இன்றுடன் நிறைவடைகிறது அத்திவரதர் தரிசனம்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி நடந்து வரும் அத்திவரதர் தரிசன நிகழ்வு வெள்ளிக்கிழமை (ஆக. 16)  மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
மலர்க் கவசம், கிரீடத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அத்திவரதர்.
மலர்க் கவசம், கிரீடத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அத்திவரதர்.


அத்திவரதர் பெருவிழாவையொட்டி நடந்து வரும் அத்திவரதர் தரிசன நிகழ்வு வெள்ளிக்கிழமை (ஆக. 16)  மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1 முதல் ஆக.17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 46-வது நாளன்று அத்திவரதப் பெருமாள் அழகிய மலர்க்கிரீடம் அணிந்தும், மலர்க்கவசத்தால் அலங்கரிக்கப்பட்டும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் பட்டாச்சாரியார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டது.

சுவாமி தரிசனத்துக்கு 6 மணி நேரம்: அத்திவரதர் தரிசனம் வெள்ளிக்கிழமை (ஆக.16)  மாலை 5 மணியுடன் நிறைவு பெறுவதால் ஆக.15 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை நாளாகவும் இருந்ததால் கோயிலிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. 
அமுதப்படித்தெரு, ஆணைகட்டித்தெரு, அஸ்தகிரித்தெரு, பொம்மைக்காரத்தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் நடக்கக்கூட முடியாத அளவுக்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஆடி மாத கருடசேவை நிகழ்ச்சி நடக்க இருப்பதால் வியாழக்கிழமை மதியம் 12 மணியுடன் பொதுதரிசனப் பாதை மூடப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அத்தி வரதர் தரிசனத்துக்காக மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
கோயில் மூடப்படும் விவரம் தெரியாமல் வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்கள் பலரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முக்கியஸ்தர்கள் வரிசையில் காலை 10.30 மணிக்கே அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து அத்திவரதரைத் தரிசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மிக முக்கியஸ்தர்களுக்கான வரிசை சரியாக பகல் 12 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதே போல பொதுதரிசனப் பாதையில் மதியம் 12 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்களுக்காக மதியம் ஒரு மணி வரை நீட்டித்து பின்னரே கிழக்குகோபுர வாசல் மூடப்பட்டது. கோயிலுக்குள் இருந்த பக்தர்கள்  மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ஆடி மாத கருட சேவை காரணமாக ரத்து செய்யப்பட்டு மீண்டும் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

பொதுதரிசனப் பாதையில் செல்லும் பக்தர்கள் சுவாமியை 6 மணி நேரத்திலும்,வி.ஐ.பி.க்களுக்கான வரிசையில் சென்ற பக்தர்கள்  3 மணி நேரத்திலும், வி.வி.ஐ.பி.க்களுக்கான வரிசையில் சென்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் அத்திவரதரை தரிசித்துத் திரும்பினார்கள்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயிலிலும், கோயிலுக்குவெளியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கோயிலில் பல இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை (ஆக.16) வி.வி.ஐ.பி.மற்றும் வி.ஐ.பி. தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் சனிக்கிழமை (ஆக.17) ஆகமவிதிகளின்படி கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் வைக்கப்படவுள்ளார்.
எனவே அத்திவரதர் தரிசனம்  வெள்ளிக்கிழமையுடனும் (ஆக.16),  அத்திவரதர் பெருவிழா சனிக்கிழமையுடனும் (ஆக.17)  நிறைவு பெறுகிறது. அத்திவரதரை திரைப்பட நடிகை நயன்தாரா,  இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் வியாழக்கிழமை தரிசனம் செய்தனர்.
3.25 லட்சம் பேர் தரிசனம்: அத்திவரதர் பெருவிழாவின் 46-ஆவது  நாளான வியாழக்கிழமை சுமார் 3.25 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com