Enable Javscript for better performance
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 2.புதன்- Dinamani

சுடச்சுட

  

  சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 2. புதன்

  By - ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்  |   Published on : 25th July 2019 03:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2

   

  புதன் பரிகார ஸ்தலம் - ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை கோவூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் (இரண்டாவது பரிகார திருத்தலம்)

  கோவூர் என்பது சென்னையில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரம், போரூர் - குன்றத்தூர் செல்லும் வழியில் உள்ளது. பிரதான சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர்  தொலைவில் உள்ளது. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, குலோத்துங்க சோழனால் சிவனுக்காக எழுப்பப்பட்ட பிரமாண்டமான கோவிலாகும். இங்கு குடிகொண்டு இருக்கும்,  சிவனாரின் பெயர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் (திருமேனீஸ்வரர் என்றும் அழைப்பர்) மற்றும் தாயாரின் பெயர் ஸ்ரீ சௌந்தராம்பிகை (திருவுடை நாயகி என்றும் அழைப்பர்).

  புராண காலத்தில், தெய்வக் காமாக்ஷி ஆனவள் பஞ்சாக்னி எனும் நெருப்பின் மேல் நின்று மாங்காட்டில் சிவனை திருமணம் செய்யவேண்டி தவம் இருந்தார். அவளின்  கடும் தவத்தால், சுற்றியுள்ள இடம் மிகுந்த வெப்பத்துக்கு ஆளானது. அதிகப்படியான வெப்பத்தால் சுற்றியுள்ள அனைத்து உயிர்களும் வேதனை அடைந்தது. அப்போது,  சிவனார் தமது கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது முனிவர்களும், தேவர்களும் மகாவிஷ்ணுவை வணங்கி இந்த உலகத்தை தாய் காமாட்சியின்  தவத்தால் ஏற்பட்ட வெப்பத்திலிருந்து காக்க வேண்டினர். மகாலக்ஷ்மியை இந்த பிரச்னையிலிருந்து காக்க, விஷ்ணு பணித்தார். 

  விஷ்ணுவின் ஆணைக்கிணங்க மகாலக்ஷ்மி, இந்த கோவூரில் வைகுந்தத்திலிருந்து, இந்த உலகைக் காக்கும் பொருட்டு, சிவனின் கண்களைத் திறக்கச் செய்ய பசு வடிவில்  கீழிறங்கி வந்து வழிபட்டார். இந்த செயலுக்கு மனமிறங்கிய சிவனார், தமது கண்களைத் திறந்து காணச்செய்தார். அதன் பிறகு இந்த பகுதி குளிர்ந்தது. மகாலக்ஷ்மி, பசுவின் வடிவில் வணங்கி வழிபட்ட இந்த ஸ்தலம், கோ பூரி என வழங்கலானது. அதாவது தமிழில், கோ என்றால் பசு எனப்படும். பின்னர் அதுவே மறுவி கோவூர் ஆனது.  அப்படிப்பட்ட இந்த கோவிலை தான் குலோத்துங்க சோழன் அழகுற நிர்மாணித்தான். இந்த கோவிலானது, 7 நிலைகளைக் கொண்டும் தெற்கு திசை பார்த்ததுமான ராஜ  கோபுரத்தைக் கொண்டுள்ளது. சன்னதி தெரு முழுக்க இன்றும் அழகுற மரங்களாலும் பழமை மாறாத வீடுகளாலும் உள்ளது நமது கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டுகிறது. இந்த  கோவிலானது, நவக்கிர பரிகார ஸ்தலங்களில் ஒன்றாக, புதன் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. 

  கடவுள், சுந்தரேஸ்வரரும், சௌந்தராம்பிகை தாயாரும் இங்கு மிக அழகுற இருப்பதாலேயே அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். இந்த அழகு வதன ஸ்ரீ சுந்தரேஸ்வரரை வணங்குவதனால் நிச்சயம், ஒருவருக்கு எல்லா பிணிகளும் நீங்கப் பெற்றுப் பொலிவுடன் வாழ்வர். மற்ற தெய்வங்களான, ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ வள்ளி தேவா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரகங்களும் இங்குக் காண முடிகிறது. மேலும் 63 நாயன்மார்களும் இருப்பது மனதை நெகிழச்செய்கிறது.

  திருப்பதி செல்லும் போது இந்த வழியாக பல்லக்கில் வந்த துறவி தியாகராஜர் இந்த கோவிலுக்கு வந்தார். அங்கு வசித்து வந்த ஊர் தலைவன், சுந்தரேசன் என்பவன், தனது கெர்வத்தின் காரணமாக இவரை தம் மீது சில பாட்டியற்றி அதனைப் பாடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டான். அதற்குத் தியாகராஜரும் தாம் கடவுளைத் தவிர எந்த ஒரு தனிமனிதரையும் புகழ்ந்து பாட மாட்டேன் எனச் சொல்லி கோவூரைவிட்டு அகன்றார்.

  தியாகராஜர், கோவூரிலிருந்து பல்லக்கில் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்லும் வழியில் இவரின் பல்லக்குடன் வந்த சேவை புரிபவர்களை ஒரு கொள்ளைக் கூட்டம் வழி மறித்தது. இதனை அறிந்த தியாகராஜர் பல்லக்கில் இருந்து கீழே இறங்கி, தாம் திருப்பதி சென்றுகொண்டு இருப்பதாகவும், தாம் பெரிய பணக்காரர் இல்லை எனவும் தம்மிடம் கொள்ளை அடிக்க ஏதும் இல்லை எனவும் கூறினார். அப்படி என்றால் யார் அந்த இருவர் உனக்குப் பின்னல் இருந்து எங்களை ஏன் கல்லால் தாக்கினர் என வினவினர். இவரோ, என் பல்லக்கை தூக்குபவர்களைத் தவிர வேறு யாரும் என்னோடு வரவில்லை எனக் கூறினார். ஆனால் கொள்ளையர்களோ இல்லை, தாங்கள் இரு இளைஞர்களை கண்டதாகவும் அவ்விரு இளைஞர்களும், தியாகராஜரை காத்து வந்ததாகவும், கூறினர்.

