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களைச் செய்யப்படுகிறது. இது வாயில் வைக்கும்  வைக்கும்பொழுது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. கருங்காலி பட்டையில் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும்  அனைத்து வலிகளும் போகும் தன்மைகொண்டது. பற்களுக்கு வலுவூட்டும், கசப்பு துவர்ப்பு கலந்த சுவை கொண்டது. இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப்பயன்  கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் குருதிக்குறைவால் உருவாகும் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை  நீங்கும்.

வில்வ மரம் பற்றிய சிறு தொகுப்பு: இதில் மகாலக்ஷ்மி குடிகொள்வதாகக் கூறுகிறார்கள். இதை வீட்டில் வளர்க்க முடியாது. இது பிறப்பு, இறப்பு, மாதவிலக்கு தீட்டுக்கள்  ஆகாது . இதன் வேர் வாசனைக்குப் பாம்புகள் வரும். இதை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று அகத்தியர் நூலில் கூறப்படுகிறது. செவ்வாய்க்குரிய மரமாக இருக்கிறது.  சிவனுக்கு உகந்தது வில்வத்தில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்கள் உள்ளன. இதில் மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப்  பயன்படுத்துகிறோம். வில்வத்துக்குத் தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தின் மீது தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். 

செண்பக பற்றிய சிறு தொகுப்பு: இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்று பிரம்மா கூறியிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.  இதிலிருந்து பன்னீர் மற்றும் பலவிதமான வாசனைத் திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றன. இதன் பூக்கள், இலைகள் உடலில் ஏற்பாடும் சூட்டைத் தணிக்கிறது, பசியைத்  தூண்டுகிறது. தலை நீர்க்கோவை, வயிற்று உப்புசத்திற்கும், கண் நோய், தொண்டை வீக்கங்களைக் குணப்படுத்தும். இதன் மரப்பட்டைகள் சளித்தொல்லைகளுக்கு நல்ல  நிவாரணியாகச் செயல்படுகின்றன. இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யைக் கொண்டு வயிற்றுவலி, பாதவெடிப்புகள், அஜீரணம், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள்  குணமாகின்றன.

தெற்கு திசையில் அமர்ந்து செண்பக மலர்கள் பூஜித்து இந்த மந்திரம் சொல்லவேண்டும்.

"ஓம் பூமி புத்ராய வித்மஹே

சக்தி ஹஸ்தாய தீமஹி

தன்னோ பௌம பிரசோதயாத்"

புதனுக்குரிய தோட்ட மருத்துவம்

புதன் பலம் பெற உதவும் தானியங்கள் மற்றும் தாவர உணவுகள்: துளசி, பச்சை நிற காய்கறிகள், பச்சைப் பயறு, சில சுண்டல் வகைகள், கற்றாழை, வெங்காயம், போன்ற  உணவுகள் நம் உடலில் புதன் கிரகத்தின் ஆதிக்கத்தை வலுவடையச் செய்யும். புதனுக்குரிய தாவரங்களான நாயுருவி, ஆலமரம், வெண்காந்தள், பல்வேறு துளசிகள் மற்றும் பச்சைக் காய்கறிகள் வளர்த்துத் தானமாகவோ கோவிலுக்குக் கொடுக்கலாம். புதன் நீசமாக உள்ளவர்கள் இந்த மரங்களுக்கு நீர் ஊற்றி தியானம் செய்யலாம்.
     
நாயுருவி பற்றிய சிறு தொகுப்பு: இவற்றைப் பூஜை ஹோமம் வளர்க்க நாயுருவியும் பயன்படுத்துவார்கள். இது ஒரு தேவ மூலிகையாகக் கருதப்படுகிறது. சிலர் இதை  வசியத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். புதனுக்குரிய காரத்தன்மை கொண்ட தோல், சரும வியாதி, நரம்புத் தளர்ச்சி குணப்படுத்த நாயுருவி செடி பயன்படுகிறது. இது தவிர  வயிற்று அழுக்கினை வெளியேற்ற, கருப்பையைச் சுருக்கும் குறைக்க, கருவைக் கலைக்கும், முக வசீகரத்தை அதிகமாக்கும், சிறுநீரைப் பெருக்கச் செய்யும், ஆரோக்கியம்  சீராக்க, காதில் சீழ் வடிதல் தடுக்கும். வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும்.

