அத்திவரதர் தரிசனத்துடன் ஆனி கருட சேவை: 1.15 லட்சம் பேர் குவிந்தனர்

அத்திவரதர் தரிசனத்துடன், ஆனி கருட சேவையில் உற்சவரை 1.15 லட்சம் பக்தர்கள் வழிபட்டனர்.  
கருட வாகனத்தில் காட்சியளிக்கும் வரதர்.
கருட வாகனத்தில் காட்சியளிக்கும் வரதர்.

அத்திவரதர் தரிசனத்துடன் ஆனி கருட சேவை: 1.15 லட்சம் பேர் குவிந்தனர்
காஞ்சிபுரம், ஜூலை 11: அத்திவரதர் தரிசனத்துடன், ஆனி கருட சேவையில் உற்சவரை 1.15 லட்சம் பக்தர்கள் வழிபட்டனர்.  
அத்திவரதர் பெருவிழாவால் காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இவ்விழா தொடங்கிய நாளிலிருந்து இதுவரை மக்களின் கூட்டம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, அறநிலையத்துறை உள்ளிட்டோர் ஏற்பாட்டு பணிகளை கூட்டத்துக்கு ஏற்ப மாற்றிமைத்து வருகின்றனர். அதன்படி, தற்காலிக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் திரளானோர் வருகை தருகின்றனர். 
11-ஆம் நாளான வியாழக்கிழமை வழக்கம்போல் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர். விடுமுறை நாள்களை மிஞ்சும் அளவுக்கு வடக்கு, தெற்கு, கிழக்கு மாடவீதிகளில் பக்தர்கள் குவிந்தனர்.
தொடர்ந்து, அதிகாலை 4.30 மணிக்கு கிழக்கு கோபுரம் முன்பு வந்த பக்தர்களை போலீஸார் உள்ளே அனுமதித்தனர். 
ஆரஞ்சு நிறப் பட்டாடையில் அத்திவரதர்: அத்திவரதருக்கு ஆரஞ்சு நிறப்பட்டாடையும் ஊதா நிற அங்க வஸ்திரம் அணிவித்து மலர்கள், துளசி ஆகியவற்றில் அலங்கரித்தனர். தொடர்ந்து, நைவேத்தியம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 
இதையடுத்து, வஸந்த மண்டபத்தையொட்டி உள்ள வரிசைகளில் அத்திவரதரை காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஆழ்வார் சந்நிதி, தேசிகர் சந்நிதிகள் வழியாக வந்த பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
தரிசனத்துக்கு 4.30 மணி நேரம்: அத்திவரதரை காண வடக்கு, தெற்கு மாடவீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வந்த பக்தர்கள் அதிகபட்சமாக 4.30 மணி நேரத்திலும், குறந்தை பட்சம் 1.30 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். 
புதன்கிழமை முதல் தரிசன நேரம் அதிகாலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், அதிகபட்சமாக புதன்கிழமை 1.50 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இதையடுத்து, கோடை உற்சவத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை ஆனி கருட சேவை நடைபெறுவதால் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசன நேரம் குறைக்கப்பட்டது. இதனால், அதிகாலை முதலே வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. 
கோடை உற்சவம் நிறைவு: வரதர் கோயிலில் கோடை உற்சவம் கடந்த 8 நாள்களாக விமரிசையாக நடைபெற்றது. நாள்தோறும் மாலை வேளையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், திருக்குடையின் கீழ் பட்டாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, உற்சவர் மேற்கு கோபுர சந்நிதி தெரு, உள்பிரகாரங்களில் பவனி வந்தார். அத்துடன் நான்கு கால் மண்டபம் அருகே இளைப்பாறுதல் சேவையும் நடைபெற்றது.
அத்திவரதரும் ஆனி கருடசேவையும்: கோடை உற்சவத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் ஆனி கருட சேவை நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரங்களுடன் பட்டாச்சாரியர்கள் வேதம் முழங்க பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, ஆழ்வார் பிரகாரம், மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
கோடை உற்சவ நிறைவு நாளான ஆனி கருடசேவையில் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்த பிறகு, ஆனி கருடசேவையில் வரதரை தரிசனம் செய்து வழிபட்டனர். அத்திவரதரையும், கருட வாகனத்தில் வரதரையும் ஒரே சேர தரிசன செய்ய அடுத்து 40 ஆண்டுகள் ஆகும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் அத்திவரதரையும், கருடவாகனத்தில் எழுந்தருளிய வரதரை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். அத்திவரதர் காட்சியளிக்கும் இந்த பெருவிழாவில் இது முதல் கருட சேவை. இதையடுத்து, ஆடி கருட சேவை ஆகஸ்ட் 15-ஆம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது. 
முக்கியஸ்தர்கள் தரிசனம்: அத்திவரதரை வியாழக்கிழமை காலை முதல் பல்வேறு முக்கியஸ்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.  
அதன்படி, உடுப்பி கணியூர் மடத்தின் பீடாதிபதி வித்ய வல்லப தீர்த்த சுவாமிகள், டிஜிபி திரிபாதி, புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் முக்கியஸ்தர்கள் வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். 
1.15 லட்சம் பக்தர்கள் தரிசனம்: அத்திவரதர் பெருவிழாவின் 11-ஆம் நாளான வியாழக்கிழமை 1.15 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

குடியரசுத் தலைவர் இன்று வருகை

அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை வருவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
அத்திவரதரை தரிசிக்க வெள்ளிக்கிழமை (ஜூலை 12) வழக்கம் போல் காலை 5 மணிக்கு கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதையடுத்து, நண்பகல் 12.30 மணியளவில் கிழக்கு கோபுரம் வழியாக பொது தரிசனம், முக்கியஸ்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும். 
இதையடுத்து, பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் குடியரசுத் தலைவர் வருகை புரியவுள்ளார். தொடர்ந்து, 3 மணியிலிருந்து 4 மணிக்குள் அத்திவரதரை தரிசனம் செய்த பிறகு அவர் புறப்பட்டுச் செல்கிறார். 
குடியரசுத் தலைவர் புறப்பட்ட பிறகு வழக்கம் போல் மாலை 4.30 மணியிலிருந்து பொதுமக்கள் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். 
மூன்று அடுக்கு பாதுகாப்புக்காக சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 2,000 போலீஸாரும் குடியரசுத் தலைவர் தரிசனம் செய்யும் நேரத்தில் பணியில் அமர்த்தப்படவுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குடியரசுத்தலைவர் வருகையையொட்டி டிஜிபி திரிபாதி, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி தேன்மொழி, ஆட்சியர் பா.பொன்னையா, எஸ்.பி.கண்ணன் உள்ளிட்டோர் வரதர் கோயிலில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

11-ஆம் நாளான வியாழக்கிழமை ஆரஞ்சு நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com