இராஜபதி கைலாசநாதர் ஆலயத்தில் ஜூன் 14-ல் மகாகும்பாபிஷேகம்

நவம் என்றால் ஒன்பது. நவகைலாயம் என்றால், ஒன்பது கிரகங்கள் மூலம் அமையப்பெற்ற ஒன்பது சிவாலயங்கள்.
இராஜபதி கைலாசநாதர் ஆலயத்தில் ஜூன் 14-ல் மகாகும்பாபிஷேகம்


நம பார்வதி பதையே!

ஹர ஹர மகாதேவா!!

நவம் என்றால் ஒன்பது. நவகைலாயம் என்றால், ஒன்பது கிரகங்கள் மூலம் அமையப்பெற்ற ஒன்பது சிவாலயங்கள். இது கிரக ஆலயமல்ல, நவக்கிரக சிவாலயம். இராஜபதி கைலாசநாதரை, கேது வந்து வணங்கினான்.

இராஜபதிக்கு வந்து செளந்தர்யநாயகி சமேத கைலாசநாதரை வணங்கினால் கேதுவின் தாக்கம் குறையும். இதுபோலதான், ஒவ்வொரு கிரகத் தாக்கத்தையும் ஒழிக்க வல்லதான அமைந்தது இந்த நவகைலாயங்கள் ஆலயம். தோஷங்களை விலக்கி வைக்கும் அதிகாரம் சிலவானதை, சிவபெருமான் நவக்கிரங்கங்களுக்கு அளித்து அருளச் செய்ய பணித்துள்ளார். ஆனால், நவகைலாயங்களில், தன் அருட்கடாஷத்தால் பக்தர்களை காத்து வருபவர் செளந்தர்யநாயகி உடனுறை கைலாசநாதர் ஆலயமாகும். நவகைலாயங்களில் கேது ஸ்தலமாக அமைந்துள்ளது. 

தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் அமையப்பெற்ற திருக்கோயில். நவகைலாயத் தலங்கள் உருவாக காரணகர்த்தர் உரோமச முனிவர் ஆவார். உரோமச முனிவர், அகத்தியரின் முதல் சீடர் ஆவார். தனக்கு முக்தி வேண்டி, குருவான அகத்தியரிடம் விண்ணப்பம் செய்ய அதற்கு அகத்தியப் பெருமானோ, நினைத்தவுடன் முக்தியை அடைவது என்பது, இயலாத செயல், எனினும் உனக்கு நான் தரும் இந்த மலர்களைக் கொண்டு, நான் கூறியபடி செய்க என்றார்.
 
உரோமச முனிவரும், தன் குருவான அகத்தியர் தந்த ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் பயணிக்க விட்டு மலர்களைத் தொடர்ந்து செல்கிறார். முதலாவது மலர் பாபநாசம் எனும் தலத்து ஆற்றுக் கரையில் கரை ஒதுங்கி நிற்கிறது. இது சூரிய பகவான் அம்சம். பொதிகை மலையடிவாரத்தில் இருக்கிறது. திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இங்கே உரோமச முனிவர் தன் கைப்பட சிவலிங்க பிரதிஷ்டை நிர்மாணித்து வணங்குதல் செய்து கொள்கிறார். இங்கு வணங்கியபின், அடுத்த மலர் எங்கே தாமதித்து நிற்கிறதை என்பதைக் காண, ஆற்றின் நீரோட்டத்தோடு செல்கிறார். சிறிது தூரம் வந்து சேர்ந்ததும், இரண்டாவது தாமரை மலர் சேரன்மகாதேவி தலத்து ஆற்றுக் கரையில், கரை ஒதுங்கி நிற்பதைக் காணுகிறார்.

