திட்டமிட்டபடி ஆக.16-ல் அத்திவரதர் தரிசனம் நிறைவு: மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா

அத்திவரதர் தரிசனம் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆக.16-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தெரிவித்தார்.
திட்டமிட்டபடி ஆக.16-ல் அத்திவரதர் தரிசனம் நிறைவு: மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா



அத்திவரதர் தரிசனம் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆக.16-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அத்திவரதர் பெருவிழா கடந்த 43 நாள்களாக காஞ்சிபுரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இவ்விழாவில் அத்திவரதரை பொதுமக்கள் தரிசனம் செய்வது வரும் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். 17-ஆம் தேதி ஆகம விதிகளின்படி சடங்குகள் செய்யப்பட்டு அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் வைக்கப்படுவார். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே  இருப்பதால்  பக்தர்கள்  தங்குவதற்கு  வசதியாக கூடுதலாக 3 தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

வந்தவாசி, உத்தரமேரூர் வழியாக வரும் பக்தர்களுக்காக கீழ்கதிர்ப்பூர் பி.ஏ.வி. பள்ளிக்கு அருகிலும், சென்னை, அரக்கோணம், வேலூர், ஆந்திரம், கர்நாடகம் வழியாக வரும் பக்தர்களுக்காக கீழ்கதிர்ப்பூர் எஸ்ஸார் பெட்ரோல் பங்க் அருகிலும், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வரும் பக்தர்களுக்கு நத்தப்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி அருகிலும் என மொத்தம் 3 தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை மூன்றிலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், கழிப்பறை வசதிகள், மின்சார வசதி, இரவில் உறங்குவதற்கான வசதிகளும் போதுமான அளவு  செய்யப்பட்டுள்ளது. உணவுக் கூடங்களும்  தனியாக  அமைக்கப்பட்டு, உணவு  தயாரித்து  வழங்கப்படுகிறது. தங்குமிடங்களிலிருந்து  25 சிற்றுந்துகள் மூலம் பக்தர்கள் காஞ்சிபுரம் நகருக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.  தேவைப்பட்டால் கூடுதலாக சிற்றுந்துகளை இயக்கவும் தயாராக இருக்கிறோம். கடந்த 10 நாள்களாக முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தனியாக தரிசனப்பாதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது ஏ.டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, அத்திவரதர் பெருவிழாவுக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளான கே.பாஸ்கரன் (ஊரக வளர்ச்சித்துறை), என்.சுப்பையன்(தோட்டக்கலைத் துறை)ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com