வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி!

மார்கழி மாதம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது. வரும் திங்கள் கிழமை (14/1/2019) மார்கழி மாதத்தின் கடைசி நாள்.
வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி!

மார்கழி மாதம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது. வரும் திங்கள் கிழமை (14/1/2019) மார்கழி மாதத்தின் கடைசி நாள். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தக்‌ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகிய விடியற்காலை பொழுதாகும். இன்றோடு தேவர்களின் இரவுப்பொழுது முடிவுறும் நாள். பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகியின் தத்துவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. "வங்கக்கடல் கடைந்த மாதவனை" என்று தொடங்கும் திருப்பாவையின் முப்பதாவது பாடலுக்குரிய நாள்.

போகிப்பண்டிகை

‘போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்பட்ட விழா’ என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பண்டிகை துயரங்களை போக்குவதாக கருதப்படுவதால் அதை ‘போக்கி’ என்றார்கள். அந்தச் சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது. தாழ்ந்த உலகியல் ஆசைகளான போக புத்தியை, ஞானம் என்னும் அக்னியால் எரிக்க வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் தத்துவம். அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாகப் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்தப் போகி பண்டிகை அமைந்திருக்கும்.

போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இந்திர விழா

இந்தப் போகி உருவானதற்குக் காரணமாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. பண்டைய காலத்தில் மழையை நூல்கள் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த விழா இந்திரா விழாவாகக் கொண்டாடப்பட்டது. போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக ‘போகி’ என்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக, கலாசார விழாவாக இன்றும் தொடர்ந்துவருகிறது.

ஆனால், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் வளர்ந்த நாட்களில் இந்திரனுக்கு வழிபாடு செய்வதை நிறுத்தினர். அதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இந்திரன், கோகுலத்தின் மீது 7 நாட்கள் தொடர்ந்து பெருமழை பெய்யச் செய்தான். தனது பகுதி மக்களை கோவர்த்தனகிரி மலையைக் குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து காத்தார் கிருஷ்ணர். இதனால், கர்வம் அடங்கிய இந்திரன், கீதை தந்த கிருஷ்ண பரமாத்மாவின் பாதம் பணிந்தான். அவனை மன்னித்து இந்திர வழிபாடு செய்ய கிருஷ்ணர் ஒதுக்கிய நாள்தான் போகி என்கிறார்கள்.

ஜோதிடத்தில் போகி

சரி! ஜோதிடத்தில் இந்தப் போகியின் நாயகர்கள் யாரென்று தெரியுமா உங்களுக்கு? சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும் தான். பழைய, முதிய, கழிந்த போன்ற வார்த்தைகளுக்கு காரகர் சொந்தக்காரர் சனீஸ்வரர் தான். உழைப்புக்கு சனீஸ்வர பகவானும் அதன் பலனான போக வாழ்விற்கு சுக்கிரனும் காரகமாக அமைந்தது பொருத்தம் தானே! புதிய விடியலான உத்திராயணத்திற்கு முன் தேவையற்ற விஷங்களைப் போக்கி சுத்தமாவதும் சிறப்பு தானே!

அதே போல "புதிய" என்ற வார்த்தையின் நாயகனே நம்ம சுக்கிரன் தான். புத்தாடை, புத்துணர்ச்சி, புது வீடு, புதிய வாகனம். இப்படி புதிய எனத் தொடங்குமிடத்திலெல்லாம் சுக்கிரனின் ஆட்சிதான். ஆகப் போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருட்கள், பழமையைக் குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தும் விலகி புதிய விடியலை ஏற்படுத்தும் தினம் என்பதால் சுக்கிரனுக்குரிய தினம்தானே!

போக வாழ்வை அருளும் கிரகமும் சுக்கிரன்தான். ஜோதிடத்தில் சுக்கிரனின் அதிதேவதையாக ஸ்ரீமகாலக்ஷமியின் அம்சமான இந்திராணி எனக் கூறப்படுகிறது. இந்திராணி ௭ன்பவள் இந்திரனின் மனைவி. இந்திரனுக்கும் இந்திராணிக்கும் எடுக்கும் விழாவான போகி சுக்கிரனுக்குமான விழா என்பது சரிதானே!

திருஷ்டி தோஷம்

போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளைத் தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும்.

போகி பண்டிகை தமிழர் திருநாளான பொங்கலுக்கு முன் வந்தாலும் தெலுங்கு பேசும் மக்களும் இதனைச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள், பூக்கள், அக்ஷதை எனப்படும் மங்கல அரிசி, நாணயங்கள், சிறிய கரும்பு துண்டுகள், கடலை ஆகியவற்றைக் கலந்து ”போகி பள்ளு” எனும் கலவையை போகியன்று மாலை சூரியன் மறையும் நேரத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை குளிப்பாட்டி புத்தாடை அணியச்செய்து இருக்கைகளில் அமரச்செய்து பெரியவர்கள் அவர்களின்  தலையில் தெளித்து ஆசிர்வதிக்கிறார்கள். இதனால் அவர்கள் தீய சக்திகள் மற்றும் நோய்களில் இருந்தும் காக்கப்படுகிறார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.

தேவையற்றதை தேவைப்படுபவர்களுக்குத் தரலாம்

கால தேச வர்த்தமான ஜாதி மத நிற பேத யுக்தி ஸ்ருதி அனுபவம் தான் ஜோதிடம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் நமக்குத் தேவையற்ற அதே சமயத்தில் உபயோகப்படக்கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து விடலாம். அதனால் சனியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும் என்பது நிதர்சனம்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com