இது சந்திரபகவான் அம்சம், திருநெல்வேலியிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கேயும் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி விட்டு, பழையபடி ஆற்றின் வழிப்போக்கைத் தொடர்கிறார் உரோமச முனிவர். மூன்றாவது தாமரை மலர் ஒதுங்கி நிற்கும் இடமான கோடகநல்லூர் ஆற்றுக் கரையில் ஒதுங்கியது தெரியவும், அங்கேயும் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடுகளை முடித்துப் புறப்படுகிறார். இது, செவ்வாய் பகவான் அம்சம் கொண்டவை, திருநெல்வேலி - சேரன்மகாதேவி சாலையில், நடுக்கல்லூரி வரும், இங்கிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அடுத்து நான்காவதான தாமரை மலர் குன்னத்தூர் ஆற்றுக்கரை தலத்தில் கரை ஒதுங்குவதைக் காணுகிறார். அவ்விடத்தில் லிங்கத்தை நிறுவி, வழக்கம்போல தம் வணக்க வழிபாட்டை முடித்து தன் பயணத்தைத் தொடர்கிறார். இது, ராகுபகவான் அம்சம் கொண்டவை, திருநெல்வேலியிலிருந்து 7 கி.மீ தொலைவுக்குப் பின் வரும் மேலத் திருவேங்கடநாதபுரம் அருகாக அமைந்துள்ளது.

ஐந்தாவதான தாமரை மலர் முரப்பநாடு எனும் தலத்து ஆற்றில் கரை ஒதுங்க, அவ்விடத்திலும் லிங்கப் பிரதிஷ்டை செய்து, வழிபாட்டை மேற்கொள்கிறார். இது, குருபகவான் அம்சம் கொண்டவை, இவை, திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தொடர்ந்து ஆறாவதாக தாமரை மலர் திருவைகுண்டம் என்ற இடத்தில் கரை ஒதுங்குகிறது. இங்கேயும் லிங்கப் பிரதிஷ்டை நிர்மாணித்து வணங்கிப் புறப்படுகிறார்.

இது, சனிபகவான் அம்சம் கொண்டவை, திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஏழாவதான தாமரை மலர் தென்திருப்பேரை என்ற தல ஆற்றுப்படுகையில் ஒதுங்கி இருக்க, அங்கேயும் ஈசனுக்கு லிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி, எட்டாவதான மலரைத் தேடி புறப்பட்டுச் செல்கிறார். இது, புதன் பகவான் அம்சம் கொண்டவை, திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில், 38 கி.மீ பயணிக்கையில் ஆழ்வார்திருநகரி எனும் ஊர் வரும், இதனருகாக அமைந்துள்ளது. எட்டாவதான தாமரை மலர், இராஜபதி தல தாமிரபரணி ஆற்றில் தாமதித்து நின்ற இடத்திலேயே லிங்க பிரதிஷ்டை செய்து வணங்குகிறார்.

இது, கேது பகவான் அம்சம் கொண்டவை, இவை, தென் திருப்பேரையிலிருந்து சுமார் 1 கி.மீ குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளது. இதுவரை தாமரை மலர்கள் ஒதுங்கித் தங்கிய இடங்களில், தாமிரபரணி ஆற்றுப்படுகையோரமாக இருந்தாலும், லிங்கம் நிர்மானிப்பதை சற்று தள்ளியே நிர்மானித்து வணங்கினார் உரோமச முனிவர். இந்த எட்டாவது தலமான இராஜபதியில் மட்டும், மலர் தங்கிய இடத்தில், ஆற்றை ஒட்டி மிக அருகிலேயே லிங்கத்தை நிர்மானித்து வணங்கிக் கொள்கிறார்.

இராஜபதியில் லிங்கத்தை பிரதிஷ்டை முடித்து விட்டு, ஒன்பதாவது மலரைத் தேடி பயணமாகிறார் உரோமச முனிவர். ஒன்பதாவது மலர் சேர்ந்த பூ மங்கலம் தல ஆற்றுக் கரையில் ஒதுங்கி நிற்க, இங்கேயும் தன் கைப்பட லிங்கம் நிர்மானித்து வணங்கித் திரும்புகிறார். இது, சுக்கிரன் பகவான் அம்சம் கொண்டவை, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில், ஆத்தூர் - அடுத்து, புண்ணைக்காயல் செல்லும் வழியில், சுமார் 3 கி.மி தொலைவில் அமைந்துள்ளது.

இந்த நவகைலாயத் திருத்தலம் ஒன்பதில் எட்டு தாமிரபரணி நதிக்கரையோரமாவும், இராஜபதி ஆலயத் தலம் ஒன்று மட்டும் நதியின் மிக அருகேயே ஈசன் பேரருள் கொண்டு அமையப் பெற்றன. ஒன்பது மலர்கள் தாமிரபரணியில் தாமதித்த இடங்களில், ஒன்பது லிங்கப்பிரதிஷ்டைகளை நிர்மாணித்து, மனவருள் வேண்டுதலாலும், தனது குரு அகத்தியரின் குருவருளாலும், ஈசனின் கருணையைப் பெற்று, உரோமச முனிவருக்கு அவரின் எண்ணம் ஈடேற மகிழ்வான முடிவைப் பெற்றடைந்தார்.

உரோமச முனிவர் நிர்மானித்த நவ லிங்கங்களும் நவ கைலாயத் தலமாக ஆனது. இந்த ஒன்பது ஆலயங்களிலும், சுவாமி கைலாசநாதர், அம்மை செளந்தர்யநாயகியாக அருள்பாலித்து, பக்தர்களின் குறைகளை நீக்கிய வண்ணம் இருந்தது வரலாறு. ஆனால், ஈசன் ஒரு திருவிளையாடலை நடத்த வேண்டும் என்று அன்றே நினைந்திருந்தானோ என்னவோ என்று நினைத்திருந்தோமே? அது என்ன என்று, இப்போதுதான் புரிகிறது.

அதனால்தான் இராஜபதியில் தாமரை மலர் ஒதுங்கிய இராஜபதி ஆலயத்துக்கு அழிவு ஏற்படச் செய்து, பின் விண்ணெழச் செய்தது, அன்றைய அந்த அழிவு இன்றைய மேன்மை என புரிதல் தெரிகிறது. உரோமச முனிவர் லிங்கம் வைத்து நிர்மாணித்த இராஜபதி கைலாசநாதர் ஆலயத்தை ஒட்டி தாமிரபரணியானவள், மிகப் பெரு ஆழிபோல வெள்ளம் சூழவே, இதில் இராஜபதி கைலாசநாதர் ஆலயம் முற்றிலும் அழிந்து போனது.

அழிந்தவை அழிந்தவைதான், இராஜபதி ஆலயம் இருந்த இடத்தில், ஆலயத்தின் துரும்பு ஒன்றும் அங்கு இருக்கப் பெறவில்லை. ஆலயம் இருந்த தடம் முழுமையும் வெறும் மொட்டைத் தடமாக ஆகி இருந்தது. ஆற்று வெள்ளம் வடிய நீண்ட நாட்களாகிப் போனது. வெள்ள வடிதலுக்குப் பின், இராஜபதி ஊர்மக்கள், ஆற்றோராமாக நடமாடத்தை துவங்கினார்கள். அப்போது ஆற்று ஓரமாய் லிங்கத் திருமேனி ஒன்று கிடப்பதைக் கண்டனர். திரும்ப ஊருக்குள் வந்து மேலும் பலரை துணைக்குச் சேர்த்துக் கொண்டு, லிங்கத் திருமேனியை பார்வையிட்டபோது, இது, நம்ம கைலாசநாதர் ஆலயத்தின் ஆதிலிங்கம், உரோமச முனிவர் நிர்மானித்த ஆதிகைலாசநாத லிங்கமேதான் என அடையாளங்கண்டு தூக்கியெடுத்து வந்தனர்.

அழிந்தபோன ஆலயத்தின் ஓரமாய், ஓரிடத்தில் கைலாசநாதரை அமரச் செய்து விட்டனர், இவ்வளவுதான் இவர்களால் முடிந்தது. இராஜபதியில் ஊரிலுள்ளோர் சிலர் ஈசன் இருக்கும் நிலை பொறுக்காது, பனையோலைகள் கொண்டு வேய்ந்து, ஆதிகைலாசநாதருக்கு நிழலைக் கொடுத்து, வெயிலைத் தடுத்தனர், இவ்வளவுதான் இவர்களால் முடிந்தது.

