சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல இனி ஒரே முன்பதிவு: தேவசம்போர்டு அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் பயணத்துக்கு மூன்று விதமான முன்பதிவு இருப்பது மாற்றப்பட்டு,
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல இனி ஒரே முன்பதிவு: தேவசம்போர்டு அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் பயணத்துக்கு மூன்று விதமான முன்பதிவு இருப்பது மாற்றப்பட்டு, பக்தர்கள் ஒரே முன்பதிவில் சபரிமலைக்குச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும்  என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். 

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பொதுவாக சபரிமலை கோயிலுக்குச் செல்ல  மூன்று விதமான முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பத்மனாபபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது: 

சபரிமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள், நிலக்கல்லில் இறங்கி பின் கேரள அரசு பேருந்தில் பம்பை சென்று திரும்ப வேண்டும் என முடிவு செய்து, கடந்த சீசனில் அது  நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவுப்படி, பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம். இந்நிலையில், பயணம், தரிசனம், அறை முன்பதிவு, வழிபாடு போன்ற அனைத்துக்கும், ஒரே இடத்தில் முன்பதிவு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சபரிமலைக்கு வரும் ஐயப்பப் பக்தர்கள் அவரவர் வீடுகளிலிருந்தே முன்பதிவைச் செய்ய முடியும். அவ்வாறு செய்ய முடியாதவர்களுக்கு நிலக்கல் மற்றும் பம்பையில்  தேவசம்போர்டு சார்பில் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் சபரிமலைக்கு யார் வருகின்றனர், எத்தனை பேர் வருகின்றனர் என்பதை அறிய முடியும். 

இன்னும் ஓரிரு நாட்களில் தேவசம்போர்டும், கேரள காவல்துறையின் தகவல் தொடர்பு வல்லுனர்கள் குழுவும் கூடி இதை முடிவு செய்வார்கள். இதற்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். பின்னர், அனைத்து மாநிலங்களிலும், இது பற்றி விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும். முன்பதிவு கட்டாயம் என்பது உடனடியாக அமலுக்கு வராவிட்டாலும் நாளடைவில் இது கட்டாயமாக்கப்படும்.

முன்பதிவு செய்தவர்கள் குறித்த நேரத்திற்குள் வர முடியாவிட்டால் அவர்களுக்கு என்ன செய்வது என்பதைப் பற்றியும் ஆராயப்படும். மேலும், முன்பதிவு செய்வதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com