ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?

பஞ்சாங்கம் என்பது சூரியனை மையமாகக் கொண்டு நம் முன்னோர்கள் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?

பஞ்சாங்கம் என்பது சூரியனை மையமாகக் கொண்டு நம் முன்னோர்கள் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த கணக்குடன் கூடிய வியக்கத்தக்க, ஆச்சரியமான ஒரு கொடை. வருடத்தை 12 மாதங்களாக சித்திரை முதல் பங்குனி வரைப் பிரித்துள்ளார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பென்றால் ஐப்பசி மாதத்தினை துலா விஷுப் புண்யகாலமாகச் சொல்கிறார்கள்.

இந்த துலா விஷு புண்யகாலத்தில் தேவர்களின் இரவும் பகலும் சரிசமமாக இருப்பதால் (இதைக் குறிப்பிடும் வகையில் துலா ராசிக்கு 'தராசு' சின்னம் அமைந்துள்ளது) இந்த நாட்களை புனிதமாகக் கருதி காவிரி ஆற்றில் புனித ஸ்நானம் செய்ய சொல்கிறது நம் சனாதன தர்மம். ஒரு சமயம் கங்கை முதலான நதிகள் அனைத்தும்; சிவபெருமானிடம் "உலகிலுள்ள அனைவரும், எங்களைப் போன்ற நதிகளில் நீராடி தன் பாவங்களை போக்கிக் கொள்கின்றனர். அதனால் எங்களின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தச்சுமையை எப்படி போக்குவது" என வேண்டினர். துலா மாதத்தில் நீங்கள் அனைவரும் காவிரியில் நீராடுங்கள் அப்போது உங்கள் சுமை நீங்கிவிடும் என்றார். அதனால் இந்த மாதத்தில் மட்டும் அனைத்து நதிகளும் இங்கு வருவதால் நாம் காவிரியில் ஸ்நானம் செய்வதால் அனைத்து நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரித்தாய் தமிழகத்தில் புகுந்து வங்கக்கடலில் சங்கமமாகிறாள்.

ஸ்கந்த புராணத்தில் லோபாமுத்ரா அல்லது விஷ்ணுமயா என்ற பெண் பிரம்மாவால் தத்து எடுக்கப்பட்டாள். இவள் காவேர முனி, கவேர முனி என்றழைக்கப்பட்டு பின்னர் காவோரி என்றானாள். இவள் மீது அகஸ்திய முனிவர் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். அவர் தவத்தில் இருந்தபோது காவோரியை பாராமுகமாக இருந்ததால் மலைமுகட்டிலிருந்து கீழே குதித்தாள்; அதுவே பிரவாகமாகப் பெருகி கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பவானி, ஈரோடு, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற பல ஊர்களில் பாய்ந்து காவிரிபூம்பட்டிணத்தில் வங்கக்கடலில் சங்கமிக்கிறாள்.

ஒரு அங்கஹீனன் (முடவன்) மயிலாடுதுறையை (அப்போதைய மாயவரம்) நோக்கி இங்குள்ள காவிரியில் துலா ஸ்நானம் செய்ய வந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது. அந்த முடவன் இறையனார் சிவனிடம் வேண்டினான். அவனுடைய குறையைப்போக்க கார்த்திகை 1ஆம் தேதி அன்றும் இதே பலன் உனக்கு கிட்டும் ஸ்நானம் செய் என அருளினார். இந்த நாளே முடவன் முழுக்கு எனப் பெயர் பெற்றது.

இத்துடன் மொத்தம் 14 உலகங்களிலுள்ள அறுபத்து ஆறாயிரம் கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஸ்ரீகிருஷ்ணரின் ஆணைக்கிணங்க இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராட இந்த மாதம் முழுவதிலும் இங்கே இருக்கிறார்கள் என்று அக்னி புராணம் கூறுகிறது. மிக முக்கியமாக மக மாதத்தில் ப்ரயாகையிலும் (அலஹாபாத்), அர்த்தோதய புண்ணியகாலத்தில் சேதுவிலும் நீராடினால் கிடைக்கும் பலனைவிட இந்த துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்வதால்; பஞ்சமா பாதகம் என்று மனிதன் செய்யும் தவறுகள் அறுபடுகின்றன.

துலா ஸ்நானம் சூர்ய உதயத்திற்கு முன்பு விடியற்காலையில் செய்தால் முழுப்பலனும் கிட்டும் என்பது விதி. வருடத்தில் வரும் மொத்தம் 12 சங்கராந்திகளில்; ஐப்பசி மாதத்தில் வரும் இதனை துலா சங்கராந்தி என்று இந்து பஞ்சாங்கங்கள் சொல்கிறது. இதனை கர்ப்பன அல்லது கர்வன சங்கராந்தி எனவும் கூறுவார்கள். இந்தியாவின் பல பகுதிகளில்; முக்கியமாக கர்நாடகாவில் துலாசங்கரமனா என்று காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரியில் மிகவும் விமாரிசையாகக் கொண்டாடுவார்கள்.
 
கர்நாடகா மற்றும் ஒடிசாவில் இந்த நாட்களில்; உன்னால் கொடுக்கப்பட்ட இந்த ஐஸ்வர்யங்கள் உனக்கே படைக்கிறோம், இதனை எங்களுக்கு குறைவில்லாமல் தந்தருள வேண்டுகிறோம் என விவசாயிகள் தங்கள் வயல்களில் விளையும் அரிசி, கோதுமை மற்றும் அனைத்து விளை பொருட்களையும் ஸ்ரீ லஷ்மிக்குப் படைத்து குறைவில்லா விளைச்சல் கொடுக்க வேண்டி வழிபடுவார்கள். இந்த துலா ஸ்நானம் என்பது மயிலாடுதுறையில் காவிரி நதியில் துலாகட்டம் என்ற படித்துறையில் ஒவ்வொரு வருடமும் மயூரநாதஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.

தமிழ் ஐப்பசி மாதத்தின் முதல் நாள் (18.10.2019) வெள்ளியன்று துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது. கடை முழுக்கு, ஐப்பசி மாதக் கடைசி நாள் (16.11.2019) சனிக்கிழமையன்று முடிகிறது. முடவன் முழுக்கு, கார்த்திகை முதல் நாள் வருகிறது (17.11.2019). இப்படிப்பட்ட புண்ணியமான நாட்களில், காவிரி பாயும் அனைத்து இடங்களிலும், ஒரு நாள் நாமும் கலந்து கொண்டு; துலாஸ்நானம் செய்து அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மை பெற்று இன்பசாஹரத்தில் திளைப்போமாக!

கட்டுரை ஆக்கம்:  எஸ். எஸ். சீதாராமன்

மொபைல்: 94441 51068

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com