உலக யோகா தினம்: உடம்பு பாம்பாய் வளையனுமா? பதஞ்சலி முனிவரை ஆயில்ய நட்சத்திரத்தில் வணங்குங்க!

இன்று ஜூன் 21-ம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
உலக யோகா தினம்: உடம்பு பாம்பாய் வளையனுமா? பதஞ்சலி முனிவரை ஆயில்ய நட்சத்திரத்தில் வணங்குங்க!

இன்று ஜூன் 21-ம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. யோகாவைப் பற்றி முன்னெப்போதும் இல்லாத விழிப்புணர்வு தற்போது மக்களிடையே அமைதியாய் பரவி வர, அதற்கேற்றாற்போல் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐ.நா. சபை யோகா தினத்தை அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய அவசர உலகில் அனைவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டோம். அதனால் பல வியாதிகளை சுமந்து வாழ்ந்து வருகிறோம். யோகா உடம்பையும்  மனதையும் சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க  வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்குத் தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு  வடிவில் இருக்கும். குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும். மேலும் மனதும் புத்துணர்ச்சி பெறும்

நமது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும்! நாம் ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு - இவற்றில் எதைத் தேடி சென்றாலும் உலகில் வெற்றி பெற  வேண்டும் என்றாலும் உள்நிலை மாற்றம்தான் நோக்கம் என்றாலும் யோகப் பயிற்சிகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிகச் சுலபமாய்  கையாள வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.

நோய் வந்தபின் மருத்துவரிடம் சென்று அவர் தரும் மருந்துகளையும் மாத்திரைகளையும் சாப்பிடுவதைவிட நோய் வருமுன் யோகாசனங்களை செய்தால் நம் உடலோடு  சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல் காலங்கடந்து யோகா செய்வதால் பலன் கிடைக்காது.

ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசனங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆசனங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள  அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள் நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும்  ஓவ்வொரு ஆசனங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இன்று அவசரகதியில் வாழ்ந்துகொண்டு வருகிறோம். நேரமில்லை என்ற நொண்டிச்சாக்கை நீங்கள் மூட்டை கட்டிவைத்துவிட்டு நமது உடலுக்காகத் தினசரி அரை மணி  நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்கவேண்டும். முதலில் சற்று தினசரி தடுமாற்றம் ஏற்படும். பிறகு போகப்போக அன்றாட வாழ்க்கையில் யோகா ஓர் அங்கமாக  மாறிவிடும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம். 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்துச் செய்து வந்தால்  நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஜோதிடத்தில் யோகாசனத்திற்கான கிரக நிலைகள்

1. யோகாசனம் கற்கவும் தொடர்ந்து செய்யவும் ஒருவர் ஜாதகத்தில் லக்னம், முயற்சி பாவம் எனப்படும் மூன்றாம் பாவம் நிறைவேற்றும் பாவமான பதினோராம் பாவம்  ஆகிவை பலமாக இருக்க வேண்டும்.

2. காலபுருஷனுக்கு லக்னமாக மேஷமும் மூன்றாம் பாவமாக மிதுனமும் பதினோராம் பாவமாக கும்பமும் வருவதால் ஜாதகத்தில் செவ்வாய், புதன், சனி ஆகியவற்றின்  தொடர்பு அவசியமாகும்.

3. கிரகங்களில் விளையாட்டைக் குறிக்கும் செவ்வாயும் சுவாசத்தைக் குறிக்கும் புதனும் எலும்பைக் குறிக்கும் சனியும் தொடர்பு பெற்றிருக்கவேண்டும். இவற்றோடு உடம்பை  குறிக்கு சந்திரனும் தொடர்பு பெற்றிருக்கவேண்டும்.

4. உடம்பை எப்படி வேண்டுமானாலும் வளையும் தன்மை கொண்ட ராகு கேதுகளின் தொடர்பு லக்னம், மூன்று மற்றும் பதினோராம் பாவத்திற்கு தொடர்பு பெற்றால்  யோகாசனத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.

5. நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் பெரும்பேறினைப் பெற்றவர் பதஞ்சலி முனிவர். பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷன் தான் பதஞ்சலி  முனிவராக அவதரித்தார் என்று புராணம் கூறும். 27 நக்ஷத்திரங்களில் ஒன்பதாவது நக்ஷத்திரமான ஆயில்ய நக்ஷத்திரத்தின் அதிதேவதை ஆதிசேஷன் என நக்ஷத்திர  சிந்தாமணி மற்றும் நக்ஷத்திர சூக்தம் கூறுகிறது. ஆயில்ய நக்ஷத்திர சாரத்தில் லக்னமோ, ராசியோ, சனி, செவ்வாய் அல்லது புதன் ஆகிய கிரஹங்கள் நின்றால் அவர்கள்  யோகா கலையில் சிறந்து விளங்குவதைக் காணலாம். யோக குரு பாபா ராம் தேவ் அவர்களின் லக்னம் ஆயில்ய நக்ஷத்திர சாரத்தில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

6. வளையும் தன்மை பெறுவதற்கு மூலை ராசிகளின் தொடர்பும் லக்னத்திற்கோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களுக்கோ அமைய வேண்டும்.

