அனைத்து தேர்வுகளில் அபார வெற்றிபெற அக்ஷய த்ரிதியை நாளில் ராஜ மாதங்கியை வணங்குவோம்!

இன்று அக்ஷ்ய த்ரிதியை. நகை கடைகளிலும் கோயில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.
அனைத்து தேர்வுகளில் அபார வெற்றிபெற அக்ஷய த்ரிதியை நாளில் ராஜ மாதங்கியை வணங்குவோம்!

இன்று அக்ஷ்ய த்ரிதியை. நகை கடைகளிலும் கோயில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. அனைவரும் ஏதாவது ஒரு உயர்ந்த பொருளை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வலம் வந்துகொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் உண்மையில் அக்ஷய த்ரிதியை தினத்தன்று நிரம்பி வழியும் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டு உள்ளே சென்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. கடந்த சில ஆண்டுகளில் வணிக நோக்கத்தில் கிளப்பி விடப்பட்ட மாயைதான் இது. 

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் த்ரிதியை, 'அக்ஷய த்ருதியை எனப்படுகிறது. 'அக்ஷயம்' என்றால் வளர்வது என்றும், எப்போதும் குறையாதது என்றும் அள்ள அள்ளக் குறையாது அள்ளித்தரும் என்றும் பொருள். இதற்கு உண்மையான அர்த்தம் என்ன வென்றால் இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான தர்மங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான். 

வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அக்ஷய பாத்திரம் பெற்றதும், மணிமேகலை அக்ஷய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அக்ஷய த்ரிதியை தினத்தில்தான் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

இந்து இதிகாசப்படி, அக்ஷய திரிதியை தினத்தன்று வேத வியாசரை மகாபாரத இதிகாசத்தை எழுதச் சொல்லி அறிவுக்கும் தடைத் தகர்ப்புக்குமான கடவுள் விநாயகர் கட்டளையிட்டார். மேலும் பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. புராண வேத புத்தகங்கள் அவர் எவ்வாறு கடலிலிருந்து நிலத்தை பரசு வீசி மீட்டார் என்பது பற்றிக் கூறுகின்றன.

இந்த நாளில் குபேரர் விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான அதிதேவதையான லக்ஷ்மியை வணங்குவார் என ‘லக்ஷ்மி தந்தரம்’கூறுகிறது. இந்த நாளில், குபேர லக்ஷ்மி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது உணவு. உணவின்றேல் உடல் வாழாது. உடலை இடமாகக் கொண்டு செயல்படும் உயிரும் நிலைபெறாது. அதனால் உணவு உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. 

அன்னதானமே உலகில் செய்யப்படும் தானங்களில் மிக உயர்ந்த தானமாக இருக்கிறது. உணவு வழங்கும் புண்ணியமானது, ஆன்மாவை பிறவிகள்தோறும் தொடர்ந்து வந்து பலன் தருகிறது. அதிலும் ஞானிகளுக்கு அளிக்கும் உணவு ஆயிரம் மடங்கு புண்ணியம் தருவதாகும். உலக உயிர்களுக்குத் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியே உணவு வழங்கும் மேன்மையை உலக மக்களுக்கு உணர்ந்துதானே அன்னபூரணியாகக் கையில் உணவுப் பாத்திரம்-கரண்டி ஏந்தி காட்சி தருகிறாள்!

கிரேதாயுகத்தில் வருமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரைச் சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒருபடி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ எனச் சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அக்ஷயத் த்ரிதியை அன்றுதான்.

ச்யாமளா என்றும், 'ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் 'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவளான ஸ்ரீ ராஜ மாதங்கியின் அவதார தினமும் அக்ஷய த்ரிதியை நாளில் தான் ஏற்பட்டது என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

உலகின் சிறப்பான நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் ஒருநாள் இருப்பதைப் போல அன்னதானத்திற்கு உரிய சிறப்பு நாளாக அக்ஷய த்ரிதியை நாள் கருதப்படுகிறது. அக்ஷயத்ரிதியை என்ற இரண்டு சொற்களையும் சேர்த்து, அக்ஷய த்ரிதியை என வழங்குகிறார்கள். சித்திரை மாதத்து வளர்பிறை மூன்றாம் நாளான த்ரிதியை நாளையே அக்ஷய த்ரிதியை என்று கொண்டாடுகிறோம்.

