எந்த வகையில் ஒருவருக்கு அவமானம் ஏற்படும்?

வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்துகொள்ள..
எந்த வகையில் ஒருவருக்கு அவமானம் ஏற்படும்?

ஜோதிடப் பார்வையில்..

"வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்துகொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது. வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும். இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துவிடும். அடுத்தவரின் உண்மையான முகம் நாம் அவமானப்படும்போது மட்டும் தான் தெரியும்.

யார் நண்பர் யார் நண்பர் அல்லாதார். யார் நல்லவர், யார் கெட்டவர், அவருடைய உண்மையான முகம் எது? என்ற விஷயங்களெல்லாம் மிகத் தெள்ளத்தெளிவாகத் தெரியும். நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். நம்மை அவமானப்படுத்த செயல்படும் பலபேர் இவைகளை மிக ரகசியமாகவே செய்கிறார்கள். வேறு யாரையாவது முன்னிறுத்தி பின்னால் நின்று இயக்குகிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமை படத்தொடங்குகிறார்கள். அநேகமாக அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப்படுத்துகிறார்கள். எப்போதும் வாழ்க்கையில் நம்முடைய சுற்றம் தான் எதிரிகள். எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.

அவமானம் நண்பர்களால் ஏற்பட்டாலும் உறவுகளால் ஏற்பட்டாலும் அந்நியர்களால் ஏற்பட்டாலும் நெல்முனையளவும் கவலை கொள்ளாதீர்கள். எதனால் இது? எங்கு தவறு? வேண்டுமென்றே செய்யப்படுகிறதா? அல்லது விவரமில்லாத விஷயமா? என்பதை யோசித்து மிக வேகமாக ஒரு முடிவு எடுங்கள். எதிர்க்க முடியாத சூழலில் எதிர்ப்பைக் காட்ட முடியாத நிலையில் கூட உங்களுக்கு கடும் அவமானம் ஏற்படும். அப்போது அவமானத்தை நன்கு அனுபவியுங்கள். அவமானப்படுத்துதலை  புரிந்துகொண்டு அதற்கு அழாது கண்ணீர்விட்டு கதறாது உள்ளே இறுக்கி கொள்ளுங்கள். உங்களை அவமானப்படுத்தியவரை ஒரு போதும் மன்னிக்காதீர்கள். மஹா கவி பாரதியின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

"பாதகம் செய்பவரைக் கண்டால்  நீ பயம் 

கொள்ளலாகாது பாப்பா 

மோதி மிதித்துவிடு பாப்பா"

வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள் அவமானத்திற்கு அஞ்சாதீர்கள். அவமானம் ஒரு  உரம், கடுமையான உரம், காரமான உரம். அதனாலென்ன உரம் தானே? இன்று கண்ட அவமானம், வென்று தரும் வெகுமானம்! வானமே தாழலாம், தாழ்வதில்லை

தன்மானம்! அவமானம் தாங்கப் பழகு!!

மகாபாரதத்தில் வரும் கதா பாத்திரங்களை அவ்வளவு எளிதாக நாம் மறந்து விட முடியாது. ஆம் அன்றொருநாள் த்ருதிராஷ்டிரனின் அவையில் கற்றோர், பெரியோர், ஞானியர் போன்றவர்கள் முன்னிலையில் பாஞ்சாலிக்கு நடந்த அவமானத்தை என்னவென்று சொல்வது. அவர்களுக்கு தெரியாததா இப்படி ஒரு காரியத்தை செய்வது எவ்வகையிலும் நியாயம் இல்லை என்று, இருந்தும் அவர்கள் அவமானப்படுத்தியதற்கு தக்க தண்டனையை பாஞ்சாலியின் சாபத்தின் மூலம் அடைந்தார்கள். இந்த அவமானம் ஒரு காவியத்தை இன்றளவும் நிலை பெறச் செய்தது.

"அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்" (எபிரெயர் 12:2).

இயேசு கல்வாரி சிலுவையில் அவமானத்தை சகித்தார் என்பதை தெளிவாக இங்கே நாம் வாசிக்கிறோம்.'அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து'என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆக சிலுவையில் அவமானம் இருந்தது. சிலுவை ஒரு அவமானத்தின் சின்னமாய் இருந்தது. சிலுவை, இயேசுவை ultimate-ஆக அவமானப்படுத்தின ஒரு சம்பவம். தேவகுமாரனை எல்லாருடைய கண்களுக்கு முன்பாக அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி, இயேசுவை சிலுவையில் தொங்கவிடுகிறார்கள்.அவர் எந்தப் பாவமும் செய்யவில்லை, எந்த குற்றமும் செய்யவில்லை, யாரையும் கொலை செய்யவில்லை, யாரிடமிருந்தும் எதையும்திருடவில்லை, எந்த தீமையும் செய்யவில்லை. 

இன்னும் கேட்டால் ஊர் ஊராகச் சென்று வியாதியஸ்தரை சுகமாக்கினார், எவ்வளவோ நன்மைகளைச் செய்தார், எத்தனையோ பேர் இவர் மூலமாய் பிசாசின் பிடியிலிருந்து விடுதலை பெற்றார்கள். அங்கே இருந்த ஏழை, எளிய ஜனங்களையும், பிசாசு பிடித்தவர்களையும், வியாதியஸ்தர்களையும் கேட்டோம் என்றால் அவர்கள், "இயேசு அற்புதமானவர், அவர் எனக்கு பலநன்மைகள் செய்திருக்கிறார்" என்று சொல்லுவார்கள். அவ்வளவு நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார் என்றுதான் வேதம் சொல்லுகிறது. 

நன்மையை மாத்திரம் செய்த இயேசுவை எல்லாருக்கும் முன்பாக அசிங்கப்படுத்தி, துப்பி, அடித்து, அறைந்து, சிலுவையை சுமக்க வைத்து, நிர்வாணப்படுத்தி இப்படி என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து அவரை அவமானப்படுத்தினார்கள்.   ஆனால், என்ன ஆயிற்று ஏசு பெற்ற அவமானம், இன்று உலகமே போற்றும் ஒரு  மகானாக காட்சியளித்து, அவரின் பின்பற்றுவோர் பல ஆயிரம் பேர்கள் அவரின் உபதேசங்களுக்கு உண்மை விசுவாசிகளாகவும் , அவரின் கருத்துக்கள் படி நடப்பவர்களாயும் இருப்பதனைக் காண்கிறோம்.

அகந்தைக்குப் பின் அவமானம்...

இந்த வகையில் அவமானம் படுபவர்கள் வேறு நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். அவர்களின் அகந்தையினாலும், தமது தீய குணங்களினாலும் அவமானப் படுகிறார்கள். அதனை இங்கு ஜோதிடப் பார்வையில் அறியலாம். இவர்கள் நிச்சயம் திருந்த வேண்டியவர்களே, அல்லது அவர்களை அவர்தம் உறவினர், நண்பர்களே மதிக்க மாட்டார்கள். அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு வாழ்நாளை தன்னந் தனிமையில் கழிக்கவேண்டியவர்கள் ஆவார்கள்.  எந்தெந்த வகையில் அவர்கள் அவமானம் / அபவாதம் படுவார்கள் என்பதனை லக்கின வாரியாகக் காணலாம். 

பொதுவாக ஒருவரின் ஜனன கால ஜாதகத்தின் ராசிச் சக்கரத்தில் உள்ள லக்கினத்திற்கு 8 ஆம் இடமே  ஒருவரின், அவமானம் / அபவாதம் போன்றவற்றை பற்றி அறியச் செய்யும். அந்த வகையில் பின்வரும் லக்கின காரர்களின் 8 ஆம் இடத்தில் அமர்ந்துள்ள கிரகங்களால் அவர்கள் எந்த வித அவமானம் மற்றும் அபவாதம் அடைவார்கள் என அறியலாம். இருப்பினும் அவர்களின் ஜாதகத்தில், சுபர் பார்வைப் பெற்றிருப்பின் அவ்வாறு அவமானம் அடைவது அபவாதம் பெறுவது தடுத்து நிறுத்தப் படலாம். இதனை ஆய்வு செய்து பார்க்கும் போது உண்மை நிலவரம் தெரியவரும். 

மேஷ லக்கினக்காரர்கள்:-

இவர்களின் ஜாதகத்தில் 8 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய், இவர்களுக்கு கடனால் அவமானம் ஏற்படும். மேலும் அந்நிய பெண்கள் மீது மோகம் கொண்டு அலைவதால், அபவாதம் எனும் அபகீர்த்தி அடைவர். பாகியாதிபரான, குரு , இவர்களின் ஜாதகத்தில், 8 ஆம் இடம் எனும் அஷ்டமத்தில் இருப்பின், இவர்களுக்கு கீழ்த்தரமான நடத்தை, ஆசைகள் போக்குகளோடு, நீண்ட காலம் அவமானகரமான வாழ்க்கையை நடாத்தும்படியாக நேரிடும். அதேபோல், சனி 8ல் இருக்கப் பிறந்தவர்கள், நல்லோர்களை அவமானம் செய்வார், தானும் அவமானம் அடைவார். 10  க்குடையவரான சனி 8ல் இருப்பதால், சனி தசையில் 10ஆம் ஆதிபத்தியம் நடைபெறும் காலத்தில் , அதாவது முற்பகுதியில், அபவாதம், ஊரை விட்டு செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

கன்னி லக்கினக்காரர்கள்:-

இவர்களின் ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் உள்ள புதன், கடனால் அவமானம், கட்டுப்பட நேரல் போன்றவை உண்டாகும். பொய்யும், கபட குணமும் உள்ளவராயும், திருட்டில் கெட்டிக்காரராயும் இருப்பார். இதனால் இவர்கள் அவமானமும், அபகீர்தியெனும் அபவாதம் அடைவர். குரு , 8 இல் இருக்கப் பிறந்தவர்கள், கீழ்த்தரமான சுபாவம் உடையவர்கள். கேவலமான தொழில் செய்து பிழைப்பவர்கள். பெரிய தர்மவான் போல் நடித்து, மோசம் செய்பவர்கள். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பின், அபகீர்த்தி அடைவார்கள்.

சனி, 8ல் இருக்கப் பிறந்தவர்கள், குடி, சூதாட்டம், விபச்சாரம் முதலான கெட்டப் பழக்கங்கள் உடையவர்கள். இவர்களின் பிள்ளைகள், நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள். நல்லோர்களை அவமானம் செய்வார்கள்.

விருச்சிக லக்கினக்காரர்கள்:-

இவர்களின் ஜாதகத்தில் 8 ஆம் இடத்தில் உள்ள சூரியனால், இவர்கள் கபட குணம் உள்ளவர்களாகவும், திருட்டில் கெட்டிக்காரர்களாகவும், அந்நியரை ஏமாற்றி பிழைப்பவராகவும் இருப்பார்கள். அபவாதம்அடைவதால்,  ஊரை விட்டுச் செல்ல வேண்டிய நிலை, பிறரை அடித்துப் பிழைக்க வேண்டிய நிலை போன்றவை உண்டாகும். சனி, 8 ல் இருந்தால், அரசாங்கத்தால் துன்பங்களை அனுபவிப்பார். அந்நிய ஸ்த்ரீ சகவாசம் ஏற்படும். திருட்டுத்தனமாக வேறு இடத்தில் பிள்ளை உண்டாவது ஏற்பட்டு அவமானம் அடைவார்.

மீன லக்கினக்காரர்கள்:-

ஆறாம் அதிபரான சூரியன், இவர்களின் ஜாதகத்தில், 8 ஆம் இடத்தில் இருப்பின்  கெட்ட வழிகளிலே மனம் செல்வதும், மறைந்து வசிக்க நேர்வதும், அந்நிய ஸ்த்ரீ சகவாசமும் உண்டாகும். சூரியன் , துலாத்தில் இறுக்கப் பிறந்தவர்கள், ஒழுக்கமற்றவர்கள், பலம் அடைந்தவர்களிடம் பணிந்து போகிறவர்கள். செவ்வாய், 8 ல் இருக்கப் பிறந்தவர்கள், சுலபமாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பெண்களால் ஏமாற்றப்பட்டு அவமானப்படுபவர்கள்.

புதன், 8ல் இருப்பவர்கள், அவர்களின் காமத்தை வெளிக்காட்டாமல் மறைத்து விடுவர். திருட்டுத் தனமாக வேறு இடத்தில பிள்ளை உண்டாவதும் ஏற்பட வாய்ப்பு. 

குரு, 8ல் இருப்பவர்கள், கடனால் அவமானம், ஏற்படும்.

சனி, 8ல் இருந்தால், நல்லோர்களை அவமானம் செய்வார், தானும் அவமானம் அடைவார்.

ராகு, 8ல் இருப்பவர்கள், கெட்ட நடத்தை உடையவர்கள், வஞ்சகர்கள், அவமானகரமான நடத்தை உள்ளவர்கள். 

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com