ஆலமரம் பற்றிய சிறு தொகுப்பு: ஆலம் ஒரு தெய்வாம்சம் மரம். ஆலமரத்தடியில் அமர்ந்துதான் அஸ்வத்தாமா பாண்டவர்களைக் கொல்ல சதி செய்தான் என்று  மகாபாரதம் கூறும். இராமபிரான் சீதையுடன் அயோத்தியை விட்டு காடு செல்லும் வழியில் திரிவேணியில் ஒரு ஆலமரத்தைக் கண்டு வணங்கிச் சென்றதாக இராமாயணத்தில்  கூறப்படுகிறது. ஆலா மரத்தின் காற்றைச் சுவாசித்தாலே நினைவாற்றல் பெருகும், பதற்றம் விலகித் தெளிவு ஏற்படும், உடம்பு சூட்டை குறைக்கும். பெண்களின் சீமந்தத்தில்  ஆலம் பாலை கர்ப்பிணிகளின் மூக்கில் பிழிந்தோ வாசனை காட்டியோ சடங்கு செய்வார்கள். அதனால் தாயின் வயிற்றிலுள்ள குழந்தைக்கு நலம் ஏற்படும்.

ஆலும் வேலும்  பல்லுக்குறுதி என்பது உடலியல் பழமொழி. ஆலம் குச்சியால் பல் விளக்கினால் பற்கள் உறுதியாகும். நல்ல ஆலப் பாலையும் நெய்யையும் கலந்து உண்டால் ஆயுள் நீடிக்கும்.  இது சித்தர் கூற்று. ஆலமரத்தின் இலை, பால், பழம், மரப்பட்டை, விழுது, வேர் என முழு மரமும் மருத்துவ பயன் உடையது. ஆலமர பட்டை கொண்டு இந்துக்கள் பூஜை  ஹோமம் வளர்க்க முக்கியமாக ஆலங்குச்சினால் யாகம் செய்தால் எப்பேர்ப்பட்ட வியாதியையும் போக்கி நீண்ட ஆயுளைத் தரும் என்று சிவாகமம் சொல்கிறது. ஆலமரத்தை அடுப்பெரிக்கவோ, வீடு கட்டவோ பயன்படுத்துதல் கூடாது. ஆலமரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது முக்கியமாகக் கோவிலில் தெய்வமாக வழிபடுவர். சிவபெருமான் கல்லால  மரத்தடியில் தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் அமர்ந்து நால்வருக்கு ஞான்நெறி உபதேசிக்கிறார்.

"கோலமாய் கொழுந்தீன்று பவளம் திறண்ட்தோர் 

ஆலநிழல் உளானும் ஐயாறு உடைய ஐயனே"

-என்று சம்பந்தர் கூறுகிறார். 

ஆலமரத்தில் சிவனாகவும் அவர் திருவடி போல பொன்மையும், ஒளியும், அழகும் உடைய கோலமாய் கொழுந்து தோன்றி பவளம் போன்ற உடையதாய் இருக்கிறது. திரு மெய்யம், திருவில்லிப்புத்தூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு, திருஆலந்துறை, இராமநாதபுரம் பட்டமங்கலம் ஸ்ரீ அட்டமா சித்தி கோவில், திருப்பழுவூர் போன்ற  திருக்கோயில்களில் ஆலமரம் ஸ்தல விருக்ஷமாகும். காசி, கயா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் ஆல மரத்தடியில் பித்ருகடன் செய்தால் நற்கதி கிட்டும் என்ற  நம்பிக்கை நம் நாட்டில் உண்டு. புதன் ஸ்தலத்தில் விஷ்ணு பாதம் உள்ளதுபோல் திருவெண்காடு திருத்தலத்தில் உள்ள வடவாலமரத்தின் அடியில் ருத்ரபாதம் உள்ளது.  இங்கும் பிதுர் கடன் விஷேசமாகும்.

