பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்களில் முக்கிய பங்கு திதிகளுக்கு! (பகுதி 3)

பஞ்சமி என்றால் திதியின் ஐந்தாம் நாள் திதியாகும். இந்த பூரண திதி தெய்வங்களுக்கு..
பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்களில் முக்கிய பங்கு திதிகளுக்கு! (பகுதி 3)

 
பஞ்சமி

பஞ்சமி என்றால் திதியின் ஐந்தாம் நாள் திதியாகும். இந்த பூரண திதி தெய்வங்களுக்கு விசேஷமான திதி ஆகும். இந்த திதி சப்த கன்னியான வராஹி தேவி போற்றும் நாள் மற்றும் நாக ராஜாவுக்கு விசேஷமான நாட்கள். வளர்பிறையில் வரும் பஞ்சமி ஒரு கண்ணுள்ள திதி என்றும் தேய்பிறையில் வரும் பஞ்சமி இரு கண்ணுள்ள திதி என்பார்கள்.

பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் பெண் மேல் பிரியமுடையவன், கருமி, சந்தோஷம் அற்றவன், வேதத்தைப் படித்து ஆராயும் தன்மை கொண்டவன், மண்ணாசை கொண்டவன், நல்ல தேக அமைப்பு உடையவன் என்று அகத்தியர் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. பஞ்சமி திதியில் விஷம் முறித்தல், மருத்துவம் செய்தல், ஏவல் சூனியம் அகற்றவும்,  அறுவை சிகிச்சை முதலியன செய்வார்கள். 

சிம்ம மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி அன்று கருடனைப் பூஜை செய்வார்கள் அதை நாம் கருட பஞ்சமி என்று வழிபாடு செய்வார்கள். இந்த திதியில் பூஜை செய்தல் நாக தோஷம் விலகும் என்பது கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் சில வரைமுறைகள் உள்ளன. அதேபோல் ரிஷிகளுக்கும் கன்னி மாத வளர்பிறை ரிஷி பஞ்சமி அன்று விசேஷம்.

அதிதேவதை மற்றும் கிரகம்: நாகதேவதை, தேவ குரு 
வணங்கும் தெய்வங்கள்: வராஹி தேவி, திரிபுர சுந்தரி, நாக தெய்வங்கள்

சஷ்டி

சஷ்டி என்றவுடன் நம் ஆறுமுக கடவுள் நினைவு வந்திடும், சஷ்டி என்றால் ஆறாவது திதி ஆகும். இந்த திதியை நந்தை திதி என்பர். தேய்பிறையில் வரும் சஷ்டி இரு கண்ணுள்ள திதி என்றும் வளர்பிறையில் வரும் சஷ்டி ஒரு கண்ணுள்ள திதி என்றழைப்பர்.

வேத ஜோதிடத்தில் 6ம் எண்ணுக்குரியவர் சுக்கிரன். இந்த திதியில் பிறங்காவர்கள் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அந்த கிரகத்தின் காரகத்துவத்திற்கு ஏற்ப வீடு வாகனம், பொன்னும், பொருளும் தரக்கூடியவர். மேலும் இந்த திதியில் பிறந்தவர்களுக்கு முன்கோபம், மெலிந்த தேகம், அரசு உதவி பெறுபவர், மெலிந்த சோர்வானவன், எல்லாராலும் போற்றத் தக்கவன், காசநோய் உடையவராகவும் இருப்பார். சஷ்டி திதியில் புதிய நண்பர்களை சந்தித்துப் பேசுதல், சந்தோஷ கொண்டாட்ட கேளிக்கைகள்  முதலியன சிறப்பு கொண்டது.

இந்து சமயத்தினருக்கு உரிய முக்கியமாக முருகனுக்குரிய சிறப்பு நாளாகும். "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இவற்றின் அர்த்தம் சஷ்டியில்  (சட்டி) விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருக்கும் பெண்ணின் கருப்பையில் (அகப்பையில்) குழந்தை வளரும் என்பது அதன் பொருள். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். அன்று முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் விழாவாகும். இந்த திதியில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் என்னால் வளமும் 16 பேறும் கிட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கபிலா சஷ்டியில் (கன்னி மாதத் தே.சஷ்டி) இஷ்ட தெய்வங்களுக்குப் பூஜை செய்து, பசுமாட்டிற்கு உணவளித்துப் பூஜிக்கும் விரதம் சிறப்பானது. கார்த்திகை மாத கிருஷ்ணபட்ச சஷ்டி விநாயகருக்கு உகந்தது. 

