தீராத நோய் குணமாகனுமா? பேரூர் பட்டீஸ்வரத்தில் உள்ள ஞான பைரவரை வணங்குங்க!

ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி நீல கண்டாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
தீராத நோய் குணமாகனுமா? பேரூர் பட்டீஸ்வரத்தில் உள்ள ஞான பைரவரை வணங்குங்க!

ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி நீல கண்டாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 24.07.2019 புதன் கிழமை மாலை 06.05 மணி முதல் நாளை 25.07.2019 வியாழக்கிழமை மாலை 7.21 வரை அஷ்டமி திதி அமைந்திருக்கின்றது. இந்த நேரத்தில் பைரவ வழிபாடு செய்வது சிறப்பு என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இன்றும் நாளையும் சென்னை கபாலீஸ்வரர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோயில், பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி, காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைகுடி, தருமபுரியில் தகடூர் பைரவர் போன்ற ஸ்தலங்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

பைரவ மூர்த்தி

ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சன்னிதியில் காலபைரவர் எழுந்தருளியிருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள்புரிகிறார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.

சனைச்சரனின் குரு பைரவர்

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவ பெருமானிடம் விரும்பினார்.

அஷ்டமியும் பைரவ வழிபாடும்

திதிகளில் அஷ்டமி நாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை செய்ய உகந்ததாகப் போற்றப்படுகின்றது. அஷ்டமி திதியில் தான் பராசக்தியான அம்பாள் ஆயுதம் தரித்த நாளாகும். இந்த நாளில் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பாகும்.

பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அஷ்டமி அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் அனைத்து வளங்களையும் பெறுவதாக நம்பப்படுகிறது.

ஜோதிடத்தில் காலபைரவர்

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். காலபுருஷனும் கால பைரவரும் ஒன்றே என்கிறது ஜோதிட சாஸ்திரம். சிவனின் ருத்ர ரூபமான கால பைரவரும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர் என்பது இதனால் புலனாகிறது.

கால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றைக் குறிக்கும். நீர் ராசியான விருச்சிகம் விஷ ஜெந்துக்கள் நிறைந்த கடலை குறிப்பதால் இது மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள்,  புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை குறிக்குமிடமாகும். கால பைரவ மூர்த்தி காலனை வென்றவர். மேலும் ஜோதிடத்தில் ஆயுள் காரகர் எனும் சனைஸ்வர பகவானுக்கே குருவானதால் பைரவரை வணங்குவோருக்கு எம பயம் இருக்காது. மேலும் காலபைரவர் நாகபரணம் பூண்டு விளங்குவதால் அவரை வணங்குவோர்களுக்கு விஷ ஜெந்துக்கள் மற்றும் நோய்களால் உபாதைகள் ஏற்படாது.

காலபுருஷ தத்துவம்

ஜோதிட சாஸ்திரப்படி மிகப்பெரிய பங்கு வகிப்பது காலப்புருஷ தத்துவம் ஆகும். நாம் முன் பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே இந்த பிறவியில் நாம் அடையும் நன்மை தீமைகளுக்குக் காரணம். நான் கடந்த பிறவிகளில் யாருக்கு எந்த விதத்தில் பாவங்களையோ, இல்லை புண்ணியங்களையோ செய்தோம், அதன் வாயிலாக இந்த பிறவியில் நாம் அந்த வினைப்பயனை எவ்விதத்தில் அனுபவிக்கப் போகிறோம் என்பதனை நமக்கு ஜோதிடத்தில் நமக்குத் தெள்ளத்தெளிவாகக் கண்ணாடி போலக் காட்டுவது காலப்புருஷ தத்துவம் ஆகும்.

கால புருஷ தத்துவம் என்பது ஜோதிட கலையில் பொதுவான ராசி அமைப்பைப் பற்றி சொல்வது, இதன்படி மேஷம் முதல் வீடாகவும், மீனம் 12ம் வீடாகவும் அமையும், சுய ஜாதக அமைப்பிற்கு பலன் காணும்பொழுது, இந்த காலபுருஷ தத்துவ ராசிகளுடன் தொடர்புப்படுத்தி பலன் காண வேண்டும் அப்பொழுதுதான் பலன் 100 சதவிகிதம் சரியாக இருக்கும்.

