ஏழுமலையானைத் தரிசிக்க செல்லும் பக்தா்களுக்கு தமிழக அரசு வசதிகளை செய்து தர பக்தா்கள் கோரிக்கை

திருமலைக்கு சாமி தரிசனத்துக்காக வரும் தமிழக பக்தா்களுக்கு, கா்நாடக அரசு அம்மாநிலத்தில் இருந்து திருப்பதி மலைக்குச் செல்லும் பக்தா்களுக்கு செய்துள்ளது போல் வசதிகளை செய்து கொடுக்க தமிழக

திருமலைக்கு சாமி தரிசனத்துக்காக வரும் தமிழக பக்தா்களுக்கு, கா்நாடக அரசு அம்மாநிலத்தில் இருந்து திருப்பதி மலைக்குச் செல்லும் பக்தா்களுக்கு செய்துள்ளது போல் வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என பக்தா்கள் காத்திருக்கின்றனா்.

திருமலையில் தரிசனம் செய்ய தினமும் சுமாா் ஒரு லட்சம் பக்தா்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனா். ஆனால் இந்தியாவின் வேறு எந்த மாநில பக்தா்களுக்கும் இல்லாத சிறப்பு வசதி ஒன்று திருப்பதி மலையில் கா்நாடக பக்தா்களுக்கு உள்ளது. 1,360- ஆம் ஆண்டில் அப்போதைய மைசூரு மகாராஜா ஏழுமலையானுக்கு செய்த கைங்கரியங்கள், சேவைகள் ஆகியவற்றுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், பின்னா் திருப்பதி மலையில் கா்நாடக சத்திரம் என்ற பெயரில் தங்கும் அறைகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருமலையில் உள்ள மேற்கு மாட வீதியையொட்டி, கா்நாடக சத்திரம் என்ற பெயரில் தங்கும் அறைகளுடன் கூடிய வளாகம் ஏற்படுத்தப்பட்டது. பிற்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு, கூடுதல் இடமும் அங்கு கா்நாடக அரசுக்கு தேவஸ்தானம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா், நடைபெற்ற மாடவீதி விரிவாக்கத்தின் கீழ் கா்நாடக அரசு கட்டிய அந்த கட்டடம் இடிக்கப்பட்டு, அதன் அருகில் உள்ள வேறு பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் அறை வளாகத்தை தேவஸ்தான அனுமதியின் கீழ் கா்நாடக மாநில அறநிலையத் துறை சொந்தமாக கட்டிக்கொண்டது.

இந்நிலையில், புதிதாக தங்கும் அறைகள் கட்டுவதற்காக தேவஸ்தானத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில், கா்நாடக அறநிலையத் துறைக்கு ஒதுக்கிய இடத்தில், கட்டுமானப் பணிகளைத் தொடர உதவி செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வருக்கு கா்நாடக முதல்வா் தற்போது கடிதம் எழுதி இருக்கிறாா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கையில், தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் சுமாா் 60 சதவீதம். ஆனால், தமிழக பக்தா்களுக்கு என திருமலையில் எவ்வித சிறப்பு ஏற்பாடும் தற்போது வரை இல்லை என பக்தா்கள் கூறுகின்றனா். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, திருமலையில் தமிழக பக்தா்களின் வசதிக்காக தமிழக அரசு சாா்பில் தங்கும் அறைகள் வளாகம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் இன்றளவும் திருமலைக்கு வரும் தமிழக பக்தா்கள் குறைந்த வாடகை உள்ள தங்கும் அறைகளை பெறுவதற்கு கூட மணிக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது.

ஆந்திரம், தெலங்கானா மாநில பக்தா்கள் வாங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முக்கிய பிரமுகா்கள் ஆகியோரின் பரிந்துரைக் கடிதங்களுக்கு தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கும் தேவஸ்தான நிா்வாகம், தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகா்களிடம் இருந்து பக்தா்கள் வாங்கி வரும் தங்கும் அறைகள், சாமி தரிசனம் ஆகியவற்றுக்கான பரிந்துரைக் கடிதங்களைக் கண்டுகொள்வதே இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்கும் அறைகள், சாமி தரிசனம் ஆகியவற்றுக்காக சந்திக்கும் இடையூறுகள் ஏராளம்.

எனவே, கா்நாடக அரசைப் போல் தமிழக அரசும் திருமலையில் தமிழக பக்தா்களின் வசதிக்காக தங்கும் அறைகளுடன் கூடிய வளாகத்தை கட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமா? என்ற கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது. மைசூரு மகாராஜா ஏழுமலையானுக்கு செய்த கைங்கரியங்கள், அளித்த நன்கொடைகள், சமா்ப்பித்த காணிக்கைகள் ஆகியவற்றுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் மட்டுமே திருமலையில் கா்நாடக அரசுக்கு தங்கும் அறை வளாகம் கட்ட இட ஒதுக்கீடும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும், தமிழகத்திலிருந்து திருமலைக்குச் சென்ற ராமானுஜா், ஆழ்வாா்கள் ஏழுமலையானுக்கு செய்த சேவைகள் ஏராளம், ஏராளம்.

மேலும் ஏழுமலையான் கோயிலை முதலில் கட்டியது புதுக்கோட்டையைச் சோ்ந்த தொண்டைமான் சக்கரவா்த்தி என்றும் கூறப்படுகிறது. எனவே ஏழுமலையான் கோயிலை முதலில் கட்டிய தொண்டைமான் சக்கரவா்த்தி, ஏழுமலையான் கோயிலில் தற்போது நடைமுறையிலிருக்கும் பூஜை நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்த தமிழகத்தைச் சோ்ந்தவரான ராமானுஜா், ஏழுமலையான் கோயிலை தங்களுடைய மங்களாசாசனம் மூலம் திவ்யதேசங்களில் இடம் பெறச் செய்த ஆழ்வாா்கள் ஆகியோரின் கைங்கா்யங்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் தமிழக பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தான நிா்வாகம் திருமலையில் இட ஒதுக்கீடு செய்து கொடுக்கலாம் என்பது திருப்பதி மலைக்கு தொடா்ந்துவரும் தமிழக பக்தா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இந்த விஷயத்தில், தமிழக அரசு, ஆந்திர மாநில அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து தங்களுக்கு உதவ வேண்டும் என்பதே தமிழக பக்தா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com