நவகைலாயங்களில் இராஜபதி ஆலயத்தைத் தவிர, மற்ற எட்டு ஆலயங்களும், பக்தர்களின் வருகையும், சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும் நடந்த வண்ணம் இருந்தது. எட்டாவதான இராஜபதி ஆலயத்தில் மட்டும், சுவாமிக்கு ஆராதனை இல்லை, ஏன் ஒரு பக்தர் கூட வருகை இல்லை. பனையோலை நிழலில், ஈசனும் பொறுமையாக அமர்ந்திருந்தார்.

இப்படியேதான் நானூற்றி இரண்டு வருடங்களாக நவகைலாய இராஜபதி ஆலயம் இருந்த இடம், ஆலயம் இல்லாமல் இருந்தது. ஆனால், நானூற்று இரண்டு வருடங்களுக்கு முன்பே, ஈசன் ஒரு திருவிளையாடலை விளைவிக்க எண்ணியிருந்தான்போல. அந்தத் திருவுளையாடல்தான், அப்போதைய இராஜபதி பூமித் தடத்தில், இப்போதைய ஆலய புதிய எழுச்சிப் பரிமாணம் விண்ணி நிற்கிறது.

அதுவும், ஏழ்நிலை இராஜகோபுரத்துடன், ஆகம முறைப்படி, அறுபத்து நாயன்மார்கள் திருமேனியுடன், உலா வர பஞ்சமூர்த்திகள் உள்பட எவ்வளவு நாட்கள், அபிஷேக ஆராதனைகள் இல்லாதிருந்ததோ, அதெற்கெல்லாம் மேலாக இப்போது அதிகமாக சிவாச்சாரியார்கள் பங்காற்றி வருகிறார்கள். இங்கு வருகிற 14.06.19 அன்று ஏழுநிலை இராஜகோபுரத்திற்கு மகாகும்பாபிஷேம் நடைபெறுகிறது.

இருந்த கர்மவினையை ஒழிக்கவும், புண்ணியத்தைப் பெறவும் ஆலயத் தொண்டு, கும்பாபிஷேக நிகழ்தலில் கலந்துகொள்கின்ற ஒன்றினாலேயும் ஒழிக்க முடியும். கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள 14.06.2019 அன்று நவகைலாய இராஜபதி தல ஆலயத்திற்கு வாருங்கள். இராஜகோபுர வேலைகள் முடிந்தது. மகாகும்பாபிஷேக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஏழுநிலைத் திருக்கோபுரம் வணக்கத்திற்கு தயாராக உள்ளது. அருளான இராஜபதி ஏழுநிலை இராஜகோபுர மகாகும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தவற விட்டுவிடாதீர்கள்.

ஆலயம் அமைவிடம்

திருச்செந்தூருக்கு அருகில் காமையில் அமைந்திருக்கிறது. குரும்பூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் இருக்கிறது இராஜபதி எனும் ஊர். நவகைலாயங்களில் எட்டாவதான, கேது தலமுமானது இது. அகத்தியரின் சீடர் உரோமகரிசி, முக்தி பேறுக்காக, உருவாக்கி வணங்கி பூஜித்த ஆதிகைலாசநாத லிங்கம் இங்கு உள்ளது. மேலும், இத்தலத்தில் நவலிங்கம் இருக்கிறது, வினைத்தாக்கம் உள்ளவர்கள், இங்கு வந்து தங்கள் கைபடவே நவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு

கோவை கு.கருப்பசாமி - 9994643516

சிவத்திரு குரு பாலசுப்பிரமணியன் - 98422 63681 

சிவத்திரு ச. லெட்சுமணன் சிவாச்சாரியார் - 97873 82258

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com