சுடச்சுட

  

  வைத்தீஸ்வரன் கோயிலில் செப்.12-ல் குடமுழுக்கு பணிகள் தொடக்கம்

  By DIN  |   Published on : 10th September 2019 11:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Vaitheeswaran-Koil-banner

   

  சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலில் செப்டம்பர் 12-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் மற்றும் இளைய ஆதீனம் ஆகியோர் முன்னிலையில் குடமுழுக்கு பணிகள் தொடங்குகின்றன. 

  நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகிஅம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமி கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். 

  செவ்வாய் தலமாக விளங்குவதாலும், இக்கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடி சுவாமி அம்பாளை வழிபாடு செய்து வந்தால் தீராத வியாதிகள் தீரும் என்பதாலும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர்.

  பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் 1998-ஆம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பின்னர் ஆகமவிதிகளின் படி 12 ஆண்டுகளை கடந்தும் குடமுழுக்கு செய்யாமல் இருந்து வருவது பக்தர்களை வருத்தம் அடைய செய்தது.

  இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன்  திருப்பணிகளை தொடங்க தீர்மானித்தனர். 

  அதன்படி, செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் திருப்பணிகள் தொடங்குவதற்கான முகூர்த்தம் நடைபெறவுள்ளது. இதில், தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று சிறப்பு பூஜைகள், யாகங்கள் செய்து குடமுழுக்கு திருப்பணிகளை  தொடங்கி வைக்கவுள்ளனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் தொடங்கவுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai