இன்று முதல் 48 நாள்களுக்கு அத்திவரதரை தரிசிக்கலாம்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி ஜூலை 1- முதல் 48 நாள்களுக்கு அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று முதல் 48 நாள்களுக்கு அத்திவரதரை தரிசிக்கலாம்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி ஜூலை 1- முதல் 48 நாள்களுக்கு அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா வரும் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய நாடுமுழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தரவுள்ளனர்.

வஸந்த மண்டபத்தில் அத்திவரதர்: இதையொட்டி, வஸந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதரை திங்கள்கிழமை காலை 6 மணியளவில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அனைத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில்..: கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது, சிறப்பு தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கென பிரத்யேகமாக பேட்டரி கார்கள், சக்கர நாற்காலிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் மக்கள் மேற்கு கோபுரம் வழியாக வந்து அத்திவரதரை தரிசனம் செய்யலாம். கோயில் வளாகத்தில் முதலுதவி அறை, ஆம்புலன்ஸ், குடிநீர்த் தொட்டி, காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே தீயணைப்பு வாகனம், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

விழாக்கோலம் பூண்டுள்ள காஞ்சிபுரம்
1979-க்குப் பின் மீண்டும் ஒருமுறை அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு திங்கள்கிழமை(ஜூலை 1) முதல் காட்சியளிக்கிறார் அத்திவரதர்.

இதை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். காஞ்சிபுரம் அனந்தசரஸ் கோயில் குளத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மூழ்கிய நிலையில் இருந்த அத்திவரதர் வெள்ளிக்கிழமை அதிகாலை எடுக்கப்பட்டார். வஸந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரை திங்கள்கிழமை காலை 6 மணி முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.

சயனக் கோலத்திலும் அதன்பின் நின்ற கோலத்திலும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.அத்திவரதர் விழாவையொட்டி காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் வரும் ஆக. 17-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

நகரம் முழுவதுமே இந்த அற்புதமான வைபவத்தை எதிர்நோக்கி விழாக் கோலம் பூண்டுள்ளது. பல லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக பேருந்து நிலையம்
சென்னை,திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, திருப்பதி, வேலூர், ஒசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு புறப்படும் மற்றும் வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் ஒலிமுகமது பேட்டை யாத்திரிகா நிவாஸ் அமையவுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து மாகரல் வழியாக உத்திரமேரூர் இயக்கப்படும் பேருந்துகள் வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி,செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு புறப்படும் மற்றும் வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் ஓரிக்கை போக்குவரத்து பணிமனைக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்துநிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக தாம்பரம், செங்கல்பட்டு,
கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய ஊர்களுக்கு புறப்படும் மற்றும் வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பழைய ரயில் நிலையம், வையாவூர், நத்தப்பேட்டை வழியாக சென்று வழக்கமான வழித் தடத்தில் இயக்கப்படும்.

காஞ்சிபுரம் நகரத்தில் இயக்கப்படும் அனைத்து நகரப் பேருந்துகளும் வழக்கம் போல் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
காஞ்சிபுரம் நகரத்தின் வழியாக சென்னை, செய்யாறு, திருவண்ணாமலை, போளூர் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமது பேட்டை கீழம்பி, கீழ்கதிர்பூர் புறவழிச்சாலை வழியாக திண்டிவனம் சாலையை சென்றடைந்து வழக்கம் போல் இயக்கப்படும்.

தாம்பரம்-செங்கல்பட்டு ஆகிய இடங்களிலிருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூர் மற்றும் பெங்களூரு, திருப்பதி, திருத்தணி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பெரியார் நகர், மிலிட்டரி ரோடு வழியாக ஓரிக்கையை வந்தடைந்து பின்னர் செவிலிமேடு, கீழ்கதிர்பூர் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படும்.

ஓரிக்கை, ஒலிமுகமது பேட்டை தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து அத்திவரதர் தரிசனத்துக்காக வரதராஜப்பெருமாள் கோயில் வழியாக காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்திலுள்ள தனியார் வாகனம், வேன்கள், சுற்றுலாப் பேருந்துகள் நிறுத்துமிடம் வரையில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

20 சிற்றுந்துகள்
அத்திவரதர் பெருவிழாவையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து மொத்தம் 20 சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ளன.

ஒலிமுகமது பேட்டை தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து குஜராத்தி மண்டபம், ஜி.கே.மண்டபம், காமாட்சியம்மன் கோயில், பூக்கடைச் சத்திரம், மத்திய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், மூங்கில்மண்டபம், ஆடிசன்பேட்டை, ரங்கசாமிகுளம், பச்சையப்பன் மகளிர் கல்லூரி, வெங்குடி, விஷ்ணுகாஞ்சி காவல்நிலையம், செட்டித்தெரு, வடக்குமாட வீதி (வரதர் கோயில் சந்நிதி தெரு), அண்ணா நினைவு இல்லம், சுங்கச் சாவடி, பெரியார் நகர் வழியாக பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கு சிற்றுந்து செல்லும்.

அதுபோல், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியிலிருந்து பெரியார் நகர், வடக்கு மாடவீதி, ரங்கசாமிகுளம், மூங்கில்மண்டபம், பேருந்து நிலையம், அண்ணாஅரங்கம், கச்சபேஸ்வரர் கோயில், புத்தேரி சாலை, சாலை தெரு, ஏகாம்பரநாதர் கோயில் வழியாக ஒலிமுகமது பேட்டைக்கு முதலாவது இணைப்புப் பேருந்து வழித்தடத்தில் பயணித்து வரதர் கோயிலுக்குச் செல்லலாம்.

ஓரிக்கை பணிமனை தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து ஓரிக்கை, அரசு நகர், கீழ்கேட், கீரை மண்டபம், மேட்டுத்தெரு, மூங்கில்மண்டபம், வட்டாட்சியர் அலுவலகம், இரட்டைமண்டபம், பேருந்து நிலையம், மூங்கில்மண்டபம், ஆடிசன் பேட்டை, ரங்கசாமி குளம், பச்சைப்பன் மகளிர் கல்லூரி, செட்டித்தெரு, வடக்கு மாடவீதி, சுங்கச் சாவடி, பெரியார் நகர் வழியாக பச்சைப்பன் ஆடவர் கல்லூரி தற்காலிக பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வகையில் இரண்டாவது இணைப்புப் பேருந்து வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பச்சைப்பன் ஆடவர் கல்லூரியிலிருந்து பெரியார் நகர், வடக்கு மாடவீதி, செட்டித்தெரு, ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, கீழ் கேட், அரசு நகர் வழியாக ஓரிக்கை தற்காலிக பேருந்து நிலையத்துக்கு சிற்றுந்து இயக்கப்படுகிறது.

சிறப்பு ரயில்கள்...
அத்திவரதரைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக அரக்கோணம், சென்னை மற்றும் செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அத்திவரதர் கோயிலுக்கு செல்ல மிக அருகில் நத்தப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது.

ரூ.10 செலுத்தி பயணிக்கலாம்
தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்துகளில் பயணித்து வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு வருவோர் பயணச்சீட்டு கட்டணமாக ரூ.10 செலுத்தி பயணிக்கலாம். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ளன.

வரதர் கோயில் மட்டுமில்லாமல் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் வழியாக சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ளதால் பக்தர்கள் அனைத்து கோயில்களுக்கும் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக பேருந்து நிலையத்தை வந்தடையும் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டி தகவல் பலகைகள், அத்திவரதர் கோயிலுக்குச் செல்லும் தூரம் உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com