காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 4. மணிமங்கலம் அருள்மிகு தர்மேஸ்வரசுவாமி கோயில்

காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள் மூன்றாவது கோவில் (7.9.2019) தொடர்ச்சியாக வேறு ஒரு பழமைபெற்ற சிவ ஸ்தலத்தைப் பார்ப்போம். 
காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 4. மணிமங்கலம் அருள்மிகு தர்மேஸ்வரசுவாமி கோயில்

 
காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள் மூன்றாவது கோவில் (7.9.2019) தொடர்ச்சியாக வேறு ஒரு பழமைபெற்ற சிவ ஸ்தலத்தைப் பார்ப்போம். 

தர்மேஸ்வரர் கோயில் - குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அழகான ரம்யமான சூழ்நிலையில் சிவன்  குடிகொண்டிருக்கும் கோவில் ஆகும். இது தாம்பரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சோழர் மற்றும் பல்லவர் கால கட்டிட அமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டிடத் தன்மையைப் பார்க்கும் பொழுது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என்று தொழில்துறையினரால் ஆராய்ந்து கூறப்பட்டது.  

இக்கோயிலின் தல மரம் சரக்கொன்றை மற்றும் தல தீர்த்தம் சிவபுஷ்கரணி ஆகும். இந்த 7-8ம் நூற்றாண்டு காலகட்டத்தில் நரசிம்ம பல்லவர் சாணிக்ய இரண்டாம்  புலிகேசியுடன் போரிட்டு வென்ற இடமாகச் சொல்லப்படுகிறது. இங்கு செதுக்கிய சிற்பங்கள், மண்டபங்கள், மற்றும் எழுத்துக்கள் பார்த்தால் சோழர்கள் மற்றும் பல்லவர்கள்  காலத்து ஆதாரமாகத் தென்படுகிறது. பல புதையுண்ட சிற்பங்களில் ஒன்று கழுத்தை தன் கைகளால் வெட்டிக்கொள்ளும் சிற்பங்கள் காணப்பட்டது. 

முற்காலத்தில் காஞ்சிபுரம் சிலபகுதிகள் பல்லவன் ஆட்சிக்கு உட்பட்டது. இங்கு ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் ஒரு சிவன் பக்தன் மற்றும் தான தர்மங்கள் செய்வதில்  சிறந்தவனாகத் திகழ்ந்தான். அதனால் அவன் உள்ளார்ந்த சிவனுக்கு ஒரு சிவாலயம் கட்ட ஆசைப்பட்டான் என்ன செய்வது! எங்கே ஆலயம் அமைப்பது என்று  தெரியவில்லை. அவரின் ஆதங்கத்தைப் புரிந்த சிவன், அடியார் வேடத்தில் மன்னரிடம் யாசகம் கேட்டார். அரசரும் தர்மம் செய்யும் நேரத்தில், அடியார் ஓரிடத்தைக் காட்டி  இங்கு ஒரு சிவன் கோயில் கட்டி தானமாகத் தரும்படி கேட்டார். 

மன்னர் தான் நினைத்ததை எவ்வாறு கூறுகிறார் என்று மெய்சிலிர்த்துப் போனார். மன்னருக்கு அடியாராக வந்த சிவன் சுயரூபத்துடன் காட்சியளித்தார். இந்த தானத்தின்  பெயராக ஈசன் பெயர் "தர்மேஸ்வரர்" என்று சூட்டப்பட்டது. இந்த கோவிலில் இறைவன், இறைவி சன்னதிகள் தனித்தனியாக நந்தியுடன் அருள்பாலிக்கிறார்கள். இங்கு  இருக்கும் லிங்கத் திருமேனியான மூலவர் சதுர வடிவத்தில் ஆவுடையாருடன் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். தர்மேஸ்வரர் என்ற பெயருக்கு ஏற்ப தர்மம்  அதாவது நீதி இல்லாத செயல் இருக்கும் இடத்தில் தர்மத்தை நாட்டுவார். எங்கெல்லாம் அதர்மம் என்று செயல் நடைபெறுகிறதோ இங்கிருக்கும் சிவனிடம் முறையிடலாம். 

வேதங்களின் தலைவியான வேதநாயகி தனிச்சன்னிதியில், சதுர பீடத்தில் நின்றபடி அழகாகக் காட்சி அளிக்கிறார். அம்பிகையின் சந்நிதியும் சதுர வடிவ விமானங்கள்,  தரையிலிருந்து சன்னதியுடன் சேர்த்துக் காணப்பட்டது.   அம்மனுக்கு முக்கியமாக பௌர்ணமி காலங்களில் சந்தனக்காப்பு பிரார்த்தனை மிகவும் சிறந்த பரிகாரம். புரட்டாசி மாத  பவுர்ணமியன்று இவளது சன்னதியில் “நிறைமணிக்காட்சி’ வைபவம் நடைபெறும் . அன்றைய தினங்கள் காய்கறிகள், பல்வேறு பழங்கள், சிறப்பு மலர்கள் மற்றும்   தானியங்கள் கொண்டு சன்னதி முன்மண்டபத்தில் அலங்கரிப்பார்கள். 

இங்கு அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவிப்பது முக்கிய நேர்த்திக்கடன் ஆகும். விழாக்காலம் என்றால் பிரதோஷம், ஆடிப்பூரம், நவராத்திரி, ஆடி, தை  வெள்ளி, சித்ரா பவுர்ணமி மற்றும் முக்கிய விரத காலங்களில் நாட்களில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. வேதங்கள் உபநிதங்கள் அறிவு பெற, முக்கியமாக  கல்வியில்  சிறக்க இறைவன் இறைவிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, சுத்த பசு நெய் தீபம் ஏற்றி வேண்டி அவர்கள் அருளைப் பெறலாம்.  உணவுப் பொருள்கள் கொண்டு  அதாவது பால் /அன்னம் /பழம் / தயிர்  அபிஷேகம், பிரசாதம்,  தானம் என்று கடவுளைத் தரிசிக்கும் போது நம் வீட்டிலும், நாட்டிலும் : பஞ்சம், பசி, பட்டினி இருக்காது .

இந்து சமய வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்படும் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் நான்குக்கும் உரியவராக விநாயகர்கள் இங்கு அமர்ந்துள்ளார்.  இக்கோயிலில் இருந்து சற்று தூரத்திலிருந்தாலும், ஒரே சன்னதியில் நான்கு விநாயகர்கள் வரிசையாக பொதுவாக எதிரில் ஒரு யானை வாகனத்துடன்  காட்சியளிக்கிறார்கள். இந்த  மாதிரி தரிசனம் என்பது மிக மிக அரிது. இதுதவிர 2 விநாயகர்கள் கோயில் பிரகாரத்தைச் சுற்றி இரண்டு திசைகளிலும் இருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியன்று நான்கு விநாயகர்களுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. இவர் வேண்டிய புத்தியை தந்து உதவுவர். இங்குச் சுற்றிவர தல விநாயகர் என்கிற அனுக்கை  விநாயகர் தவிரப் பைரவர், சனீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சுந்தரர், நாவுக்கரசர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் நமக்கு அருள காத்திருக்கிறார்கள்.

நான் இக்கோவிலுக்குப் பல வருடங்களுக்கு முன்பு சென்றேன் அப்பொழுது அக்கோவில்  கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக சீரமைப்புப் பணி மற்றும் கும்பாபிஷேகம்  நடத்தப்படாமல் இருப்பதாகக் கூறினார்கள். 

தற்பொழுது கோவிலைச் சுற்றி சிவனுக்கு வேண்டிய வில்வம், ருத்ராட்சம், பூச்செடி என்று அழகிய தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை நடத்துவது என்று  தொல்லியல் அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்ததாக அங்குள்ள குருக்கள் கூறினார். இந்த மாதிரி கோவில்கள் மேம்பாட்டிற்கு நம்மால் ஆன உதவித்தொகையைக்  கொடுத்து உதவினால் நன்று. நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமான் குடிகொள்ளும் இடத்திற்கு உதவினால் நம் வீடு சிறக்கும்.

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

இக்கோவில் இருப்பிடம் மேற்கு தாம்பரம் வழியாக மணிமங்கலம் ஸ்ரீபெரம்பத்துர் போகும் பாதையில் உள்ளது. 

கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 - 10.00 மாலை: 5  - 6. முடிந்தவரை காலை சென்று தரிசித்தால் நல்லது.  

முகவரி: அருள்மிகு தர்மேஸ்வரசுவாமி திருக்கோயில், மணிமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம்.  
போன்: 2717 8157, 98400 24594

குருவே சரணம்!

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com