7. யோகா ஆசிரியர்களாக அமைய ஆறு மற்றும் பத்தாம் பாவ தொடர்போடு குரு சனி இவர்களோடு கேதுவின் சேர்க்கையும் பெற வேண்டும்.

8. பிரபல யோகா குருமார்களின் ஜாதகங்களில் மூலை ராசிகளில் லக்னம் அமைவது அல்லது செவ்வாயின் வீடுகளில் லக்னம் அமைவது, சனியின் வீடுகளில் லக்னம்  அமைந்து செவ்வாய் உச்சம் பெறுவது போன்ற நிலைகள் காணப்படுகின்றன. மேலும் செவ்வாய் உச்சம் பெற்று நிற்பது, சந்திரன் உச்சம் பெற்று நிற்பது ஆகியவையும்  குறிப்பிடத்தக்க நிலைகளாகும்.

9. செவ்வாயின் வீடுகளை லக்னமாக பெற்றவர்களுக்கு மூன்றாம் பாவம் அல்லது பதினோராம் பாவம் புதனின் வீடுகளாக வருவது யோகாவில் சிறக்கச் சிறப்பான கிரக  நிலைகளாகும்.

10. ஓருவர் ஜாதகத்தில் ஆத்ம காரகனாகவோ உச்ச ராசியிலோ நின்று பல வர்க்கங்களில் வர்கோத்தம பலம் பெறுவது முக்கியமாக துவாதசாம்சத்தில் ஆட்சி, உச்ச வீடுகளில்  நின்று சுப பலத்துடன் நிற்பது ஆகியவை ஜாதகருக்கு சூரிய நமஸ்காரம் செய்யும் நிலையை ஏற்படுத்துகிறது.

11. ஒருவர் ஜாதகத்தில் மனோகாரகர் சந்திரன், மூளை மற்றும் நரம்புகளின் காரகர் புதன் ஆகியவர்கள் ஆட்சி உச்சம் மற்றும் கேந்திர திரிகோண பல பெற்று நிற்க அவர்கள்  ஆழ்நிலை தியானத்தில் சிறந்து விளங்கும் அமைப்பைப் பெறுகிறார்கள். 

யோக கலையில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய திருக்கோயில்கள்

1. பதஞ்சலி முனிவர் இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோக கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய  வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.

திருச்சி சென்னை சாலையில் பெரம்பலூருக்கு அருகில் திருப்பட்டூர் எனும் இடத்தில் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில் எனும் பிரம்மா மற்றும் குருவிற்கான கோயில் உள்ளது  அதன் அருகே பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியும் புலிக்கால் முனிவரின் திருக்கோயிலும் அமைந்துள்ளது. அங்குச் சென்று குரு, பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர்  ஆகியவர்களை வணங்குவது யோகக்கலையில் சிறப்பை தரும்.

2. அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் யோகக்கலைகளில் சிறந்து விளங்கியது புராணங்களின் வாயிலாக அறிய முடிகிறது. அவர்களின் ஜீவ சமாதிகளை வணங்குவது,  தாம்பரம் கேம் ரோடு அருகே பதினெட்டு சித்தர்களுக்கான ஆலயத்தில் சென்று வழிபடுவது ஆகியவை யோகக்கலை பயில விரும்பும் மற்றும் யோக கலை ஆசிரியர்களாக  விளங்கச் சிறந்த வழிபாட்டு தலங்களாகும்

3. தமிழ் சித்தர்களின் முதற்கடவுளாக விளங்குபவர் முருகப் பெருமானாவார். அவரே செவ்வாய்க்கும் அதிபதியாவார். அவரை பழனி மலையில் சென்று தரிசிப்பது  யோககலையில் சிறந்த நிலை அடைய உதவும்.

4. சிதம்பரம் நடராஜ பெருமானின் நடன நிலை யோகக்கலையின் உச்ச நிலையினை குறிக்கும் அம்சமாகும். சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம், திருவாலங்காடு  ஆகிய பஞ்ச சபைகளில் நடராஜ பெருமானை வணங்குவது, நடனம் யோககலை ஆகியவற்றில் உன்னத நிலை அடைய செய்யும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com