ஜோதிட ரீதியாக அக்ஷய த்ரிதியை

ஜோதிட ரீதியாகப் பார்க்கும் போது நவக்கிரகங்களில் சூரியனை பித்ரு காரகனாகவும் சந்திரனை மாத்ரு காரகனாகவும் அழைக்கின்றோம். இவ்விரண்டு கிரகங்களும் ஓரே நாளில் உச்சபலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அக்ஷய த்ரிதியை என அழைக்கப்படுகிறது. அதாவது, மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நன்னாள் ஆகும்.

மேலும் சூரியன், சந்திரன் இவர்கள் இருவரும் பலம் பெற்றும் இருக்கும் நன்னாள் அக்ஷய த்ரிதியை என்பதால் அதில் நாம் மேற்கொள்ளும், பூஜைகளும், தானதர்மங்களும், தர்ப்பணங்களும், தொழில் மற்றும் திருமண நிகழ்வுகளும், பொருட்களை வாங்குதல் என அனைத்தும் பன்மடங்காகும், தான தர்மத்தின் மூலம் கிடைக்கும் பலன்களும் பன்மடங்கு பெருகி நம்மை வாழ்விக்கும்.

தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள். இந்த நாளில் நாம் எந்த வரம் கேட்டாலும் குறைவில்லாமல் கிடைக்கும், அல்லவா? இந்தவருட அக்ஷய த்ரிதியை நாளில் பல உன்னத யோகம் தரும் கிரக அமைப்பு காணப்படுகிறது.

இன்று அக்ஷய த்ருதியை நாளில் கோசாரக ரீதியாக சூரியன் மேஷத்தில் உச்சமும், சந்திரன் ரிஷபத்தில் உச்சமும் பெற்று தன காரக குரு சூரியனை பார்க்க லக்ஷ்மியை அதிபதியாக கொண்ட சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து நிற்கும் அமைப்பைக் கொண்டுள்ள நாளில் அக்ஷய த்ருதியை வந்துள்ளது ஒரு சிறப்பான அம்சமாகும். 

இன்றைய தினம் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை வாங்க மட்டுமன்றி, வணிகத்தினைத் துவங்குதல், பூமி பூஜை போடுதல், புதிய கலையினைக் கற்க ஆரம்பித்தல் போன்றவற்றுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது.

அக்ஷய திருதியை அன்று சூரிய ஆதிக்கம் பெற்ற கோதுமை, சந்திரனின் ஆதிக்கம் பெற்ற அரிசி, பார்லி சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வாங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் உணவுக்குப் பஞ்சம் வராது. நமக்கு உணவுப் பஞ்சம் இல்லாமல் இருந்தாலே பிறகு அன்னதானம் தருகிற நிலை அமையும். இந்த அன்னதான புண்ணியத்தால் முன் ஜென்ம பாவங்கள் குறைந்து, பொன் - பொருள் சேரும். அடுத்த தலைமுறையும் செழிப்பாக இருக்கும். புண்ணியங்கள் செய்தால்தான் பல நன்மைகள் நம் நிழல் போல் பின் தொடரும்.

சூரியனுக்கு அதிதேவதை சிவபெருமான் ஆவார். சந்திரனுக்கு அதிதேவதை அன்னபூரணி அல்லது அம்பாள் ரூபமான பெண் தெய்வம் ஆகும். மேலும், சூரியனை சூரிய நாராயணன் எனவும் (விஷ்ணு அம்சம்) மகாலக்ஷமியை சந்திர சகோதரி எனவும் வழங்கப்படுகின்றது. எனவை இந்த நாளில் சிவ பார்வதியினையோ அல்லது லக்ஷ்மி நாராயணரையோ வணங்க வாழ்வில் வளம் பல சேர்க்கும்.

இந்த அக்ஷய த்ரிதியை நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ லட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். மேலும் பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம். அது மட்டுமல்லாமல் வேதம் ஓதும் பிராமணர்கள், ஆசிரியர்கள், மூத்தோர்கள் ஆகியவர்களை வணங்கி ஆசி பெறுவதே சிறந்ததாகும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com