இந்த வாரம் எந்த ராசிக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (டிசம்பர் 11 - டிசம்பர் 17) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
weekly predictions
weekly predictions

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (டிசம்பர் 11 - டிசம்பர் 17) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நன்மைகள் அதிகம் நடைபெறும். உங்கள் திட்டங்களை முறைப்படுத்தி வாழ்வில் முன்னேறப் பாடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் சொத்துகள் சேரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் ஏற்படும். நிலுவைத் தொகைகள் கிடைக்கப்பெற்று மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு சுயதொழிலில் வருமானம் கூடும். திறமையான பணியாளர்களால் வியாபாரம் விருத்தியாகும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் யாரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பேச்சில் நாவடக்கம் தேவை. கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் எதிர்பார்த்த பலனைப் பெற முடியும்.

பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்வீர்கள். நீண்ட நாளாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் சிலருக்கு மழலைப்பேறு உண்டாகும்.

மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைப்பீர்கள். கவனம் சிதறாமல் இருக்க யோகா, பிரணாயாமம் செய்யவும்.

பரிகாரம்: செவ்வாய் பகவானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்:  11, 12. 

சந்திராஷ்டமம்:  13, 14.

*****

ரிஷம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வர வேண்டிய தொகையை வசூலிக்க முனைப்பு காட்டுவீர்கள். பொருளாதார நெருக்கடியை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். நீண்ட தொலைவிலிருந்து முக்கியமான செய்திகள் வரலாம்.  

உத்தியோகஸ்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். விவசாயிகள் நவீன முறையில் விவசாயம் செய்து மகசூலில் லாபம் பெறுவீர்கள். புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கடினமான சூழ்நிலையை இனிமையான நடவடிக்கையால் மாற்றி அமைப்பீர்கள். மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். 

கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் உருவாகும். வருமானம் பெருகும். பெண்மணிகளுக்கு தாய்வழி உறவுகளில் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடுவீர்கள். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையோடு படிப்பில் ஈடுபடுவீர்கள். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்:  11, 13. 

சந்திராஷ்டமம்: 15, 16.

*****

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

முக்கியமான பணியொன்றைச் செய்து முடிக்க ஓய்வின்றி உழைப்பீர்கள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரால் வாழ்வில் திருப்பம் ஏற்படலாம். பணவரவு பாதிக்கப்பட்டாலும் தட்டுப்பாடு இராது. பேச்சில் சற்று நிதானம் தேவை. 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நம்பிக்கையான நபர்களைப் பணியில் அமர்த்தவும். எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள். விவசாயிகள் வயல் வரப்பு பிரச்னைகளில் நல்ல முடிவைக் காண்பீர்கள். கால்நடைகளால் லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் முடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். பெண்மணிகள் கணவரிடம் நேசமாகப் பேசி பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். ஆன்மிகச் சுற்றுலா செல்வீர்கள். செலவைக் குறைத்து சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். மாணவமணிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறக் கடுமையாக உழைப்பீர்கள். உள்ளரங்கு  விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 12, 13. 

சந்திராஷ்டமம்: 17.

*****

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். தடைக் கற்களை படிக் கற்களாக மாற்றி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உங்களின் மதிப்பு, மரியாதைக்கு எந்தக் குறையும் இருக்காது. ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். தொண்டர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். பெண்மணிகள் மிகுந்த உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவமணிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் படிப்பீர்கள். கல்வியில் முன்னேற அதிகம் உழைப்பீர்கள். 

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 13, 14. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

கருத்தாக பணம் சேர்த்தாலும், செலவுகள் வந்துகொண்டே இருக்கும். பங்காளி வழிகளில் பழிச் சொற்கள் கூறினாலும், படபடப்பு காட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். தொந்தரவு, தொல்லை கொடுப்போரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொற்படி கூடுதல் பணிகளைச் செய்யவேண்டியிருக்கும். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் சுமாரான லாபம் கிடைக்கும். அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டாம். விவசாயிகள் போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். நியாயமான முறையில் உங்கள் கோரிக்கைகளை எடுத்துரைக்கலாம்.  

அரசியல்வாதிகள் முயற்சி செய்யும் பதவிக்கு சில நெருங்கிய நண்பர்களால் இடையூறுகள் ஏற்படும். கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். பொருள் வரவு திருப்தியாக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் மிகுந்த கவனமாக இருப்பீர்கள். கல்வி விஷயமாக நண்பர்களுடன் கலந்தாலோசியுங்கள். உடற்பயிற்சிகளில் ஈடுபடவும்.

பரிகாரம்: சூரிய பகவானை வணங்கி வரவும்.

அனுகூலமான தினங்கள்:  11, 15. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

*****

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். பிறருக்கு உதவிகள் செய்து பெருமைப்படுவீர்கள். வரவு செலவு விஷங்களில் கவனமாக இருக்கவும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். 

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  வியாபாரிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். புதிய யுக்திகளால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவீர்கள். கால்நடைகளால் லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தொண்டர்களின் அலட்சியப் போக்கைப் பெரிது படுத்தாதீர்கள். கலைத்துறையினரின் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். வருமானம் உயரும். பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய் வழி உறவினர்களால் சிறிது மனக் கசப்பு உண்டாகும்.  அனைவரிடமும் பரஸ்பரம் அன்பு காட்டுங்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சிகளில் ஈடுபடவும்.

பரிகாரம் : பெருமாளை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 14, 15. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வாழ்க்கைத் தரத்தை வளமாக்க முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். வருமானம் சுமாராக இருக்கும். செலவுக்கு பிறர் உதவியை நாட நேரிடும். முக்கியமானவர்களைக் கலந்தாலோசித்து உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். 

 உத்தியோகஸ்தர்களின் எதிர்பார்ப்புகள் தற்சமயம் நிறைவேறாமல் போகலாம். ஆனாலும் உங்கள் கடமையில் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். தாமதம் காரணமாக வாடிக்கையாளர்களின் அதிருப்தியை சந்திப்பீர்கள். விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட பணிகள் சுமூகமாக முடியும். நீர்ப்பாசன வசதியில் கவனம் செலுத்தவும். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். தொண்டர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பெண்மணிகளுக்கு தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்து கல்வியில் கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: ஸ்ரீராமரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  13, 16. 

சந்திராஷ்டமம் :  இல்லை.

*****

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

செய்யும் தொழிலில் சிறு சிறு தடைகள் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட்டால் தடைகளைத் தகர்க்கலாம். வர வேண்டிய தொகை தள்ளிப்போகும். ஆனாலும் பணச் செலவுகளுக்கு குறையிருக்காது.  

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாகவே இருக்கும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கு எல்லா தடைகளும் விலகும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் வயல் வரப்பு பிரச்னைகளில் சுமூகமான முடிவைக் காண்பீர்கள். விளைபொருள் உற்பத்தி அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் பாராட்டுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். மாணவமணிகள் எதிர்காலத்தைப் பற்றி யோசித்து செயல்படவும். ஆசிரியர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்குவார்கள். 

பரிகாரம் : பழனி தண்டாயுதபாணியை வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 12, 15. 

சந்திராஷ்டமம் : இல்லை.

*****

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருள் வரவு சீராக இருக்கும். சுறு சுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். மற்றபடி உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 

உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். சிலருக்கு புதிய இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படவும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும். போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
  
அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்களாலேயே சில இடையூறுகள் ஏற்படும். கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெண்மணிகள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பொருள் வரவால் திருப்திகரமான முன்னேற்றம் அடைவீர்கள். சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவமணிகள் படிப்பில் நன்கு தேர்ச்சி பெற கடினமாக உழைப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயரை வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 13, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)


எதிர் வரும் இடையூறுகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நல்லோரின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனாலும் உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். பதவி உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னைகள் குறையும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய கழனிகளை வாங்குவீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். எதிர்க் கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். மனதை ஒருநிலைப்படுத்த யோகா, பிரணாயாமம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

பரிகாரம்: ஸ்ரீஐயப்பனை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

செய்தொழிலில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். வெற்றி பெறுவதற்கு சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். யாரையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இதனால் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நன்கு ஆலோசித்த பிறகே புதிய முதலீட்டில் ஈடுபடவும். கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். விவசாயிகள் அதிகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். ஆனாலும் மகசூல் லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் அனைவருடனும் அன்புடன் பழகவும். மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பெண்மணிகள் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வீர்கள். சிலருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடவும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

அவசியமான வேலைகளில் தீவிர கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகரித்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தை வழி உறவினர்களின் இல்லத்து சுப நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக பொருளுதவி செய்யும் நிலை ஏற்படலாம். 

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். நண்பர்களால் மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தவறுகள் நிவர்த்தியாகும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். விவசாயிகளுக்கு பொருளாதார வசதி குறிப்பிடும் படியாக இராது. புதிய குத்தகைகள் தற்போது கைகொடுக்காது.  

அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள பாடுபடுவீர்கள். களப்பணிகளில் நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு தாமதம் ஆகலாம். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பயணங்களைத் தள்ளிப் போடவும்.  மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் அடைவீர்கள்.  

பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்:  13, 17. 

சந்திராஷ்டமம்: 11, 12.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com