வருண பகவானுக்கு ஒரு கடிதம்..! 

பஞ்ச பூதங்களில் ஒன்றான மற்றும் ஜாதகத்தில் மூன்று கட்டத்திற்குரிய (கடகம், விருச்சிகம், மீனம்) நீரின் ஆதிக்கம்..
வருண பகவானுக்கு ஒரு கடிதம்..! 

எங்கள் அன்புக்குரிய கடவுளே வருண பகவானே, நமஸ்காரம்

ஓம் ஜலபிம்பாய வித்மஹே ।

நீலபுருஷாய தீமஹி। 

தன்னோ வருண ப்ரசோதயாத் ।।

பஞ்ச பூதங்களில் ஒன்றான மற்றும் ஜாதகத்தில் மூன்று கட்டத்திற்குரிய (கடகம், விருச்சிகம், மீனம்) நீரின் ஆதிக்கம் செய்யும் கடவுளே வருண பகவானே என்  கையில் நீரைக் கொண்டு உங்களுக்குச் சமர்ப்பணம் அளித்து நானும் என் மக்களும் நமஸ்கரிக்கிறோம்।

இந்த பூமியை ஆளும் அஷ்டதிக் பாலகர்களின் ஒருவனான உங்களை வணங்குகிறேன். கடலும், கடற்கரையைச் சார்ந்த இடங்களும் நெய்தலுக்குரிய தெய்வமாக “வருணன் மேய பெருமணல் உலகமும்”என்று உங்களை தொல்காப்பியத்தில் போற்றுகின்றனர். 

உங்களை எவ்வாரெல்லாம் போற்றுவது என்று தெரியவில்லை. ஆனால் உங்களைச் சிறு தொகுப்பாகப் போற்றும் பாக்கியம் எனக்குக் கிட்டியுள்ளது.

ஆதித்தர்கள் ஒருவனாக; உலகம் முழுவதும் 
பரந்து இருப்பவனே போற்றி போற்றி! 

நெய்தல் மற்றும் கடல் சார்ந்த 
நிலத்திற்கு உரிய தெய்வமே போற்றி போற்றி! 

சுக்கிரனின் அதிதேவதையுமான; 
மழையின் நாயகனே போற்றி போற்றி!

எண்திசை நாயகர்களின் ஒருவனான; 
மேற்கு திசையின் காவலனே போற்றி போற்றி! 

அன்னை பூமா தேவியை குளிர வைப்பவனே; 
நீர்நிலைகளின் ஆதிக்க அரசே போற்றி போற்றி!

எங்கள் செயல்களை கண்காணிக்கும் காவலாளியே  
வருணா வாருணியே போற்றி போற்றி!

ஆயிரம் கண்ணுடையவனே, விவசாயியின் நண்பரே; 
எங்களை வாழவைக்கும் தெய்வமே போற்றி போற்றி! 

 
எங்கள் வருண பகவானே உங்கள் பாத மலர்களை வணங்குகிறேன்।   

நீங்களும் மற்றும் உங்கள் நண்பர்களான நிலம், நெருப்பு, காற்று உதவியால் தான் அனைத்து உயிரினங்களும் வாழ்கிறோம். எங்கள் தமிழ் நாட்டில் ஆறு, குளம், ஏரிகளில் நீர் வளம் குன்றி, விவசாயிகள் தங்கள் தொழிலை சரிவர செய்யமுடியாமல் பஞ்சம் பசியுடன் வாழ்கின்றனர். உங்களுக்குரிய நீரை காசுகொடுத்து வாங்கும் அவலம் வந்துவிட்டது. சில கிராம நகரங்களில் முக்கிய ஆதாரமான நீர் இல்லாமல் மடியும் காலம் நெருங்கி வருவது எங்கள் கண்ணுக்குத் தெரிந்துவிட்டது. வருணா நீங்கள் எப்பொழுது வருவீர்கள்...? எங்கள் தாகத்தைத் தீர்ப்பீர்கள்.  
 
நீங்கள் கொடுத்த மழையினை சேர்த்து வைக்காததிற்கு எங்களையும் எங்கள் மக்களையும் மன்னிக்கவும். பல கோவில்களில் உங்களை பிரார்த்தனை செய்கின்றனர். அதற்கும் 

பதில் கொடுக்காமல் இருக்கின்றீர். தினமும் நானும் என் மக்களும் உங்கள் மந்திரத்தை ஜபித்து வணங்குகிறோம்.

எந்த ஜீவராசியும் உயிர் வாழ அவசியமான நீரின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் எடுத்துக் கூறியுள்ளார். “நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவ பெருந்தகைக்கு ஏற்ப 

வருணனே நீங்கள் இன்றி அமையாது உலகு என்பது சூட்சமமாக உங்களை உயர்ந்திருக்கிறார்.

உங்களுக்கு எங்கள் மீது கோபம் என்றால் மன்னியும். மழையைப் பொழியச் செய்து இந்நாட்டு மக்களின் வறட்சியைத் தீர்ப்பாய்.

இப்படிக்கு, 

உங்கள் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும்

உங்கள் தமிழக மக்கள்.

வருண கடவுள் பற்றித் தெரிந்துகொள்ளுவோம்..

பூமிக்கு அருகாமையில், சூரியனுக்கு முன்னும் பின்னும் மழை கோள் என்று கூறப்படும் சுக்கிரன், புதனும் முக்கூட்டு கிரகமாக, எப்பொழுதும் சுற்றி வரும். ஜோதிட சூட்சம விதிப்படி சூரியன், புதன், சுக்கிரன் மூன்றும் ஒரே இராசியிலிருந்தால் மழை பொழியும். அவை மூன்றும் ஒரே நவாம்சத்தில் நீர் தத்துவம் கொண்ட ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் இருந்தால் பலத்த மழை பெய்யும். சுக்கிரனும், புதனும் எவ்வளவு டிகிரி தூரம் நெருக்கி உள்ளனரோ அவ்வளவு மழை பொழியும் என்று ஜோதிட ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.  

இந்திரன் கிழக்கு திக்குக்கு அதிபதி, வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. இந்திரன் சிறப்புப் பெறத் தொடங்கியபோது, வருணனின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது எனலாம். ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், அக்னி, வருணன், யமன், நிருதி, வாயு, குபேரன், ஈசானன், இவற்றில் ஒரு முக்கியமானவர் வருணன். கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். இவர் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். இவர் 

வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைத் தாங்கியுள்ளார். வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம். இவரை வழிபாடு செய்தால், தேவையான மழை கிடைத்து உணவு, பஞ்சம் நீங்கும். இவரது மனைவியின் பெயர் வாருணி. வருணனின் மகன் தமிழ் முனிவன் அகத்தியர். 

வேத மந்திரங்கள் இவரை ஒளிக் கடவுளுடன் மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. நம் பழந்தமிழர்கள் பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட மற்றும் தென் துருவம் என்றும் நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகளை கொண்டது. இந்த மித்ர - வருணன் ஜோடிகள் காலை மற்றும் இரவுக்குரிய தெய்வம். மித்ரன் வருணன் ஜோடியை அறிஞர்கள் ஒளி/இருள் என்றும் சூரியன்/சந்திரன் என்றும், பிறப்பு, இறப்பு என்றும், சீத, உஷ்ணம் என்றும், ஆக்கம்/அழிவு என்றும், உற்பத்தி/மறைவு, சூரிய உதயம்/அஸ்தமனம் என்றும், கிழக்கு/மேற்கு என்றும் பிரித்துக் கூறுகின்றனர்.

நாள்தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் வருண ஜபம் என்னும் வேத மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.

மழைக்காக வருண பகவானுக்காக நிறையப் பாடல்கள் உள்ளது. அதில் திருப்பாவையில் மழை பொழிவிற்கான ஆண்டாள் பாடிய பாடல்.

ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

அனைத்து தமிழக மக்களும் வருணனை நினைத்து நன்றி கூறி, வெள்ளிக்கிழமை அல்லது சுக்கிர ஓரையில் நன்றாக வணங்கவும். வருண பகவான் மழையாய் பொழியவைத்து நம் விவசாயத்தை உயர்த்துவார்.  

நம் இந்துக்கள் தவிர கிரேக்கர்கள், ஸோராஷ்ட்ரியர், பௌத்தரிகள் மற்றும் சிந்தியர்கள் வருணனை தெய்வமாகக் கோவில் வைத்து வணங்கி உள்ளனர். 

- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி

Cell: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com