காலபுருஷனும் கால பைரவரும்

சிவ ஸ்வருபமான கால பைரவரை "மஹா கால' என்றும், 'காலாக்னீ ருத்ராய' என்றும் ஸ்ரீ ருத்ரம் எனும்  மந்திரம் போற்றுகிறது. அதாவது பைரவ மூர்த்தியே மாபெரும் காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவர், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும். அவரது அருளால் மீண்டும் மறுசுழற்சியில் ஜீவன் உருவாகிறது. அதாவது கால பைரவர் குணத்தையும் காலத்தையும் கடந்தவர். அவர் காலத்திற்கு கட்டுப்படாத தன்மையால் அவரை கால பைரவர் என வேதம் போற்றுகிறது.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும்,  தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

கால புருஷ சக்கரம்

பூமி 360 சுழற்சி பாகையில் தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவதால், ஜோதிடம் பற்றிய அனைத்து முக்கிய விதிகளும் பூமியின் சுழற்சியால் உருவாகும் 'கால புருஷ சக்கரம்' என்ற தத்துவம் கொண்டு வரையறுக்கப்பட்டது. இந்த கால புருஷ சக்கரம் என்பது பூமி சுற்றி வரும் வட்டப்பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நட்சத்திர கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்து அதில் சஞ்சரிக்கும் கிரகங்களைக் கொண்டு ஜோதிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

புதன் கிழமை தேய்பிறை  அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார் . இவரை வணங்கி தனக்கு அருளும் ,ஆசியும் வேண்டும் என்று ஆயுளை  அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார். ஜோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜாதகத்தில் செவ்வாயின் நக்ஷத்திரங்கள் புதனின் வீடுகளிலும் சனியின் வீடுகளிலும் வருவது குறிப்பிடத்தக்கது. மிதுனம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமாகும். மூன்றாம் பாவம் என்பது தைரியம் மற்றும் செய்யும் முயற்சியினை குறிக்குமிடமாகும். மூன்றாம் பாவம் என்பது பாவாத்பாவபடி எட்டுக்கு எட்டாமிடமாகும். எனவே மூன்றாம் பாவம் என்பது தீவிரமான பிரச்சனைகளை குறிக்குமிடமாகும். புதனின் மற்றொரு வீடான கன்னி கால புருஷனுக்கு ஆறாம் பாவமாக வருகிறது. ஆறாம் பாவம் என்பது நோய், கடன், சத்ரு ஆகியவற்றில் குறிக்குமிடம் ஆகும்.

நான்கு வேதங்களும் நாய் உருவில் வாகனமாக பைரவருக்கு அமைந்திருப்பதால் கல்வியில் ஏற்படும்  தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை. செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட பைரவர் சிவபெருமானின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் சூரியன் மற்றும் தக்‌ஷிணாமூர்த்தியின் காரகத்தையும் கொண்டிருக்கின்றார்.

ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்னைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ பைரவ மூர்த்தியை வழிபடுவது, கால பைரவாஷ்டகம் பாராயணம் செய்வது, சொர்ணாகர்ஷன பைரவ ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர்க் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ காலபைரவரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.

இன்று அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ காலத்தை (நேரத்தை) பலவிதங்களிலும் வீணடிக்கின்றார்கள்.  அதனால் அனைவருக்கும் தோஷம் ஏற்படுகின்றது.  காலத்தால் ஏற்படும் தோஷம் தீர கால பைரவரை தேய்பிறை அஷ்டமியில்  வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

கேதுவும் பைரவரும்

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாகக் கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது. விபூதி எனும் சாம்பலுக்கு ஜோதிட காரகர் யார் தெரியுமா? ஞான காரகன் என்றும் மோட்ச காரகன் என்றும் வர்ணிக்கப்படும் கேது பகவான்தான். கேதுவை ஞான காரகன் எனவும் மோட்ச காரகன் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. 

கேது தான் இருக்கும் இடங்களையும் (பாவங்கள்) பார்க்கும் இடங்களையும் அழித்து அந்த பாவ காரகங்களின் மூலமாக ஞானத்தை வழங்கி பின் மோட்சத்தையும் வழங்கி விடுகிறார்.  கேதுவின் அதிதேவதை ருத்ரன் ஆகும். அதாவது சிவனின் மிக ஆக்ரோஷமான ஸ்வருபம் ஆகும். எனவேதான் கேதுவும் அழிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறார் போலும்! கேதுவின் தன்மை நெருப்புத்தன்மை ஆகும். தேவையற்ற அனைத்தையும் அழித்துப் பிடி சாம்பலாக்கிப் படைப்பின் மறுசுழற்சிக்கு உதவுபவர் கேதுவாகும். 

ஜோதிடத்தில் அஸ்வினி நக்ஷத்திரம்

27 நட்சத்திரங்களில் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி ஆகும். இது கால புருஷ இராசியான மேஷ இராசியில் இடம் பெறும் நட்சத்திரமாகும். இதன் நக்ஷத்திராதிபதி கேது  பகவான் ஆவார். அஸ்வினி நக்ஷத்திரத்தின் அதிதேவதை தேவ மருத்துவர்களான அஸ்வினி தேவர்கள் என நக்ஷத்திர சூக்தம் மற்றும் நக்ஷத்திர சிந்தாமணி கூறுகிறது. சரஸ்வதி தேவி என வருஷாதி நூல்கள் கூறுகின்றன.

