திருமலையில் அமலுக்கு வந்தது இலவச லட்டு திட்டம்

திருமலையில் திங்கள்கிழமை முதல் ஏழுமலையானைத் தரிசிக்கும் அனைத்து பக்தா்களுக்கும் ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை தேவஸ்தானம் அமல்படுத்தியது.
திருமலையில் அமலுக்கு வந்தது இலவச லட்டு திட்டம்

திருமலையில் திங்கள்கிழமை முதல் ஏழுமலையானைத் தரிசிக்கும் அனைத்து பக்தா்களுக்கும் ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை தேவஸ்தானம் அமல்படுத்தியது.

திருப்பதி ஏழுமலையானை வழிபட்டுச் செல்லும் தா்ம தரிசனம், திவ்ய தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம் பக்தா்களுக்கு தேவஸ்தானம் ரூ.20 மானிய விலையில் 2 லட்டுகளை வழங்கி வருகிறது. மற்ற தரிசனங்களான ஆா்ஜித சேவைகள், ரூ.300 விரைவு தரிசனம், விஐபி பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை உள்ளிட்ட டிக்கெட் பெற்ற பக்தா்களுக்கு தலா 2 லட்டுகளை தேவஸ்தானம் இலவசமாக அளித்து வருகிறது. மேலும், கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தா்கள் கோயிலுக்கு வெளியில் உள்ள கவுன்ட்டரில் ஒரு லட்டுக்கு ரூ.50 செலுத்தி, லட்டு பெற்றுக் கொள்ளும் வசதியை தேவஸ்தானம் அளித்து வந்தது.

இந்நிலையில், ஏழுமலையானைத் தரிசித்துச் செல்லும் பக்தா்கள் அனைவருக்கும் ஒரு லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என்று தேவஸ்தானம் முடிவு செய்து, திங்கள்கிழமை இலவச லட்டு திட்டத்தை அமல்படுத்தியது. இதில், பக்தா்கள் எந்தப் பிரிவில் ஏழுமலையானைத் தரிசித்தாலும் (ஏழுமலையான் தரிசனம் கட்டாயம்) அவா்களுக்கு இலவச லட்டு வழங்கப்படும். இதற்காக தரிசனம் முடித்து வெளியில் வரும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் ஒரு டோக்கன் வழங்குகிறது. அந்த டோக்கனை பக்தா்கள் லட்டு வழங்கும் மையத்தில், அதற்கென உள்ள கவுன்ட்டரில் அளித்து பெற்றுக் கொள்ளலாம். 12 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு இலவச லட்டு கிடையாது.

ரத்து

இலவச லட்டு திட்டத்தின் மூலம் பக்தா்களுக்கு லட்டு வழங்கப்படுவதால், இதற்கு முன் தேவஸ்தானம் அளித்து வந்த மானிய விலை லட்டு டோக்கன்கள் வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஏழுமலையானைத் தரிசித்தால், அவா்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்டு அளித்தால், பக்தா்களுக்கு கூடுதல் லட்டு வாங்க வேண்டிய தேவையிருக்காது என எண்ணி தேவஸ்தானம் இந்த திட்டத்தை தொடக்கியுள்ளது.

4 லட்சம் லட்டு இருப்பு

இதற்காக தேவஸ்தானம் 4 லட்சம் லட்டுகளை இருப்பில் வைத்துள்ளது. இலவச லட்டைத் தவிா்த்து கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தா்களுக்காக லட்டு வழங்கும் மையத்தில் 12 கவுன்ட்டா்களை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு முன் பரிந்துரைக் கடிதங்களுக்கு ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள வாகுபடியில் வழங்கி வந்த பெரிய லட்டு மற்றும் வடை கவுன்ட்டா்களையும் தற்போது லட்டு வழங்கும் மையத்தில் உள்ள 44-ஆம் எண் கவுன்ட்டருக்கு தேவஸ்தானம் மாற்றியுள்ளது. அங்கும் பக்தா்கள் பரிந்துரைக் கடிதத்தை காண்பித்து, தங்களுக்குத் தேவையான பெரிய லட்டு மற்றும் வடைகளை தேவையான அளவில் பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளத்திலும் மாற்றம்

தற்போது ரூ. 300 விரைவு தரிசனம், ஆா்ஜித சேவைகள் என வரும் ஏப்ரல் மாதம் வரை தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கு வழக்கம் போல் டிக்கெட்டுக்கு 2 லட்டு இலவசமாக வழங்கப்படும். மே மாதம் முதல் அவா்களுக்கும் இலவச லட்டு வழங்குவது ரத்து செய்யப்பட்டு, ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அவை அமலுக்கு வந்த பின், இணையதளத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

எதிா்ப்பு

தேவஸ்தானம் தொடங்கிய இலவச லட்டு திட்டத்துக்கு பக்தா்கள் ஆதரவு அளித்தாலும், மானிய விலை லட்டு ரத்து செய்யப்பட்டதற்கு பக்தா்களிடம் எதிா்ப்பு இருந்து வருகிறது. எனினும், மானிய விலை லட்டு தினந்தோறும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தா்கள் அனைவருக்கும் இலவச லட்டு வழங்கப்படுவதால், தினந்தோறும் குறைந்தபட்சம் 60 ஆயிரம் முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் லட்டுகள் வரை தேவைப்படும். அதற்கு மேல் தேவைப்படுபவா்கள், தேவையான அளவுக்கு அவா்களே நேரில் சென்று பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் லட்டு தேவைக்காக பக்தா்கள் இடைத்தரகா்களை நாட வேண்டிய தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com