கரோனாவும் ராகு - கேது பெயர்ச்சியும்!

உலகியல் சார்ந்த விஷயங்களில் முன்கூட்டியே கணிப்பதற்கு இறைவன் தந்த வரப்பிரசாதம் ஜோதிடம்.
கரோனாவும் - ராகு கேது பெயர்ச்சியும்!
கரோனாவும் - ராகு கேது பெயர்ச்சியும்!

உலகியல் சார்ந்த விஷயங்களில் முன்கூட்டியே கணிப்பதற்கு இறைவன் தந்த வரப்பிரசாதம் ஜோதிடம். பின்னாளில் நமது முன்னோர்கள் இதை மனிதர்களுக்கும் பொருத்தி பலன்களை எழுதித் தந்து சென்றுள்ளார்கள். 

எப்படி மனிதர்களுக்கு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளை வைத்து பலன்கள் சொல்கிறோமோ அதைப் போலவே உலகியல் சார்ந்த விஷயங்களுக்கும் நாம் இதை வைத்தே பலன்கள் சொல்ல வேண்டும். அப்படிப் பார்க்கும் முறையை காலபுருஷ தத்துவம் என்று சொல்வார்கள். ஒருவருக்கு வரும் நோய் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களை குறிப்பது ஆறாம் வீடாகும். இதை ஜோதிடத்தில் ரண ருண ரோக ஸ்தானம் என்று குறிப்பிடுவார்கள். கால புருஷ தத்துவத்தின்படி ரண ருண ரோக ஸ்தானமாகவும், ஆறாமிடமாகவும் அமைந்திருப்பது கன்னி ராசி. 

நவக்கிரகங்களில் வலிமையானதாக குறிக்கக்கூடிய கிரகங்கள் ராகு கேது. சூரியனை விட சந்திரனும், அவரை விட செவ்வாயும் வலிமையாகும். செவ்வாயை விட புதனும் அவரை விட குருவும் வலிமை உடையவர்கள். குருவை விட சுக்கிரனும், இவரை விட சனியும் வலிமை கொண்டவராக இருக்கிறார். சனியை விட அதிக பலம் கொண்ட கிரகங்கள் ராகு கேது. விதியை மாற்றக்கூடிய கிரகங்கள் ராகு கேது. இவை சாயா கிரகங்கள் எனப்படுகின்றன. இந்த கிரகங்களுக்கு சுய வீடு கிடையாது. எந்த ராசியில் இருக்கிறார்களே அந்த ராசிநாதனின் பண்பை எடுத்துக் கொள்வார்கள். அந்த ராசியினுடைய காரகத்துவத்தை பிரதிபலிப்பவர்களாகவும் இருப்பார்கள். 

காரகத்துவத்தின் அடிப்படையில் கர்மகாரகன் எனப்படுபவர் சனி பகவான். அனைத்து கிரகங்களுக்கும் ஸ்தான பலம் மற்றும் திரிக் பலம் உண்டு. இதில் சனி பகவானின் பார்வை 3 - 7 - 10 ஆகியவை ஆகும். 
வாக்கியப்பஞ்சாங்கப்படி தற்போது தனுசு ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். 3 ம் பார்வையாக - கும்ப ராசியையும், 7 ம் பார்வையாக- மிதுன ராசியையும், 10 ம் பார்வையாக - கன்னி ராசியையும் பார்க்கிறார். சனி, கேது பகவான் தனுசு ராசியில் இருக்கும் நிலையில், 18/11/2019 - குரு பகவான் தனுசு ராசிக்கு வந்தார். ஜனவரி முதல் வாரம் செவ்வாய் பகவானும் தனுசு ராசியில் சஞ்சரிக்க, நான்கு கிரகங்களின் ஆதிக்கம் பெற்றது தனுசு ராசி. 

வரலாற்று ரீதியாக பார்க்கும் பொழுது சர்ப்ப கிரகங்களுடன் சனி பகவான் இணையும் போது உலகத்தில் அசம்பாவிதம் நடந்துள்ளது. 1960ம் ஆண்டு சனி பகவான் ராகு பகவானுடன் இணைந்து இருந்த போது இந்தோ சீனா போர் நடைபெற்றது. தற்போது சனி பகவானின் பார்வை கன்னி ராசியின் மீது விழுவதால் வியாதி ஏற்பட்டுள்ளது. சுப பலன்களைக் கொடுக்கக் கூடிய கிரகங்களும் சர்ப்ப கிரகங்களின் பிடியில் இருப்பதால் சுப பலன்களை தர இயலவில்லை. அதனால்தான் கடந்த மார்கழி மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணம் மிகவும் வலிமையானதாக இருந்திருக்கிறது.

