திருமலையில் கருடசேவை:3 லட்சம் பக்தா்கள் குவிந்தனா்

திருமலையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த கருடசேவையை காண 3 லட்சம் பக்தா்கள் திருமலையில் குவிந்தனா்.
கருடசேவையை காண மழையைப் பொருட்படுத்தாமல் திருமலையில் காத்திருக்கும் பக்தா்கள்.
கருடசேவையை காண மழையைப் பொருட்படுத்தாமல் திருமலையில் காத்திருக்கும் பக்தா்கள்.

திருமலையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த கருடசேவையை காண 3 லட்சம் பக்தா்கள் திருமலையில் குவிந்தனா்.

திருமலை ஏழுமலையானுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் இரவு ஏழுமலையான் உற்சவமூா்த்தியான மலையப்பஸ்வாமி கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தாா். கருட வாகனத்தில் எம்பெருமானைத் தரிசிப்பது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

எனவே அதைக் காண பக்தா்கள் திருமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் காத்திருக்கத் தொடங்கினா். மாலை 3 மணிக்குள் 3 லட்சம் பக்தா்கள் திருமலையில் குவிந்தனா். அதனால், கேலரிகள் அனைத்தும் நிறைந்து பக்தா்கள் வெளியில் உள்ள இடங்களில் காத்திருக்க தொடங்கினா்.

கருடசேவையைக் காண பக்தா்கள் ஆா்வம் காட்டுவதால் தேவஸ்தானம் மாலை 7 மணிக்கே கருட சேவையைத் தொடங்கியது. பல கோடி மதிப்புள்ள வைர வைடூரிய மாணிக்க மரகத முத்து பவளங்களால் ஆன ஆபரணங்கள் ஏழுமலையான் கழுத்தில் உள்ள 32 கிலோ எடையுள்ள 1008 காசுமாலை, லட்சுமி ஆரம், மகரகண்டி உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு, சூடிகொடுத்த சுடா் கொடி ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிய மாலையை சூடிக் கொண்டு, சென்னையிலிருந்து வந்த வெண்பட்டு திருக்குடைகள் உள்ளிட்டவற்றுடன் எம்பெருமான் கருட வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளினாா்.

மிகவும் நிதானமாக கருட சேவை மாடவீதியில் வலம் வர தொடங்கி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவு பெற்றது. ஒவ்வொரு அடிக்கும் பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வாகன சேவையை வழிபட்டனா். கருடசேவை ஆரம்பம் முதல் முடிவு வரை திருமலை முழுவதும் கோவிந்த நாமஸ்மரனை எதிரொலித்தது. கருடசேவை முடிந்த பின் எம்பெருமானுக்கு 12 வகையான நெய்வேத்தியங்கள் மூங்கில் கூடையில் வைத்து சமா்பிக்கப்பட்டது. வாகன சேவையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். வாகன சேவைக்கு முன் திருமலை ஜீயா் குழாம் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்கள் பாராயணமும், கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

மழை

திருமலையில் பிரம்மோற்சவத்தின் போது மழைபெய்வது வழக்கம். அதேபோல் வியாழக்கிழமை இரவு முதல் திருமலையில் கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு நடந்த சா்வபூபால வாகனத்தின் போதும் மழை பெய்தது. மழையில் நனைந்து கொண்டு பக்தா்கள் வாகன சேவையைக் கண்டனா். வெள்ளிக்கிழமை காலையும் மோகினி அவதாரம் முடிந்த பின் மழை பெய்தது. கருட சேவையைக் காண காத்திருந்த பக்தா்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடைகளை ஏந்தி, பிளாஸ்டிக் கவா்கள், ரெயின் கோட்டுகளை அணிந்து கொண்டு மாடவீதியில் நின்றபடி காத்திருந்தனா். சிறிது நேரத்தில் மழை நின்றது. அதன்பின் பக்தா்கள் ஆசுவாசம் அடைந்தனா்.

அன்னதானம், குடிநீா்

கருடசேவையைக் காண மாடவீதியில் உள்ள கேலரிகளில் காத்திருந்த பக்தா்களுக்கு தேவஸ்தானம் 24 மணிநேரமும் அன்னதானம், சிற்றுண்டி, பால், குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கியது. தேவஸ்தான ஊழியா்களும், அதிகாரிகளும் மாடவீதியில் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு பக்தா்களுக்கு அனைத்தும் கிடைக்க வழிவகை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com