ஒரு ஜாதகரின் தொழில் பற்றி ஜோதிடம் சொல்வதென்ன?

ஜோதிடத்தில், சர்வாஷ்டக முறையில் காணும் பலன்கள் மற்றும் வர்க்க சக்கரங்கள் மூலமாகப் பலன்களை..
ஒரு ஜாதகரின் தொழில் பற்றி ஜோதிடம் சொல்வதென்ன?

ஜோதிடத்தில், சர்வாஷ்டக முறையில் காணும் பலன்கள் மற்றும் வர்க்க சக்கரங்கள் மூலமாகப் பலன்களை உறுதிப்படுத்துதல் போன்றவை இன்று வட இந்தியாவில் கணித்துக் கூறுகிறார்கள். இவை இரண்டுமே, பராசரர் மனித சமுதாயத்திற்களித்த பெரிய ஜோதிட பொக்கிஷங்கள் என்றால் அது மிகை ஆகாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளது. முதலாவதாக அவற்றைப் பற்றிய ஜோதிட விதிகள் அனைத்தும் சமஸ்க்ரிதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அங்குள்ளவர்கள் சமஸ்கரிதத்திலிருந்து அதனை ஹிந்தியில் மொழிபெயர்க்கப் பட்டு பொது வழக்கத்தில் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் அதற்கான கட்டணம் அதிக அளவில் வாங்க செய்கின்றனர். அதற்கேற்ப மிகப்பெரிய அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்களால் அதனைக் காண முடிகிறது. இங்குள்ளவர்கள், அதனை கற்கவும் செயல்படுத்தவும் முடியாத நிலையில் உள்ளனர். 

அப்படியே யாராவது சிலவற்றை கடினப்பட்டு கற்றுணர்ந்து கூறினாலும் அதனை காப்பி அடித்து அதனை தாம் கூறியது போல் பீற்றிக்கொள்பவர்கள் அதிகம். சர்வாஷ்டக வர்கத்தின் முதல் புத்தகம் C.S.பட்டேல் என்பவரின் அதிக முயற்சியில் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் போன்ற இருமொழிகளில் எழுதப்பட்ட நூல், 1955-ல் அவரின் பெருமுயற்சியால் இவ்வுலகிற்குக் கொண்டுவரப்பட்டது. 

அதனை இங்குள்ளவர்கள் அதிகமாக பயன்படுத்துவது கிடையாது. அதேபோல் பராசரரின் வர்க்க சக்கரங்களை இங்குள்ளவர்கள் பயன்படுத்துவது கிடையாது. அதனை தமிழ் மக்களாகிய உங்களுக்கு அதன் மூல கொள்கைகளை மட்டும் இங்குத் தெளிவாக இந்த கட்டுரையில் கொடுத்துள்ளேன். இதனை இங்குள்ள ஜோதிடம் பயிலும் மாணாக்கர்களின் ஜோதிட  அறிவை பெருக்குவதற்கு அடித்தளமாக இருக்கும் என நம்புகிறேன். ஏதோ ஒரு சிலர் இந்த வர்க்க சக்கரங்களை பற்றி ஆய்வு செய்து பலன்களை 
உரைக்க முற்பட முயன்றால் நான் அதில் மிக மகிழ்ச்சி அடைவேன். அதோடு இந்த வர்க்க சக்கரங்களைக் கொண்டு நேரடியாக பலன் உரைக்க இயலாது என்பதனை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும். D-1 எனும் ராசி சக்கரத்தில், தேடும் பலனுக்கான வாய்ப்பு இருப்பின் அதன் விரிவான விளக்கத்தினை, இந்த வர்க்க சக்கரங்கள் மூலம் தெளிவு படுத்த மட்டுமே வாய்ப்புள்ளது. 

தசாம்சம் எனும் D-10 எனும் வர்க்க சக்கரம் கூறும் அல்லது அதன் மூலம் நாம் அறியும் தகவல்கள் என்ன என்பதனை இப்போது அறியலாம். 

1. தசாம்ச சக்கரத்தின், லக்கினம், அதனைப் பார்க்கும் சுப, அசுப கிரகங்கள் போன்றவற்றைக் கொண்டு, ஜாதகரது உத்தியோகத்தில் / அவர் செய் தொழிலில், அவரின் அணுகுமுறை மற்றும் இயல்பு பற்றி அறிய முடியும். தசாம்ச சக்கரத்தின், லக்கின அதிபதி, எந்த இடத்தில் அமர்கிறாரோ அந்த இடத்தின் காரகத்துப்படி உத்தியோகம் மற்றும் தொழில் அமையும். உதாரணமாக, ஒருவரின் லக்கினாதிபதி, 6 ஆம் இடத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகர் ஏதேனும் ஒரு  சேவை செய்யும் தொழிலைச் செய்வார் எனலாம். 

2. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 2ஆம் இடத்தைக் கொண்டு அவர் எந்த மாதிரியான மக்களுடன் வேலை செய்வார் என்பதைப் பற்றியும் அவரின் வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆதாரம் / வளங்கள் / உபகரணங்கள் போன்றவற்றைப் பற்றியும் கூறும். மேலும், ஜாதகரின் தொழில் சார்ந்த செல்வா நிலை, சமூக அந்தஸ்து மற்றும் பேச்சுத் திறன் போன்றவற்றைத் தெரிவிக்கும்.

3. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 3ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், தமது முயற்சி, படைப்பாற்றல், தகவல் தொடர்பு திறமைகள், ஒப்பந்தங்கள் மற்றும் சிறுசிறு தடைகள் போன்றவற்றைக் கூறும். மேலும் இதன் அதிபதி மூலம், சிறு தூரப் பயணம் பற்றியும் கூறும். 

4. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 4ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவரது உத்தியோகத்தில் / தொழிலில் அவர் பெறும் மகிழ்ச்சி, சூழல் / சுற்றுப்புறம் போன்றவற்றைப் பற்றி அறியலாம். மேலும் இதன் மூலம் ஜாதகரின் பிறந்த நேரத்தைச் சரிப்படுத்த உதவும். 5. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 5ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், வியாபாரத்தில்/ தொழிலில் அவரிடம் வேலை செய்யும் ஊழியர்கள், அவரின் புகழ் மற்றும் அவர் இடும் கட்டளைகளை அவரின் கீழ் பணி புரியும் மற்றவர்கள் பின்பற்றுவது பற்றியும் கூறும்.

6. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 6ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், செய்யும் சேவையைப் பற்றியோ அல்லது அந்த சேவைக்குத் துணை புரிபவர்கள் பற்றியோ அறிய உதவும். பொதுவாக , ஒருவருடைய ஜாதகத்தில் 2, 6, 10ஆம் இடங்கள் அவருடைய இயல்பான வேலை என்னவென குறிகாட்டும். ஆனால், திரைப்படத்துறை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு 3, 7, 11ஆம் இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

7. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 7ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவருடன் பணிபுரிபவர்களுடன் ஆன தொடர்பு / பழக்க வழக்கங்கள் பற்றி அறிய முடியும். இதில், சுபக் கிரகம் இடம் பெற்றால், மிகவும் சுலபமான / சந்தோஷமான வாழ்க்கை அமையப்பெறுவார். உதாரணமாக, இங்கு சுக்கிரன் / சந்திரன் போன்ற கிரக அமர்வு, ஜாதகரை நிறைய பெண்கள் கூட்டத்திற்குள் வேலை செய்ய வேண்டி வரும். உதாரணம் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் இடம் போன்றவை. 

8. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 8ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவர் தொழிலில் / வேலையில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி அறிய உதவும். இந்த இடம் நீண்ட நாள் வேலை இழப்பைப் பற்றியும் தெரியப்படுத்தும். 

9. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 9ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவரின் மேல் அதிகாரி உடனான உறவை / தொடர்பை வெளிப்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தில் 9 ஆம் அதிபதியே மேலதிகாரி . ஒரு ஜாதகத்தில் லக்கின அதிபதி 9ஆம் இடத்தில் அமர்ந்தால், அந்த ஜாதகருக்கு அவரே மேல் அதிகாரி, அதாவது அவரை யாரும் தட்டி கேட்க முடியாது, ஏன் எனில் அவரே மேலதிகாரி ஆவதால், அவர் தனித்து இயங்க முடியும். இங்கு, 7ஆம் அதிபதியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ளுதல் அவசியம்.

10. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 10ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் கர்ம வினையைப் பற்றிக் கூறும். அதாவது இந்த ஜாதகர் போன பிறவியில் செய்த கர்மாவைப் பற்றியும் இந்த பிறவியில் அவர் படும் பாட்டைப் பற்றியும் தெரியப்படுத்தும். அதோடு அவரின் தொழில் / வேலை எந்த வகையில் அமையும் என்பதனை தெளிவுபடுத்தும். 

11. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 10ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் தொழிலுக்கு, நண்பர்களைப்போல் மற்றவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்பதனை எடுத்துரைக்கும்.

12. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 10ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் வேலை நிமித்தமாக வெளியூர் / வெளிதேச வாடிக்கையாளர் / விற்பனை போன்றவற்றை அறியலாம். இந்த வர்க்க சக்கரங்களைப் பயன்படுத்தி மென்மேலும் பல ஜாதகங்களை ஆய்வு செய்து மேலும் புதிய தகவல்களை அறிந்து இந்த மானிட சமுதாயம் நல் வாழ்வு வாழ வழி செய்ய தற்போதுள்ள இளைய ஜோதிடர்களைக் கேட்டு வேண்டுகிறேன்.
      
அனைவரும், சாயியைப் பணிவோம், நல்வாழ்வு பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com