வடக்கு திசையில் அமர்ந்து நாயுருவி, வெண்காந்தள், துளசியால் பூஜித்து இந்த மந்திரம் சொல்லவேண்டும்.

"ஓம் கஜத்வஜாய வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தன்னோ புத பிரசோதயாத்"

குரு பகவானுக்குரிய தோட்ட மருத்துவம்

குருபலம் பெற உதவும் தானியங்கள்: குருவாகப் பாவிக்கப்படும் உயர்வு பெற்ற மஞ்சள், கொண்டைக் கடலை, இனிப்பான பழங்களான மஞ்சள் நிற வாழைப்பழம், பப்பாளி,  அன்னாசிப் பழம், உலர்ந்த திராட்சை, முழு எலுமிச்சை முதலியவற்றை நம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் குரு பலம் கூடும். 

குருக்குரிய தாவரங்களான: இந்துக்களுக்கான முக்கியமான மரங்கள் அரசு, சந்தன மரம், முல்லை பூ ஆகும். இதன் பெருமைகளைச் சொல்லிமாளாத ஒன்று.
   
அரச மரம் பற்றிய சிறு தொகுப்பு: பகவத்கீதையில் "மரங்களில் நான் அரசமரமாக இருப்பேன்" என்று கண்ணன் கூறுவார். முப்பெரும் மும்மூர்த்தி குடிகொள்ளும்  ராஜமரமாக இந்த அரச மரம் அமையப்பெற்றுள்ளது. இதன் மேற்பகுதி ஈஸ்வரனாகவும், இதன் நடுப்பகுதி திருமாலாகவும் இதற்குக் கீழ் உள்ள வேர்ப்பகுதி பிரம்மாவாகவும்  கூறப்படுகிறது. 

குரு ஒரு புத்திரக்காரகன்: "அரச மரத்தைச் சுற்றிப்பார் அடிவயிற்றைத் தொட்டுப்பார்" என்னும் முன்னோர் வாக்கு. அதன்படி புத்திர தோஷம் உள்ளவர்கள், மற்றும் கருப்பை பிரச்னை உள்ள பெண்கள் - ஈர்ப்புடவையோடு அரசமரத்தைச் சுற்றிவரக் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது ஆனிதனமான கூற்று. அரசமரத்தின் ஒரு வகை அமிலம் சுரக்கும் அது கர்ப்பப்பையில் உள்ள அனைத்து பிரச்னைகளும் சரிபண்ணும் தன்மை இதற்கு உண்டு. ஜாதகருக்கு அதற்கேற்ப தசாபுத்திகளுடன் அமையப்பெற்றால் கட்டாயம் குழந்தைப்பேறு நடைபெறும். அரச மரம் அதனால் தான் புத்திரக்காரகனான குருவிற்கு உரிய மரமாகக் கூறுகின்றனர்.

குரு என்பவர் ஒரு ஞானி அதனால்தான் என்னவோ புத்தருக்கு ஞானம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஞானவிநாயகருக்கு பிடித்த பகுதியாக இந்த அரச மரம் விளங்குகிறது. மனசலனம் உள்ளபோது தெளிவு பெறவேண்டும் என்றால் இந்த அரச மரத்தின் அடியில் தியானம் பெறவேண்டும். நீங்களே இதைச் சோதித்து பாருங்கள். இதன் அனைத்து  பாகங்களும் மருத்துவ மகத்துவம் தனிக்கட்டுரையாக விளக்குகிறேன்.  இந்துக்களின் பூஜை ஹோமம் வளர்க்க அரச கட்டை பயன்படுத்துவார்கள்.

சந்தனம் மரம் பற்றிய சிறு தொகுப்பு: கேரளாவில் அணைத்து கோவில்களிலும் சந்தனத்தைப் பிரசாதமாகக் கொடுப்பார்கள். சந்தனமரம் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என  மூன்று வகைகள் உள்ளன. இவற்றுள் செஞ்சந்தனமே அதிக மருத்துவக் குணமிக்கதாகும். கட்டையும் அதிலிருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய்யும் மருத்துவப்  பயனுடையவை. சந்தன மரத்தில் அகர் என்ற அமிலம் சுரக்கும். சந்தனம் கட்டை இலேசான துவர்ப்புச் சுவையையும், குளிர்ச்சித் தன்மையையும் கொண்டவை. சந்தனம்  உடலைத் தேற்றும்; சிறுநீர்ப் பெருக்கும்,  வியர்வை உண்டாக்கும், குளிர்ச்சி உண்டாக்கும். அதனால்தான் அக்காலங்களில் உடம்பில் சந்தனக்கட்டை இழைத்து உடம்பில்  தடவிக்கொள்வர். இந்த உயர்தர மரம். சருமத்திற்கு மிருதுத் தன்மை அளிக்கக்கூடியது. காய்ச்சலையும், ஒற்றைத் தலைவலியையும் போக்கும் குணமும் உண்டு.  திருவாஞ்சியம், திருவழுந்தூர் (தேரழுந்தூர்) ஆகிய தலங்களில் தலமரமாக விளங்குவது சந்தன மரமாகும்.
    
வட கிழக்கு திசையில் அமர்ந்து முல்லை மலர் கொண்டு குருவிற்கு சந்தனக் காப்பு செலுத்து இந்த மந்திரம் சொல்லவேண்டும்

"ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்தோ குரு பிரசோதயாத"

சுக்கிரனின் தோட்ட மருத்துவம்

சுக்கிர பலம் பெற உதவும் தானியங்கள்: ஜாதகத்தில் சுக்கிர தோஷம் உள்ள அனைவரும் சுக்கிரன் பலம் கொண்ட காய்களின் பருப்புகள் மற்றும் விதைகளை  உட்கொள்ளவேண்டும். முக்கியமாக மொச்சை, சூரிய காந்தி விதைகள், பாதம் பருப்பு, சிவப்புபூசணி விதைகள், சுரைக்காய் விதைகள், நிலக்கடலை, பசும்பால்,தேங்காய்ப் பால்  போன்ற உணவுகள் எல்லாம் சுக்கிர சுக்கிலத்தின் தரத்தை உயர்த்தும். சுக்கிரனுக்கு உரிய தாவரங்களை அத்தி மரம், செந்தாமரை மற்றும் மொச்சை இவை ஒன்றோடு ஒன்று சுக்கிரன் காரகத்துவம் கொண்டது.

அத்தி மர பற்றிய சிறு தொகுப்பு: அத்தி மரம் நட்டு வைத்துப் பராமரித்து வர நல்ல பலன்கள் உண்டாகும். சுக்ராச்சாரி மறைந்து நின்று தாக்கக்கூடியவர். அதேபோல  இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே.  அதனால்தான் சுக்கிரனுடைய அம்சமாக இந்த அத்தி மரத்தை வணங்குகிறோம். அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம  அவதாரம் எடுத்து இரண்யகசிப்புவைக் கிழித்துக் கொன்று வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம். இந்துக்  கடவுளான தத்தாத்திரேயர் அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்துக்கள் இம்மரத்தை இன்றும் வணங்குகிறார்கள் அதையே கடவுளின் சிலைகளை வடிவமைக்கப்படுகிறது. முக்கியமாகக் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் கடைசி வரையில்  பிரியாமல் இருப்பதற்கும் வீட்டில் அருகிவரும் அத்தி மரம் தொடர்பாக அறியாது போகும் மருத்துவமும் சர்க்கரை வியாதிக்குச் சிறந்த மருந்து அத்திக்காய். மரத்தின் வேர்  பட்டை, இலை, காய், பழம் என அனைத்துமே மனிதன் நலமாக வாழ்வதற்குத் தேவையான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அத்தி இலை பித்த நோய்களைக் குணப்படுத்தும். இந்த இலைகளைத் தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் பித்த நோய் தொடர்பான அனைத்தும் குணமாகும். வாய்ப்புண், ஈறுகளில் சீழ் வடிதல், உடலில்  ரத்தம், வெளியேறுதல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

அத்தி மர சிலைகள்: உடுப்பி கிருஷ்ணன் சிலை, புதுவைசெங்கேணி அம்மன் சிலை, காஞ்சிபுரம் குளத்தில் எழுந்தருளியுள்ள வரதராஜப்பெருமாள் கோவில், திருப்பதி  குளத்திலும் அத்தி வரதர், கோழி குத்து வானமுட்டிப் பெருமாள் விஸ்வரூபமாக, மயிலாடுதுறை, திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் 2வது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது.

வெண் தாமரை பற்றிய சிறு தொகுப்பு: கோடைக்கால மலர் வெண் தாமரைப் பூக்கள், இலைகள், தண்டுகள், கிழங்குகள் ஆகியவை அற்புதமான மருத்துவ குணங்கள்  கொண்டவை. இந்த தாமரை அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துகிறது. நரம்பு பலம் பெரும். உள் உறுப்புகள் பலம் பெரும், இதயத்துக்கு மருந்தாக, சிறுநீரக கோளாற்றைச்  சரிசெய்கிறது, வயிற்றுப் புண்களை ஆற்றும், வயிற்றுப்போக்கைச் சரிசெய்கிறது. சளியைக் கரைத்து நுரையீரலை சீர்படுத்துகிறது. உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  தலைப்பாரம் நீங்கும் காய்ச்சலைத் தணிக்கும் தன்மை உடையது. எப்படி உண்ணவேண்டும் என்பது ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

தென்கிழக்கு திசையில் அமர்ந்து அல்லது அத்தி மர அடியில் அமர்ந்து இந்த மந்திரம் சொல்லவேண்டும். அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. வெண் தாமரைப்  பூக்களால் அர்ச்சனை செய்யவேண்டும்

"ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

தனுர் ஹஸ்தாய தீமஹி

தன்னோ சுக்ர பிரசோதயாத்"

சனீஸ்வரனின் தோட்ட மருத்துவம்

சனி பலம் பெற உதவும் உணவுகள்: ஜாதகத்தில் சனி தோஷம் உள்ள அனைவரும் சனி பலம் பெற இந்த வகை உணவுகள் உட்கொள்ள வேண்டும். அவை கிழங்கு  வகைகள், எள்ளு, கருப்பட்டி, பனைமர பதநீர், நொங்கு உணவுகளைச் சாப்பிட்டுவர சனி கிரகத்திடம் இருந்து தாக்கத்தினை குறைத்து அந்த கிரகத்தின் பலத்தினை பெற  முடியும். சனி பலம் பெற்ற தாவரங்கள் - கருங்குவளை மற்றும் வன்னி மரம் சனி தோஷம் நீக்கும் மரம். இதுவும் அதிக மருத்துவ குணம் கொண்டது.
        
வன்னி பற்றிய தகவல்: வன்னிமரம் சிவபெருமானுக்கும் சனி பகவானுக்கும் உரிய மரம். வில்வம் இல்லாதபோது வன்னித் தழைகளாலும் சிவனை பூஜை செய்யலாம்.  வறட்சி தாங்கி வளரும் இம்மரம். வன்னிப் பழத்தைச் சதையுடனும் விதையுடனும் பாலை நில மக்கள் விரும்பி உண்பர். குறிப்பாக, ராஜஸ்தான் (மார்வாடி) மக்களுக்கு  வன்னி மரம் அவர்களின் உயிர் மரம்.

பஞ்ச காலத்தில் வாழ்வு தரும் வன்னிப் பழங்கள் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் புரதச் சக்தி தரும். கால்நடைகளுக்குத் தீவனம்.  ஆகவே வன்னியை உயிர் வேலியாக விவசாயிகள் வைத்து வளம் பெறலாம். வன்னி மரத்தின் எல்லாப் பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது முக்கியமாகச் சொறி,  சிரங்கு, கபம், பித்தம் எல்லாம் தணியும். வெள்ளைப்படுவதும் நீங்கும், தொண்டைப்புண்ணுக்கும், வாதம் நீங்கும் மற்றும் கருச்சிதைவு ஏற்படாது. உள்ளுக்குச் சாப்பிட்டால்  நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

"வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர் தூவி

நம்பாவென்ன நல்கும் பெருமான் உறைகோயில்

கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்

மொய்ம்பார் சோவை வண்பொடும் மூதுகுன்றே"

- திருஞான சம்பந்தர்

முதுகுன்றம் என்பது விருத்தாசலம். சம்பந்தர் சுவாமிகளால் பாடல் பெற்ற இந்த சிவ தலத்தில் வன்னியே தல மரம். திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி  மற்றும் பல சிவன் கோவில்களில் இதுவே தலமரம்.
மேற்கு திசையில் அமர்ந்து கருங்குவளை மலர்களை, வன்னி இதழ்களில் அர்ச்சனை செய்து இந்த மந்திரம் சொல்லவேண்டும்

"ஓம் காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்த பிரசோதயாத்"

ராகுவின் தோட்ட மருத்துவம்

ராகு பலம் பெற உதவும் உணவுகள்: ராகு உணவு மூலம் கிடைக்கும் உடல் சக்தியை வெளியேற்ற முயற்சி செய்யும். உலகில் உள்ள அனைத்து கெட்ட உணவுகள் மற்றும்  கேடு விளைவிக்கும் உணவுகள், விஷத் தன்மை கொண்ட உணவுகள், என்னென்ன இருக்கிறதோ அத்தனையும் ராகு உணவு தான். நவநாகரீக உலகின் அதிபதி ராகு  ஆவார். பழமையை வெறுக்க வைப்பவர். மேற்கத்திய உணவு, அனைத்து பதப்படுத்திய பொருள்கள், பாக்கெட் பொருள்கள் ராகு ஆதிக்கம் பெற்றவர்கள் விரும்பி  சாப்பிடுவார்கள். இவற்றை சாப்பிடாமல் இருப்பது நன்று. ராகு தாக்கம் குறைவாக உள்ளவர்கள் கொள்ளு உட்கொள்ளலாம். ராகு பலம் பெற்ற தாவரங்கள் - மருத மரம், மந்தாரை ராகு தோஷம் நீக்கும் மரம். இதுவும் அதிக மருத்துவ குணம் கொண்டது.
  
மருத (அர்ஜுன) பற்றிய சிறு தொகுப்பு: மருத மரத்தில் டான்னிக் அமிலம், ஃபிளாவனாய்டுகளில் மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் கால்சியம் போன்ற  கனிமங்கள் அதிகமாக உள்ளன. அர்ஜூனா மரத்தின் மரப்பட்டையில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் முலிகைக்காக பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் இதய நோய்  வருவதையும் தடுக்கலாம். கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. மூன்று தலங்களில் மருத மரம் தல விருட்சமாக இருக்கிறது. மருத மரத்தின் தாவரவியல் பெயர்  டெர்மினாலியா அர்ஜுனா. 

தமிழ்நாட்டில் திருவிடைமருதூர், திரு இடையாறு ஆகிய இடங்களில் இதுதான் தல மரம். ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீசைலம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்திலும் மருதமரமே. ஸ்ரீசைலத்தில் உள்ள இறைவன் மல்லிகார்ஜுனன். இங்கு மல்லிகை, அர்ஜுன (மருது) இரண்டும் சேர்ந்து உள்ளன. இது சக்தியும் சிவனும் இணை பிரியாதவர்கள் என்பதைக் காட்டும் சின்னம். திருச்சி அருகே உள்ள சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் தலமரமாக விளங்குவது மருத மரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம் பற்றிய சிறு தொகுப்பு: இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம் பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி,  இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறு மரமாகிவிட்டது. திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும்,  சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.  ராகு தோஷம் நிவர்த்தி செய்யத் தென் மேற்கு திசையில் அமர்ந்து மந்தாரை மலர் கொண்டு அர்ச்சனை செய்து இந்த சுலோகத்தை ஜெபிக்கவேண்டும்.