கேதுவின் ஆதிக்கம் பெற்ற அஸ்வினி நக்ஷத்திரம் வானத்தில் ஒரு குதிரை அல்லது குதிரை தலை போல் காட்சி அளிக்கிறது. அஸ்வினி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்  மன உறுதி மிக்கவர்கள். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதை முடிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். மன உறுதியும் உடல் வலிமையும் கொண்டிருப்பார்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்களாக இருப்பார்கள். எந்தக் காரணத்துக்காகவும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எதிலும் முதலிடத்தில் இருக்க விரும்புவார்கள். கண்களில் எப்போதும் ஒரு பிரகாசம் இருந்தபடி இருக்கும். எதையும் ஆராய்ந்து பார்த்தே ஏற்றுக்கொள்வார்கள். நிறைய நண்பர்கள் இருந்தாலும், சிலருடன் மட்டுமே நெருங்கிப் பழகுவார்கள். பிற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். தங்கள் பணிகளில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பார்கள். 

அஸ்வினி நக்ஷத்திரகாரர்கள் வணங்க வேண்டிய ஞான பைரவர்

இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு ஏற்ப இருபத்தேழு பைரவர்களும்,அந்த பைரவரின் கோவில்களும் நமது தமிழ்நாட்டில் இருக்கின்றன.நமது வாழ்க்கை வளமாகவும்,நலமாகவும்,நிம்மதியாகவும் இருக்க நாம் விநாயகர் வழிபாடு,குல தெய்வ வழிபாடு இவைகளுடன் நமது நட்சத்திரத்துக்குரிய பைரவர் வழிபாடு போன்றவைகளை பின்பற்றினாலே போதுமானது.

பொதுவாக கேதுவின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் பார்க்க அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும் பயங்கர வேகமும் விவேகமும் நிறைந்து நீரு பூத்த நெருப்பு போல கனன்றுகொண்டிருப்பார்கள். கேதுவின் ஆதிக்கம் நிறைந்த மேஷம், சிம்மம், தனுசு ராசி/லக்ன காரர்கள், அஸ்வினி, மகம், மூலம் நஷத்திரத்தில் ராசி/லக்னம் அமைந்தவர்கள், லக்னத்தில் கேது நிற்க பிறந்தவர்கள், கேது தசை புத்தி நடப்பவர்கள் சனி, கேது போன்ற கிரஹங்கள் சேர்க்கை பெற்றவர்கள் அனைவரும் கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீஞான பைரவ மூர்த்தியை வணங்கி வர சரஸ்வதி தேவியின் அருள் கடாக்ஷம் கிட்டி சகல ஞானமும் பெறுவதோடு மீண்டும் பிறவா நிலையையும் அடைவர் என்பது புராண தகவல்.  இவர் 27 நக்ஷத்திரங்களில் கேதுவின் அஸ்வினி  நக்ஷத்திரத்திற்க்குறிய பைரவர் என தல புராணம் தெரிவிக்கிறது. இங்குள்ள பைரவருக்கு நாய் வாகனம் இல்லை என்பது சிறப்பு தகவலாகும்.

முக்கியமாக மருத்துவ கல்வியில் சிறக்கவும், மருத்துவ படிப்பில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கவும் அஸ்வினி தேவர்களின் அம்சமாக திகழும் ஞான பைரவரை வணங்க தடைகள் அனைத்தும் நீங்கி மருத்துவ துறையில் பேரும் புகழும் ஏற்படும்,

பேருர் பட்டீஸ்வரம்

முற்காலத்தில் இங்கு ஒரு புற்றிற்குள் சிவன் லிங்கமாக எழுந்தருளியிருந்தார். தேவலோக பசுவான காமதேனு, நாரதரின் ஆலோசனைப்படி இங்கு வந்து, புற்றில் பால் சுரந்து சிவனை வழிபட்டது. ஒருசமயம் காமதேனுவின் கன்றான பட்டி, அறியாமல் புற்றை மிதித்துவிட்டது. தன் கன்று செய்த தவற்றை மன்னிக்கும்படி காமதேனு, சிவனை வேண்டியது. புற்றியிலிருந்து வெளிப்பட்ட சிவன் இருவரையும் ஆசிர்வதித்தார். பட்டி மிதித்து வெளிப்பட்டதால் இவர், “பட்டீஸ்வரர்’ எனப் பெயர் பெற்றார். “கோஷ்டீஸ்வரர்’ என்றும் இவருக்குப் பெயருண்டு. மூலஸ்தானத்தில் லிங்கத்தின் பின்புறம் காம தேனுவின் சிற்பம் உள்ளது. விதை முளைக்காத புளியமரம், அழியாபனைமரம் சாணம் புழுக்காததன்மை, இறந்தவர்கள் எழும்பு ஆற்றில்கரைத்த சிலநாட்களில் கல்லாகும் தன்மை, இங்கு மரணமாகும் ஜீவராசிகள் வலது காதை மேல்நோக்கி வைத்த நிலையில் மரணம் இவைகள் பிறவாமையை உணர்த்தும் 

பைரவ உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தைப் போக்கிக் காப்பவர் பைரவர். மனிதனின் நிம்மதியைப் பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com