உதவிக்காகக் காத்திருக்கிறது கீழப்பாலையூர் சிவன்கோயில்! 

குடவாசல் அடுத்த மஞ்சகுடியில் இருந்து தெற்கில் 3 கி.மீ தூரம் சென்றால் கீழப்பாலையூர்
உதவிக்காகக் காத்திருக்கிறது கீழப்பாலையூர் சிவன்கோயில்! 

குடவாசல் அடுத்த மஞ்சகுடியில் இருந்து தெற்கில் 3 கி.மீ தூரம் சென்றால் கீழப்பாலையூர் அடையலாம். பாலை மரங்கள் நிறைந்த ஊராதலால் பாலையூர் என  அழைக்கப்பட்டிருக்கலாம். இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். 

மனு நீதி சோழன் அமைச்சரவையில் இருந்த உபய குலாமலனின் வழித் தோன்றலான சந்திரசேகரனாதி விடங்கனான குலோத்துங்கசோழ மகாபலிவாணன் என்பார் தஞ்சை  பெருவுடையார் கோயிலுக்கு நில தானங்கள் செய்தபொழுது இந்த பாலையூரையும் தானமளித்திருக்கிறார். 

ராஜராஜன் காலத்தில் இவ்வூரில் ஒரு சமண பள்ளியும் கம்மாள சேரியும், ஓர் தாழ்த்தப்பட்டோர் சேரியும் பெரிய குளமும் இருந்துள்ளன. இவ்வூரில் இருந்து 12,530 கலம் நெல் தஞ்சைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் தஞ்சை கோயில் தென்புற கருவறையின் சுவரில் வெட்டப்பட்டுள்ளது. இவ்வூர் இங்கன்(என்கண்) நாட்டிற்கு உட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. 

சிவாலயம் பல மாற்றங்கள் கண்டு தற்போது சிறிய கோயிலாக உள்ளது கோயிலின் தென்புறம் பெரிய குளம் உள்ளது. கிழக்கு நோக்கிய கோயில், சிறிய கோயிலாக  இருப்பினும் கட்டுமலை கோயில் போல பன்னிரெண்டு படிகள் உயரத்தில் இறைவன் கைலாசநாதர் வீற்றிருக்கிறார். நந்தியும் அதற்கு ஏற்றார்போல் உயரமாக  வைக்கப்பட்டுள்ளார். இறைவனின் கருவறை வாயிலில் விநாயகர், முருகன் உள்ளனர். தென்புறம் நோக்கியபடி தனி சன்னதியாக இறைவி கனகவல்லி உள்ளார். 

கருவறை தென்புறம் தனிமாடத்தில் தென்முகன் உள்ளார். வடபுறத்தில் துர்க்கை உள்ளார். வடபுறத்தில் பெரிய வன்னி மரம் ஒன்றுள்ளது அதனடியில் நாகரும், முருகன்  போன்ற? சிலையும் இன்னொரு சிலையும் உள்ளன. வடகிழக்கில் கால பைரவர், நவக்கிரகங்கள் உள்ளன. கோயிலின் எதிரில் ஒரு அரசமரத்தடியில் ஒரு லிங்க பாணம்  உள்ளது. 

மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஊரானது இன்று உள்ளடங்கிய அமைதியான கிராமமாக உள்ளது. தஞ்சை கோயிலுக்கே படியளந்த ஒரு ஊரின் சிவாலயம் இன்று ஒரு கால  பூஜையின் கீழ் உள்ளது. காலம் எதனையும் உள்வாங்கிச் செரிக்கும் என்பதை மனதில் இருத்திக்கொள்வோம். ஆன்மிக அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம். 

வாருங்கள் கிராம சிவாலயம் செல்வோம்.

- கடம்பூர் விஜயன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com