  தியாகராஜர் தற்போது தெரிந்து கொண்டார் அவ்விரு இளைஞர்களும் வேறு யாரும் இல்லை, ராம, இலக்குவர்களே என்று. இந்த கோவூர் பகுதியில் ஏதோ அற்புத சக்தி இருப்பதாக எண்ணி மறுபடியும் கோவூர் கோவிலுக்கு வந்தார். இங்கு அவர் ஸ்ரீ சுந்தரேஸ்வரரை புகழ்ந்து, 5 கீர்த்தனைகளை இயற்றி, பாடி சென்றார். அவை கோவூர் பஞ்சரத்னம் என வழங்கப்படுகிறது. அவையாவன, ஏ, வஸுதா எனும் சஹானா ராக எனும் கீர்த்தனை, கோரி சேவிம்ப எனும் கரகரப்ரியா ராக கீர்த்தனை, சம்போ மஹாதேவ எனும் பந்து வராளி ராக கீர்த்தனை, நம்மி வச்சின எனும் கல்யாணி ராக கீர்த்தனை மற்றும் சுந்தரேஸ்வரூனி எனும் சங்கராபரண ராக கீர்த்தனைகள் ஆகும். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்ன வென்றால், தியாகராஜர் தாம் இயற்றி பாடிய பாடல்கள் அனைத்துமே ராமரை நினைத்து மட்டுமே ஆகும். இது போன்ற ஒரு சில கீர்த்தனைகளை மட்டுமே அவர் மற்ற கடவுளரைப் புகழ்ந்து பாடியுள்ளார். 

  மிக முக்கியமான ஒரு செய்தி ஒன்று உண்டு என்றால், அது இந்த தலத்திலிருந்து தான் குன்றத்தூரில் அவதரித்த சேக்கிழார் பெருமான், பெரிய புராண நூலை எழுதத் தொடங்கினார். மிக அதி அற்புதமான 27 தளம் உள்ள மகா வில்வ மரம் இந்த ஸ்தலத்தின் ஸ்தல விருக்ஷமாகும். இந்த மகா வில்வத்திற்கு, பல மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். இங்குள்ள தீர்த்தம், சிவகங்கை தீர்த்தமாகும். அழகு நிறைந்த வேலைப்பாடுள்ள திருத்தேர் இங்கு உள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்து நெடிந்துயர்ந்த கோவிலின் பட்டியலில் இதுவும் ஒன்றாகும். 

  புதன் அஸ்தங்கம் அடைந்துள்ள ஜாதகர்களும், புதன் நீச்சம் போன்று வலிமை குன்றியவர்களும் இந்த கோயிலுக்கு வருவதால் சாமர்த்தியம் கிடைக்கப்பெற்று திறமை பளிச்சிடும்படி வாழ்வர். மேலும், நரம்புத் தளர்ச்சி போன்ற எந்த வியாதி இருப்பினும் இந்த ஸ்தலத்து சிவனையும் அம்பாளையும் வழிபடுபவர்கள், புது தெம்பு அடைவதுடன், அழகுறச் சுந்தரமாக காட்சி அவர்களது கடைசி வரை காணப்படுவர். ஒருவரின் ஜாதகத்தில், புதன் அஸ்தங்கம் அடைந்திருப்பின், அதாவது சூரியனிலிருந்து 12 பாகைக்குள் வக்கிர நிலை பெறும்போதும், நேர் பாதையில் செல்லும் போது 14 பாகைக்குள் இருப்பின் அஸ்தங்கம் அடைந்ததாகக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட அமைப்புள்ள ஜாதகர்கள், தமது அறிவுத் திறன், தவறான / வெற்று கர்வத்தால் தடுமாற்றம் கொள்வர். அல்லது அவர்களின் அதிக தன்னம்பிக்கையால், அவர்களின் காரியங்கள் செயலிழந்து போகச்செய்யும்.   

  இப்படிப்பட்ட ஜாதகர்கள், இந்த கோவிலை, புதன் தோறும் வணங்கி வழிபட புத்திசாலி தனம் வளரவும், நரம்புத் தளர்ச்சி நோய் அகலவும் செய்யும். மேலும் சிறு வயது முதல் பெரிய வயது மாணாக்கர்களும் புதன் தோறும் முந்தைய நாள் ஊறவைத்த மொச்சை நீரை அருகில் உள்ள பெருமாள் கோயிலில் ஏதேனும் ஒரு மரத்துக்கு ஊற்றியும், ஊறிய மொச்சையை பசு மாட்டிற்கு அளிப்பதும் நல்ல படிப்பில் கவனமும், மறதியற்ற தன்மையையும் தரும். தினமும், படிக்கும் மாணவர்கள், பசுமையான செடி, மரங்களுக்கு நீர் ஊற்றி வருவதும் தங்கு தடையற்ற கல்வியை அளிக்கும். புதன் பச்சை நிறத்துக்குக் காரகன் அதனால் அன்று பச்சை நிற ஆடை ஏதேனும் ஒன்றை அணிவதும் சால சிறந்ததாகும். 

  இனி அடுத்து வரும் தொடர்களில் மற்ற கோயில்களைப் பற்றியும் வெளிவரும்.

  சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம். 

  - ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன் 

  தொடர்புக்கு: 98407 17857

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai