Enable Javscript for better performance
ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் தரும் மண் பானை குடிநீர் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் தரும் மண் பானை குடிநீர் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

  By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்  |   Published On : 27th April 2019 11:33 AM  |   Last Updated : 27th April 2019 11:33 AM  |  அ+அ அ-  |  

  mud_pots2

   

  தமிழ் நாட்டில் கோடை வெயில் கொளுத்துகிறது. அதிலும் இன்னும் அக்னி நக்ஷத்திரம் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே கோடையும் அதிரடியாகத் தொடங்கி இப்போதே வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது. போதிய மழை இல்லாமல், வெயில் தலைகாட்ட முடியாத அளவுக்கு கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த விகாரி வருஷத்தின் ராஜாவாக சனைச்சர பகவானும் மந்திரியாக சூரியனும் பதவியேற்ற நிலையில் வெயிலின் நிலை எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். 

  எல்லா இடங்களிலும் வறட்சி மிகுந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டோடு கோடைக்கால நோய்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளும், வயதானவர்களும், நோயாளிகளும் இப்போதே வெயிலின் கொடுமையால் வதங்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் இந்த கோடை வெயில் பாதிக்காத அளவிற்கு எல்லோருமே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

  கோடையில் கொளுத்தும் வெயிலில் பத்தடி நடந்தாலே வியர்த்து விருவிருத்துவிடுகிறது. அதிலும் அக்னி நக்ஷத்திரம் ஆரம்பிக்க சில நாட்களே உள்ள நிலையில் சூரியன் உச்ச ராசியில் நின்று சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்றோடு தகிக்கிறது. வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தைத் தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் எனப் பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை. அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.

  மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும். கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண் பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்!

  பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்குக்கூடத் தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. இன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள். மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன.

  மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரைச் சுத்திகரிக்கும் கருவி

  மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி மண் பானை ஆகும்.

  பஞ்சீகரண தத்துவமும் மண் பானையும்

  "அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் உள்ளது” எனும் வரிகளை ஜோதிடத்தில் பலர் கூற கேட்டிருப்போம். இவ்வாக்கியத்தின் பொருள் புற உலகில் எது இருக்கின்றதோ அது அக உலகமாகிய நமது உடலிலும் இருக்கின்றது என்பதே. அதாவது புற உலகம் என்பது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியதாகும்.  

  நாம் அறியக்கூடிய இந்த பௌதீக பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களின் வெவ்வேறு விகித கலவையால் உருவானது. உதாரணமாகக் கல் அல்லது மண் போன்ற ஜடப்பொருள்கள் பஞ்சபூதங்களின் கலவை. சூரியன் உட்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் பூமி போன்ற கிரகங்களும் இந்த பஞ்சபூதங்களின் கலவையாக அறிவியல் அறிஞர்களின் விளக்கத்தின்படி உருவாயின.

  மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள். இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.  

  ஐம்பூதங்களில், ஒவ்வொரு பூதமும் இருகூறாக ஆகி, அதில் ஒரு கூறை நிறுத்திக் கொண்டு, மற்றொரு கூறை நான்கு கூறுகள் ஆக்கி, அந்த நான்கும் மற்ற நான்கு பூதங்களுக்குக் கொடுத்தும் வாங்கியும் தம்மில் கலப்பது பஞ்சீகரணம் எனப்படும். ஆகாயம் துவாரமாகி மற்ற பூதங்களுக்கு இடம் கொடுக்கும் இயல்பானது. வாயு சலித்து மற்ற பூதங்களைத் திரட்டும் இயல்பானது. தேயு சுட்டு ஒன்றாக்கும் இயல்பானது. அப்பு குளிர்வித்து பதம் செய்யும் இயல்பானது. பிருதிவி கடினமாய் ஆக்கும் இயல்பானது.

  மண்பானை குடி நீரும் பஞ்சபூத தத்துவமும்

  பஞ்சபூத தத்துவத்தில் மண்பானை குடிநீர் நில மற்றும் நீர் தத்துவத்தைக் குறிக்கிறது. 

  பஞ்ச பூதம்

  மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள். இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.  

  மண்ணின் கூறுகள் 

  மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை. நீரின் கூறு நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர்.

  மண்பானையும் ஜோதிடமும்

  ஜோதிடத்தில் மண்ணை குறிக்கும் கிரகம் திருவாளர் பொதுஜனம் மற்றும் இந்த வருஷத்தின் ராஜா! அதாங்க! நம்ம சனைஸ்வரன் எனும் சனீஸ்வர பகவான் தாங்க!  மண்ணில் உதித்த உயிர்களெல்லாம் மண்ணோடு மண்ணாக மாறுவதைக் குறிக்கும் வகையில் ஆயுள் காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். நவக்கிரகங்கள் ஆயுள் காரகன் என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் சிறப்பாக அமைந்தால் ராஜ போக வாழ்வு உண்டாகும். 

  ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் மகரம் கும்பத்தில் அமைந்து ஆட்சி பெற்றோ, சனி துலாத்தில் அமைந்து உச்சம் பெற்று இருந்து சனி அமைந்த வீடு லக்கின கேந்திரமாகவே, சந்திர கேந்திரமாகவோ இருந்தால் சச யோகம் உண்டாகிறது. சச யோகம் ஆனது பஞ்சமாகப் புருஷ யோகத்தின் ஒரு பிரிவு ஆகும். ஆயுள் காரகனான சனியால் இந்த யோகம் உண்டாவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார்.

  மண்பானை குடிநீரை விரும்பி குடிப்பவர் யார்?

  1.மண்ணினை குறிக்கும் கிரகம் சனீஸ்வரன் ஆவார். சனைச்சர பகவானின் ஆட்சி வீடுகளான மகர, கும்ப ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் எளிமையானவர்கள் மற்றும் பழமையை மறக்காதவர்கள் ஆவர். கால புருஷனுக்கு பத்தாமிடமான மகரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் அடுத்தவர் உழைப்பை மதிப்பவர்கள். எனவே மண்பாண்டம் செய்பவர்களைப் போற்றும்வண்ணம் மகர ராசி லக்னகாரர்கள் மண்பானை குடிநீரை விரும்பி பருகுவார்கள். மேலும் சனைச்சரனின் ஆதிக்கம் நிறைந்த நக்ஷத்திரங்களான பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் மண்ணின் மகத்துவத்தைப் போற்றி மண் பாண்டங்களை உபயோகிப்பார்கள்.

  2. முக்கியமாகக் கும்ப ராசி/லக்ன காரர்கள் "குடத்தில் இட்ட விளக்கு போல" எனும் பழமொழிக்கேற்ப குடும்பத்தில் பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தன் விருப்பங்களைப் புதைத்து விடுவார்கள். அவர்களின் 5 மற்றும் ஒன்பதாம் அதிபதிகளாக மண்ணை குறிக்கும் நிலராசி அதிபதியான புதனும் சுக்கிரனும் வருவதால் அவர்கள் மண்பானை குடிநீரை விரும்புவார்கள்.

  3. தாகத்தை ஏற்படுத்தும் கிரகம் சூரியன் ஆகும். அதனால் தான் சூரியன் உச்சம் பெரும் சித்திரை மாதத்தில் அதிகப்படியான தாகம் மற்றும் நாவறட்சி நோய் ஏற்படுவதைக் காணலாம். தாகத்தைத் தனிக்கும் கிரகம் சுக்கிரனாகும். சனியும் சுக்கிரனும் எந்த ராசியில் சேர்ந்து நின்றாலும் மண்பானை குடிநீரை விரும்புவார்கள். மேலும் சூரியனின் ராசியான சிம்மத்தில் சுக்கிர சாரம் பெற்று சனி நின்றுவிட்டால் அவர்கள் மண்பானை குடிநீரை விரும்பி குடிப்பார்கள். 

  4. கடகம், துலாம், மீனம் ஆகிய நீர் ராசிகள் லக்கினமாகி லக்கினத்திற்கு இரண்டாம் வீடாகிய போஜன ஸ்தானத்தில் சூரியன் நின்றால் தாகம் ஏற்படும்போதெல்லாம் பானை தண்ணீரைத் தேடத்தொடங்கிவிடுவார்கள்.

  5. ரிஷபத்தில் சனி நின்றாலும், துலா ராசியில் சனி உச்சம் பெற்று நின்றாலும் அவர்கள் மண்பானை குடிநீரை விரும்பி அருந்துவார்கள்.

  6. ஜாதகத்தில் மண்ணை குறிக்கும் கிரஹம் சனைச்சரன். எளிமையைக் குறிக்கும் கிரஹம் கேது பகவான். ஜாதகத்தில் இவர்கள் சேர்க்கை பெற்றோ அல்லது திரிகோண பார்வை பெற்றோ நிற்பவர்கள் மண்பானை நீரைக் குடிப்பதோடு மண்ணினால் செய்த விளக்கு மற்றும் பாத்திரங்களை அதிகம் உபயோகிப்பார்கள்.

  மண்பானை நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

  1. ஆயுள் காரகனின் அம்சமான மண்பானை குடிநீரைக் குடித்தால் தாது விரையம் ஏதுவுமின்றி சுத்தமான குடிநீர் குடிப்பது நமக்கு நீண்ட ஆயுளைத் தரும்.

  2. குயவர்கள் எனப்படும் மண்பாண்டம் செய்வோர் கடின உழைப்பாளிகள் மற்றும் சனியின் காரகம் பெற்றவர் ஆவர். எனவே மண்பாண்டங்களுக்குச் செய்யும் செலவு சனீஸ்வர பகவானுக்குச் செய்யும் பரிகாரம் என்பதால் ஆயுள் காரகனின் அருள் கிட்டும் என்பது நிதர்சனம்,

  3. ராகு மற்றும் கேது ஆதிக்கம் பெற்ற ரசாயன மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் உலக வெப்ப மயமாக்குதலை (க்ளோபல் வார்மிங்) அதிகரித்துவரும் நிலையில் ரசாயனங்களையும் பிளாஸ்டிக் உபயோகத்தையும் குறைக்கும் வகையில் மண்பானை குடிநீர் உபயோகிப்பது மண்ணின் காரகனான சனீஸ்வரனுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் செய்யும் நன்றிக்கடனாகும்.

  இந்த சனிநாளில் மட்டுமல்லாது சனைச்சர பகவான் ராஜாவாக இருக்கும் விகாரி ஆண்டு முழுவதுமே மண்பானை குடி நீரை உபயோகிக்க ஆரம்பித்து குயவர்களைக் காத்து சனி பகவானின் அருள் பெறுவோமாக!

  - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

  Mobile 9498098786
  WhatsApp 9841595510


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp