மஹா பரணி: முன்னோர்களின் ஆசி பெறவும் மரண பயம் நீங்கவும் யம தீபம் ஏற்றுவோம்!

பித்ருக்கள் பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷத்தில் சதுர்த்தி தினமான இன்று (18/09/2019) மஹா..
மஹா பரணி: முன்னோர்களின் ஆசி பெறவும் மரண பயம் நீங்கவும் யம தீபம் ஏற்றுவோம்!

பித்ருக்கள் பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷத்தில் சதுர்த்தி தினமான இன்று (18/09/2019) மஹா பரணி எனும் முக்கிய தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. "மஹாபரணி" என்பது  புரட்டாசி மாதத்தில் மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நக்ஷத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம்  முன்னோர்கள் எல்லாம் அவரவர் கர்ம வினைக்கேற்ப யமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நியதியாகும். யமதர்மனுக்கு  உகந்த மஹாபரணி நக்ஷத்திர நாளில் முன்னோர்களுக்கு சிராத்தம், திதிகள், தர்ப்பணம் செய்வது மற்றும் யம தீபம் ஏற்றுவது போன்றைவைகளை செய்தால் யமதர்மன்  மனம் மகிழ்ந்து நரகத்திற்குச் செல்லவேண்டிய நம் முன்னோர்களின் வேதனையைக் குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என ஐதீகம்.

மஹாளய பக்ஷம்

தக்ஷிணாயன புண்ய காலத்தில் புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பக்ஷம் எனும் புண்ணியகாலம் கடந்த 14/09/2019 சனிக்கிழமை முதல்  தொடங்கியது. இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. 

மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பக்ஷம். "பக்ஷம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15  நாட்கள் (சில சமயங்களில் 14 அல்லது 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பக்ஷம். இது புரட்டாசி மாத பெளர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில்  துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மஹாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட  உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம்  முதலியன செய்வோம். ஆனால், மஹாளய பக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து யமதர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும்  காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை

யம தீபம்

மஹாளய பக்ஷத்தில் மஹா பரணியிலும் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்றும் யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரண பயம் நம்மைவிட்டு அகலவும் துர் மரணமின்றி  அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும். மஹாளயபட்ச நாட்களில் குறிப்பாக மஹாளயபட்ச அமாவாசை அன்று  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  

தக்ஷிணாயன புன்ய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மஹாளய பக்ஷம் மற்றும் தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்வது மரபு. அவ்வாறு வருகை தரும் பித்ருக்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது "யம தீபம்" மட்டுமே. அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம். 

எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள். வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழிபடலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடியின்றி  ஆரோக்கியமாக வாழலாம்! 

யம தீபமானது முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்னைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.  என்றாலும் எவரேனும் இறந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக்கூடாது. யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும்,  இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை  தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள  எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள்  தானாகவே அமையும். அத் தீபத்தை நீங்கள் மஹாளய பக்ஷத்தில் வரும் மஹா பரணி நாளிலும் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். யம  தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

ஜோதிடத்தில் யமனுக்கு உள்ள தொடர்பு

சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும்  பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள். அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்ற பெயரிட்டாள். பிறகு  அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டுத் தன் தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும்  ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர். 

இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார். ஓரு ஆத்மாவை  உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவின் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும் ஆயுள் காரகனான சனைஸ்வர பகவானும்,  அவருடைய அதிதேவதையான யமனும் தான் எனப் பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவக்கிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவனாவார். எனவே, ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் பாவ  அதிபதியும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்துவிட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அதுவே எட்டாம் பாவம் பலமிழந்து சனி  பகவானும் எட்டாம் அதிபதியும் வக்ரம், பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக்கூடிய அமைப்பு ஏற்படுகிறது. அது  போல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாகிறது.

இதுபோன்ற ஆயுள் அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் யம தீபம் ஏற்றி வழிபட ஆயுள்காரகன் சனைச்சர பகவானின் அருளும் அவரின் சகோதரர் யமனின் அருளும்  பெற்றும் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

யாரெல்லாம் யம தீபம் ஏற்றலாம்?

1.  பரணி, மகம், சதையம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் யம தீபம் ஏற்றுவது சிறப்பு. நக்ஷத்திர ஸூக்தத்தில் பரணி நக்ஷத்திரத்திற்க்கு யமனையும் மகத்திற்கு  பித்ருக்களை அதிதேவதையாகவும் கூறப்பட்டுள்ளது. வருஷாதி நூல்களில் சதயத்திற்கு யமனை அதிதேவதையாகக் கூறப்பட்டுள்ளது.

2. யமனை அதிதேவதையாகக் கொண்ட சனைஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள்.

3. ஆயுள் ஸ்தானத்தில் சனைஸ்வர பகவான் நீசம் அல்லது பலமிழந்தவர்கள்.

4. சூரியனும் சனைஸ்வரரும் சேர்க்கை பெற்றவர்கள்.

5. ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாக கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாக கொண்ட கேதுவின் நக்ஷத்திரங்களில் அஸ்வினி, மகம்,  மூலம் நக்ஷத்திர சாரங்களில் நிற்க பெற்றவர்கள்.

யம தீபம் எங்கு ஏற்றலாம்?

1. மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் க்ஷேத்ரபாலகராக அமைந்து தனி சன்னதி பெற்ற யமதர்மராஜன் சன்னதி

2. தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள யமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதி

3.  திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஞீலிவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து யமனை  மீண்டும் குழந்தையாக உருவாக்கிய யமன் சன்னதியில்

4. அனைத்து சனி பரிகார ஸ்தலங்களில்

5. அனைத்து சிவாலய சனைஸ்வரர் சன்னதிகளில்

6. யமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில்

7. அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றலாம்

8. யம தீபம் ஏற்றவேண்டிய காலம் மஹா பரணியான இன்று  மாலை 5.55 முதல் 7.11 வரை

யமதீபம் ஏற்றும்போது கூறவேண்டிய ஸ்லோகம்

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச|

வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச||

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே|

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:|

- அஸ்ட்ரோ சுந்தரராஜன் 

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com