திதியின் அதிதேவதை மற்றும் கிரகம்: முருகர், சுக்கிரன் 
வணங்கும் தெய்வங்கள்: செவ்வாய் (வளர்பிறை) முருகர் (தேய்பிறை)

சப்தமி

சப்தமி என்றால் ஏழாம் நாள் திதி ஆகும். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வரும் சூரியனுக்கு உகந்த திதி. தேய்பிறையில் வரும் சப்தமி இரு கண்ணுள்ள திதி என்பர். இந்த திதி பத்ரை திதி ஆகும். 

சப்தமி திதியில் பிறந்தவர்கள் உதவும் மனப்பான்மை உடையவர்கள், செல்வம் எட்டக்கூடியவர், பிரபுக்கள், எதையும் செயல்படுத்தும் தீரர்களாகவும், கண்டிப்பு உடையவன், நன்மை செய்வதே குறிக்கோளாகக் கொண்டவர். சப்தமி திதியில் பிரயாணம் செய்ய ஏற்ற திதி, அயல் நாட்டுப் பிரயாணத்திற்குக் காரியங்கள் செய்ய அனுகூலமான திதி.

திதியின் அதிதேவதை மற்றும் கிரகம்: சூரியன், சனி
வணங்கும் தெய்வங்கள்: ரிஷி மற்றும் இந்திரன் (வளர்பிறை) சூரியன் (தேய்பிறை)

தசமி

இந்த திதியானது பத்தாவது திதி ஆகும். பூரண திதி கடவுளின் அவதாரமாகக் கருதப்படுகிறது. வளர்பிறையில் வரும் தசமி இரு கண்ணுள்ள திதி என்பர். இந்த திதியில் மணிவிழாக்கள், ஆன்மீக வழிபாடு, முக்கியமாக தர்ம ராஜாவின் நாள். இந்த திதியில் பிறந்தவர்கள் தர்மவான், ஆச்சாரம் அனுஷ்டிக்கத்தக்கவன் ஒழுக்கமுடையவன், நட்பில் அன்பானவனாக, பெரியவர்கள் இடையில் அன்பு கொண்டவன், மனைவி மற்றும் உறவினருடன் பிரியமானவனாக, குற்றமற்ற யோகியவான். 

திதியின் அதிதேவதை மற்றும் கிரகம்: எம தர்மன், சந்திரன் 
வணங்கும் தெய்வங்கள்: வீரபத்திரர் மற்றும் தர்ம ராஜன் (வளர்பிறை) எமன் மற்றும் துர்க்கை (தேய்பிறை)

ஏகாதசி

ஏகாதசி திதியானது பதினொன்றாவது திதியாக வரும் ஒரு நந்தை திதி. வளர்பிறையில் வரும் ஏகாதசி இரு கண்ணுள்ள திதி என்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி குருட்டு திதி என்றழைப்பர். ஏகாதசி என்பது கடவுளுக்குப் பிரியமான முக்கியமான புண்ணியகாலம் கொண்ட திதி ஆகும். ஏகாதசியை விடச் சிறந்த விரதமில்லை என்பர். பரமனின் பாதம் (பரமபதம்) அடைய வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து விரதம் பரமனை பூஜை செய்ய வேண்டும். அந்த பரந்தாமன் நம் கேட்கும் வரம்  அனைத்தையும் நலமுடன் நிறைவேற்றி தன் பாதங்களில் அழைத்துச் செல்வர்.

ஏகாதசியில் பிறந்தவன் கல்வியில் சிறந்தவன், குருவுக்கு மரியாதையும் பிரியமும் உடையவன், நீதிமான், செல்வந்தன், அழகற்றவன், உலகமே போற்றத்தக்கவன், நினைத்ததைச் செய்பவன். இந்த திதிகளில் மருத்துவம் செய்யலாம், திருமணம் காரியங்களில் ஈடுபடலாம், சிற்ப காரியம், தெய்வ விழாக்கள் வழிபாடுகள் செய்யலாம். 
 
ஏகாதசி திதியின் அதிதேவதை மற்றும் கிரகம்: ருத்ரன், செவ்வாய் 
வணங்கும் தெய்வங்கள்: மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

துவாதசி

துவாதசி பத்தரை திதியில் அடங்கும். துவாதசி என்பது திதியின் பனிரெண்டாவது நாள் ஆகும். வளர்பிறை துவாதசி இரு கண்ணுள்ள திதி என்றும் தேய்பிறை துவாதசி குருட்டு திதி என்று கூறுவார். வாயுவின் வேண்டுகோளை ஏற்று மகாவிஷ்ணுவின் ஆதிக்கமுடைய நாட்கள் இந்த திதி. துவாதசி அன்றுதான் லக்ஷ்மி விஷ்ணு பத்தினி ஆனாள். துவாதசி அன்று லக்ஷ்மி நாராயணனைப் பூஜை செய்வதுடன் நெய், தேன் தானம் தருவது விசேஷம். இந்த திதியில் சிலை சிற்பக் கலையினை செய்தல், மத வழிபாடு, கோவில் காரியம் செய்தல், விளக்கு ஏற்றுதல், மதவிழா பணிகள் செய்யலாம்.

துவாதசியில் பிறந்தவர்கள் தான தர்மம் செய்பவன், நூதன தொழில் செய்பவன், நல்ல குணம் செல்வமுடையவன் புதுமை விரும்பி, பெண்கள் ரதியாகவும் ஆண்கள் மன்மதனாகவும் திகழ்வார்கள். ஏகாதசி உபவாசமிருந்து அடுத்த திதியான துவாதசி அதிகாலையில் இறைவனைப் பூஜித்து வஸ்திர தானம், அன்னதானம் செய்வது நம் நலனுக்கு மிக நல்லது.

`ஏகாதசி மரணம், துவாதசி தகனம்' என்ற பழமொழிப்படி ஏகாதசி திதியில் ஒருவன் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண்ணிய பலமாகக் கூறுகிறது.

அதிதேவதை மற்றும் கிரகம்: விஷ்ணு, புதன் 
வணங்கும் தெய்வங்கள்: மகாவிஷ்ணு ரூபம் உடைய தெய்வங்கள் (வளர்பிறை) மற்றும் சுக்கிரன் (தேய்பிறை)  

திரயோதசி

இந்த சபை திதி பதிமூன்றாவது நாளாக வரும். இந்த திதி வளர்பிறை திரயோதசி இரு கண்ணுள்ள திதி என்றும் தேய்பிறையில் வரும் திதியைக் குருட்டுத் திதி என்பார்கள். சிவபெருமான் பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷ பேரழிவிலிருந்து காப்பாற்றிய நாள் இந்த திரயோதசி. 

திரயோதசி தினம் விரதம் இருந்து, மாலை சிவாலயங்களில் நடைபெறும். பிரதோஷ வழிபாட்டில் நம்மால் முடிந்ததை அபிஷேகத்திற்குக் கொடுத்து பூஜையில் கலந்துகொள்ளலாம். நம்மில் இருக்கும் தோஷம் பாவம் அனைத்தும் சிவபெருமானின் அருளால் விலக்கிவிடுவார். சனிக்கிழமைகளில் வருவது 'மகா பிரதோஷம்' என்று சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. 
 
இந்த திதியில் பிறந்தவர்கள் செல்வ சீமானாகவும் பொய் புரட்டும் பேசுபவனாகவும், கீர்த்தி உடையானாகவும், அன்பு செலுத்துதல், வாக்கு சுத்தம் அற்றவன், உறவினர் இல்லாதவன், மாந்தீரிகன், கஞ்சனாகவும் இருப்பான். இந்த திதியில் அனைத்தும் சௌபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி செய்யலாம். இந்த திதியில் பெண் பார்க்கத் திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமணத் தடையை நீக்கும் பரிகாரம் செய்ய உகந்த திதி ஆகும்.

அதிதேவதை மற்றும் கிரகம்: மன்மதன், குரு    
வணங்கும் தெய்வங்கள்: மன்மதன் (வளர்பிறை) மற்றும் நந்தி (தேய்பிறை)

சதுர்த்தசி

சதுர்த்தசி திதி பதினான்காவது திதி ஆகும். சுக்கிலபட்ச சதுர்தசி ஒரு கண்ணுள்ள திதி என்றும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி குருட்டு திதி என்பர். 

இந்த திதியில் பிறந்தவர்கள் கோபக்காரன், தீங்கு செய்பவர்கள், களங்கம் செய்பவர்கள், பிறரை இகழ்பவன், குரோதம் உடையோன், பிறர் பொருளை அபகரிப்பவன் என்று கூறப்படுகிறது. இந்த திதியில் ஆயுதங்கள் உருவாக்கவும், பல் சீரமைத்தல், தைலம் தேய்க்க, விஷத்தைக் கையாளுதல், யாத்திரை செல்ல உகந்தது, தேவதைகளைப் பூஜை செய்தல், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. வளர்பிறை எனும் சுக்கில பட்சத்தில் மட்டும் சுபகாரியம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண்டும். 

திதியின் அதிதேவதை மற்றும் கிரகம்: மகா காளி, சுக்கிரன் 
வணங்கும் தெய்வங்கள்: காளி (வளர்பிறை) மற்றும் ருத்ரன் (தேய்பிறை)
முக்கிய திதிகளான அமாவாசை மற்றும் பௌர்ணமி பற்றிய விரிவான விளக்கம் பின்பு விரிவான கட்டுரையாக எழுதப்படும். 

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜோதிட நிலையம் 

- ஜோதிட சிரோன்மணி தேவி
whats App:  8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com