2- ஆம் முறை அத்திவரதர் தரிசனம் கிடைப்பது மிகப்பெரிய பாக்கியம்: நெகிழ்ச்சியில் பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஆதி அத்திகிரி வரதர் உற்சவத்தின் போது, தரிசனம் செய்ய இரண்டாம் முறையாக வாய்ப்பு என்பது
2- ஆம் முறை அத்திவரதர் தரிசனம் கிடைப்பது மிகப்பெரிய பாக்கியம்: நெகிழ்ச்சியில் பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஆதி அத்திகிரி வரதர் உற்சவத்தின் போது, தரிசனம் செய்ய இரண்டாம் முறையாக வாய்ப்பு என்பது தங்கள் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம் என பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
 காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள திருக்குளத்தின் கீழ் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். நீருக்கு அடியில் அத்திவரதர் இருப்பதால் அவரை எளிதில் பார்க்க இயலாது.
 அந்த குளத்தில் தண்ணீர் வற்றாது என்பதால், அவரது தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாள்களுக்கு மட்டுமே கிடைக்கும். கடந்த 1979-ஆம் ஆண்டில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்த அத்திகிரி வரதரின் தரிசனம், வரும் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை மீண்டும் கிடைக்க உள்ளது.
 அத்திகிரிவரதர் தரிசன காலத்தை பெரும் விழாவாக நடத்தவும், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த 48 நாள்களில் தரிசனம் செய்யவும் வருவர். பக்தர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக உற்சவ குழு அமைக்கப்பட உள்ளது.
 இந்நிலையில், அத்திகிரி வரதரை கடந்த 1979-இல் தரிசனம் செய்து, தற்போது இரண்டாம் முறை தரிசனம் செய்யவுள்ள பக்தர்கள் கூறியது:
 ராமகிருஷ்ண பட்டாச்சாரியார்(56), கோதண்டராமர் கோயில் நிர்வாகி, அரக்கோணம்
 1979-இல் நான் அரக்கோணத்தை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் வசித்து வந்தேன். அப்போது கஜேந்திர பக்த பிருந்த நிர்வாகியாக இருந்த கே.பி.வரதராஜன் என் 16-ஆவது வயதில் என்னை அத்திகிரிவரதரைக் காண பேருந்தில் அழைத்துச்சென்றார். அப்போது குளத்தில் நடுவில் இருந்த மண்டபத்தில் அத்திகிரிவரதர் சயன திருக்கோலத்தில் தரிசனம் அளித்தார்.
 மூங்கில் கொம்புகளால் இருபக்கமும் கட்டப்பட்டு குளத்தின் நடுவில் வரிசையில் பக்தர்கள் ஒருவர்பின் ஒருவராய் அனுமதிக்கப்பட்டனர். இந்த இரண்டாவது வாய்ப்பை அளித்த அத்திகிரி வரதரின் அனுக்கிரகம் கிடைத்தால் மூன்றாவது முறையும் நான் பார்ப்பேன்.
 ஏ.ஐ.எஸ்.வாசுதேவன்(46),
 ரயில்வே ஊழியர், அரக்கோணம்:
 நான் 6 வயதில் அத்திகிரி வரதரை எனது தாயாருடன் சென்று தரிசனம் செய்தேன். அப்போதே எனது தாயார் மீண்டும் அத்திகிரி வரதர் தரிசனத்தை நாம் பார்க்க வேண்டும்.
 அதற்காக பிரார்த்தனை செய்வோம் என்றார். அதேபோல் வரும் ஜூலை மாதத்தில் எனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் சென்று அத்திகிரி வரதரை தரிசனம் செய்ய உள்ளேன்.
 ஏ.ஜெயராமன்(73),
 அரசுப் பணி ஒப்பந்ததாரர், அம்பரிஷபுரம்
 அப்போதெல்லாம் காஞ்சிபுரம் செல்வது எல்லோருக்கும் பெரிய விஷயமாக இருந்தது. ஏனெனில் உணவு எடுத்துக் கொண்டு பேருந்தில் சென்று வரவேண்டும்.
 எங்களுக்கு அத்திகிரிவரதர் தண்ணீருக்கு மேலே வைத்திருப்பது 15 நாள் கழித்தே தெரியவந்தது. நான் சென்று பார்த்தபோது அத்திகிரி வரதர் சயனதிருக்கோலத்தில் இருந்தார்.
 இரண்டாவது முறையாக எனக்கு அத்திகிரி வரதரை காணக்கிடைத்த வாய்ப்பை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
 எஸ்.திருவேங்கடம் (64),
 ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர் (ஓய்வு) சின்னகைனூர்:
 நான் அப்போது சென்னையில் இருந்தேன். சென்னையில் இருந்து காஞ்சிபுரத்தில் அத்திகிரி வரதரைக் காண சிறப்பு பேருந்துகள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சயன திருக்கோலத்தில் அவரை தரிசித்தேன்.
 மேலும் அங்கு இருந்த நாமசங்கீர்த்தன குழுவினருடன் சேர்ந்து அப்போதே 3 மணி நேரம் நாமசங்கீர்த்தனத்தை குளத்தின் அருகில் செய்தோம்.
 தற்போது நான் வாழ்ந்து வருவதே இந்த தரிசன மற்றும் நாமசங்கீர்த்தன வாய்ப்புக்காகத்தான் எனக் கருதுகிறேன்.
 துளசி கருணாகரன்(54),
 அரக்கோணம்
 எனது 14-ஆவது வயதின்போதே நாம சங்கீர்த்தனம் செய்யும் குழுவில் இடம் பெற்று இருந்தேன். இதனால் எனக்கு அப்போது அத்திகிரிவரதரை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது குழுவில் இருந்த பெரியவர்கள் காஞ்சிபுரம் சென்று அத்திகிரி வரதரை தரிசனம் செய்தபோது,
 அவர்களுடன் நானும் தரிசனம் செய்தேன். இந்த இரண்டாவது வாய்ப்பு நான் செய்த புண்ணியம். அப்போது ஸ்ரீரங்கபத்தி மல்லி மாலை அணிந்து சயனதிருக்கோலத்தில் இருந்த அத்திவரதரை நாங்கள் கண்டு தரிசித்தோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com