"ஓம் நகத்வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தன்னோ ராஹூ பிரசோதயாத்"

கேதுவின் தோட்ட மருத்துவம்

கேது உணவின் மூலம் பெறப்பட்ட சக்தியை மருந்தாகச் செயல்படுத்தி உடலில் தேக்கி வைக்க முயற்சி செய்யும். நமது உடலுக்குள் ஒரு மருத்துவர் என்றால் அது கேது  பகவான் ஒருவரே ஆவார் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அருமருந்தே கேது பகவான். கேதுவின் தானியமான உளுந்து உடலை அதிக சக்திப்படுத்தும். 

கேது பலம் பெற்ற தாவரங்கள்: கடை நிலை ஞானத்தைக் குறிக்கும் தர்ப்பை, வைக்கோல் மற்றும் மாமரம், சிவப்பு அலறி. இவைகளும் கடவுளுக்கு உரிய யாகத்திற்கு  மற்றும் மருத்துவ குணம் கொண்ட கேதுவின் தாவர மரம். 

மாமரம் பற்றிய சிறு தொகுப்பு: மாவிலை தோரணம், மாம்பழ ருசி, மாமர நிழல் என அழகும் சுவையும் சுகமும் நிறைந்த பல அம்சங்களை மாமரம் நமக்கு  வழங்குவது. மற்றும் மாம்பிஞ்சும், மாவிலையும், மாம்பூவும் நமக்கு மருந்தாக உதவுகிறது. மாவிலை கொழுந்தை எடுத்து, காயவைத்து பொடிசெஞ்சு, 3 விரல் அளவு  உணவுக்கு முன்னால் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். 

சிவப்பு அலரி பற்றிய சிறு தொகுப்பு: திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக அலரி உள்ளது. கரவீரம் என்பது அலரியின் மற்றொரு பெயராம்.  இது நீண்ட கூரிய இலைகளை உடைய சிறுசெடியாகும். எல்லாப் பருவங்களிலும் பூக்கும் தன்மை கொண்டது. பாடல் பெற்ற தலமான திருநெடுங்களம் என்னும் தலத்தில்  உள்ள ஒரே அலரிச் செடியில் மூன்று நிறப் பூக்கள் காணப்படுகின்றன. பூ, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவக் குணமுடையவை. எனினும் இதை நச்சு மூலிகைகளில்  ஒன்றாகக் கருதப்படுவதால் அகமருந்தாக பயன்படுத்துவதில்லை. இதில் மஞ்சள் அலரி கடும் நஞ்சாகக் கருதப்படுகிறது. வட கிழக்கு தெற்கு திசையில் அமர்ந்து சிவப்பு அலரி கொண்டு பூஜித்து இந்த சுலோகம் சொல்லவேண்டும். 

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே 

சூல ஹஸ்தாய தீமஹி

தன்னோ கேதுவே பிரசோதயாத்"

முக்கிய குறிப்பு:

ஒன்பது கிரகங்களைப் படைத்த முப்பெரும் தேவர் தேவி வாசம் பெற்ற தாவர மூலிகை துளசி, வெற்றிலை, மாதுளை, மருதாணி, வேம்பு மற்றும் அனைத்து உணவு  உட்கொள்ளும் அனைத்து செடிகளை வளர்த்தல் தோஷம் குறையும். இங்குக் குறிப்பிட்ட அனைத்து கிரகங்களுக்குரிய தாவரங்களும் உடலுக்கு ஏற்ப விகிதாச்சாரம் மாறுபடும் அதனைச் சரியான சித்த மருத்துவ ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும்.

இதில் குறிப்பிட்ட அனைத்து மரம், தானியம், செடி அனைத்தும் உங்கள் இடத்துக்கு ஏற்ப உங்களால் முடிந்தவற்றை மட்டும் வளர்க்க வேண்டும். எல்லா மரங்களும் அவரவருக்கு ஏற்ற இடங்களில் வளர்க்க இயலாது. அதனால் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ப சரியான மரங்களைக் கோவில்களில் நட உதவ வேண்டும்.

- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி

தொலைபேசி : 8939115647
மின் அஞ்சல் : vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com