மார்ச் 23, 2020 - செவ்வாய் பகவான் மகர ராசிக்கு மாறினார். உச்ச வீடு. மருத்துவத்திற்கு காரகத்துவன். செவ்வாய் உச்ச நிலையில் மாறிய போது நோய் குறைவது போன்ற நிலை இருந்தது. மிகவும் குறைவான பரவலாக இருந்த கரோனா மே-5ல் செவ்வாய் பகவான் பகை வீடான கும்ப ராசிக்கு சென்றவுடன் கரோனாவின் கோர முகம் தெரியத் தொடங்கியது. நமது தலைநகர் சென்னையில் கரோனா உச்சம் பெற துவங்கியது. அனைத்து கிரகங்களின் சஞ்சாரமும் கடந்த சில மாதங்களாக ராகு கேது எனும் சர்ப்ப கிரகங்களுக்குள் அடங்கியிருந்தது. அதிலும் குரு - சனி கிரகங்கள் வக்ரம், வைகாசி - ஆனியில் புதன் மற்றும் சுக்ர பகவான் வக்ரம். இவ்வாறாக கிரகங்கள் அதன் இயல்பு நிலையிலிருந்தும் மாறி இருந்தன.  

ஆடி மாதம் பிறந்த போது அனைத்து கிரகங்களினுடைய அமைப்பிலும் நல்ல மாற்றம் வரத் தொடங்கியது. முதல் கிரகமாக சூர்ய பகவான் ராகு - கேது எனும் சர்ப்ப வட்டத்தில் இருந்து வெளி வருகிறார். ஆடி - 13 அன்று புதன் பகவான் சர்ப்ப வலையைக் கடந்தார். இந்த சூழலால் தடுப்பு மருந்தின் முன்னேற்றம், மக்களிடம் தைரியம் அதிகமாதல் போன்ற நல்ல செய்திகளைக் கேட்க முடிந்தது. நோயின் பரவல் அதிகமானாலும், அதை எதிர்த்துப் போராடும் தன்னம்பிக்கையும் தைரியமும் மக்களிடம் அதிகரித்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. 

சூரியன் சர்ப்ப கிரகங்களின் பிடியிலிருந்து வெளி வந்தாலும் பகை வீட்டிற்கு வருவதால் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்காது. ஆனால் ஆவணி மாதம் சூரிய பகவான் தன் சொந்த வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார். இதனால் அரசிடம் சில நல்ல மாற்றங்களை நம்மால் எதிர்பார்க்க முடியும். சில தளர்வுகளை வெளியிடலாம். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் அரசின் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். 

29-08-2020 (ஆவணி - 13) அன்று புதன் பகவான் கன்னி ராசிக்கு மாறுவதன் மூலம் ஆட்சி - உச்சம் ஆகிறார். புதன் கிரகமானது கல்வி - புத்திக்கூர்மை - சமயோஜித புத்தி ஆகியவற்றிக்கு காரகம். எனவே தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முன்னேற்றம், புதிய மருந்து கண்டுபிடிப்பது போன்ற செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. கல்வி காரகன் என்பதால் மக்களிடம் விழிப்புணர்வு அதிகரிக்கவும் வழி செய்யும் விதமாக இந்த கிரக மாற்றம் இருக்கும். 31-07-2020 முதல் சுக்ரன் நட்பு வீடான மிதுனத்தில் இருந்தாலும் ராகுவுடன் இணைந்திருந்ததால் சுப பலன்களை கொடுக்க முடியாமல் இருந்தார். 

செப்டம்பர் 1ம் தேதி நடந்த ராகு - கேது பெயர்ச்சியால் சுக்ர பகவான் சர்ப்ப வலையிலிருந்து விலகினாலும் 17-11-2020 வரை அவர் கடந்து வரும் ராசிகள் அவருக்கு நட்பு நிலையில் இல்லை. எனினும் 09-10-2020 முதல் 20-10-2020 வரை பூரம் நட்சத்திர சாரம் என்னும் சுய சாரம் பெறுவதால் சில பொருளாதார முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். பொருளாதாரத்தில் மக்களின் இறுக்கமான நிலையிலிருந்து சிறிது நிம்மதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும் முழுமையான பொருளாதார முன்னேற்றத்தை 17-11-2020 முதல் நம்மால் உணர முடியும். சுக்ர பகவான உணர்த்துவார்.

12-08-2020 முதல் செவ்வாய் ஆட்சி நிலை பெறுகிறார். இந்நிலையில் குருபகவானின் 5ம் பார்வையையும் செவ்வாய் பகவான் பெறுகிறார். சொந்த வீடு மற்றும் குரு பார்வை இருப்பதால் மருத்துவத்தில் சிறந்த முன்னேற்றம் இந்த ஆகஸ்ட் மாதம் முதல் இருக்கும். வெகு விரைவில் தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வரும்.

இந்த ராகு கேது பெயர்ச்சியில் ராகு பகவான் செவ்வாய் சாரத்தையும், கேது பகவான் புதன் சாரத்தையும் பெறுகின்றனர். 18 வருடத்திற்குப் பிறகு ராகு பகவான் ரிஷபத்தையும் - கேது பகவான் விருச்சிக ராசியையும் அடைகிறார்கள். இருவருக்குமே இது உச்ச ராசியாகும். மிகப் பெரிய நல்ல மாற்றங்கள் உலகளவில் நடைபெறும். பொருளாதாரம் ஐப்பசி மாதம் நிகழும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு கொஞ்ச கொஞ்சமாக முன்னேற்றம் பெறும்.

கட்டுரை: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

+91 7845 11 9542

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com