46-வது நாளில் புஷ்பங்கி சேவையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்!

அத்திவரதர் பெருவிழாவின் 46-வது நாளான இன்று புஷ்பங்கி சேவையில் அதாவது மலர்..
46-வது நாளில் புஷ்பங்கி சேவையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்!

அத்திவரதர் பெருவிழாவின் 46-வது நாளான இன்று புஷ்பங்கி சேவையில் அதாவது மலர் ஆடையில் பக்தர்களுக்குத் திருக்காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறார். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் 15 நாட்களாக நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

அத்திவரதரை தரிசிக்க நாளையுடன் கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை கருடசேவை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாலை 5 மணியிலிருந்து அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கவுள்ளது.

கருட சேவையை முன்னிட்டு கிழக்கு கோபுரவாசல் இன்று பகல் 12 மணிக்கு மூடப்பட்டது. 12 மணிக்கு முன்னர் கோயிலுக்குள் இருப்பவர்கள் 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம். மாலை 4 மணியிலிருந்து ஆடி கருட சேவை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

இன்று 12 மணியுடன் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 47-வது நாளான ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. 

ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதரை திருக்கோயில் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆகம விதிகளின்படி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அன்று மாலை குளத்தில் வைக்கப்படுவார். 

அத்திவரதரை தரிசிப்பதற்கான காலநீட்டிப்பு எதுவும் கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருக்கோயில் மூலவரை வரும் 18-ம் தேதியிலிருந்து பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com