அக்னியின் கோபமா சாபமா !

கடவுளின் விதிமுறைக்கு ஏற்ப பிறப்பும் இறப்பும் இந்தப் பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒருவித சுழற்சி ஆகும்.
அக்னியின் கோபமா சாபமா !
அக்னியின் கோபமா சாபமா !

கடவுளின் விதிமுறைக்கு ஏற்ப பிறப்பும் இறப்பும் இந்தப் பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒருவித சுழற்சி ஆகும். ஜெனன ஜாதகத்திலும் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களை அவரவர் தசாபுத்திகளின் வாயிலாக காணலாம். ஒருவர் ஜாதகத்தைக் கொண்டு கண்டத்தினை சொல்லலாம், ஆனால் இறப்பினை யாராலும் அவ்வளவு துல்லியமாகச் சொல்லமுடியாது. இது கடவுளின் கணக்கு. 

ஜோதிடர்கள் இறப்பைப் பற்றிய கணிப்பை எப்பொழுதும் கூறக்கூடாது. மரணம் என்பதை  அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் அந்த மாரகம் என்பது ஒரு அற்ப ஆயுளாக இருக்கக்கூடாது. மேலும் நம் அனைவரின் விருப்பமும் அவரவர் கடமையை முடித்து, பின்பு படுத்துத் தூங்கும் பொழுது தெரியா வண்ணம், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நம் இறப்பு இருக்க வேண்டும் என்பது விருப்பம் ஆகும். ஒவ்வொருவர் வாழ்விலும் எவ்வகையில் நம் இறப்பு இருக்கும் என்ற ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும்.  

ஒருவரது இறப்பு என்பது பஞ்சபூத தத்துவங்களுக்கு அடிப்படையில் அதாவது நீர் வழியாக, நெருப்பு மூலமாக, காற்றின் மூலம் பரவும் நோயின் வாயிலாக அதாவது வைரஸ்களால் அல்லது கிருமிகளால் கண்டம் என்பது step by step ஏற்படும். பூமாதேவியின் சீற்றத்தால், ஆகாயம் வழியாக, அவரவர் ஜாதக அமைபிற்கு ஏற்ப மரணம் சம்பவிக்கும் என்பது விதி.

முதலில் ஜாதகத்தில் ஒவ்வொரு வழியில் கண்டங்கள் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப நிகழும். பல்வேறு நூல்கள் வாயிலாகக் கூறப்பட்டுள்ளது. அதுவும் ஜாதகத்திற்கு ஒப்பாக ஒருசிலருக்கு அதன்படி நிகழ்வுகளும் அமைந்தது. நாம் இன்று பார்ப்பது நெருப்பில் ஏற்படும் கண்டம். அது எடுத்துக்காட்டு மூலமாக ஜாதக அலங்காரம் வாயிலாகப் பார்ப்போம். 

படித்தரும் செவ்வாய் சனி இவர் எட்டில் 

பரிந்துறில் லக்கினம் தன்னில்  

கொடியவெய்  யோன்இந் தொட்டினில் இருக்கக் 

கொடுமையாய்ச் சலத்தில்விழிந்  திறப்பன்!

முடவனும் கதிரும் எட்டினில் இருக்க 

மூண்டிடு  மகோதர வியாதி!

அடல்சனி கதிர்சேய் பிறையும் எட்(டு) உறையில்

அக்கினி ஆயுத மரணம் !

செவ்வாயும் சனியும் இணைந்து எட்டாமிடத்தில் அமர்ந்திருக்க, லக்கினத்தில் சூரியன் நிற்க, சந்திரன் எட்டாமிடத்தில் செவ்வாயுடன் சனியுடன் சேர்ந்து நின்றிருந்தால் அந்த ஜாதகன் நீரில் வீழ்ந்து, நீங்கா நித்திரை பெறுவான். சூரியனும் சனியும் 8இல் நின்றால் பெருவயிறு நோய் உண்டாகும். சூரியனும் சனியும் தேய்பிறை சந்திரனுடன் இணைந்து 8இல் நின்றிருந்தால் அந்த ஜாதகன் நெருப்பினால் அல்லது ஆயுதத்தில் மரணத்தை சந்திப்பான் என்று இந்த ஜாதக அலங்கார நூலில் கூறப்படுகிறது. 

எடுத்துக்காட்டாக அக்னி கண்டம் சார்ந்த ஒரு சிறு ஆராய்ச்சியைப் பார்ப்போம். ஒரு அம்மையாருக்கு தனுசு லக்கினம் மீன ராசி அவருக்கு மாரக கண்டத்திற்கு ஏற்ப நெருப்பால் கண்டம் ஏற்பட்டது. அந்த நேரம் கோட்சாரத்தில் 12ம் பாவத்தில் ஆத்மகாரகன் சூரியன், மாரகர்கள் புதன், சுக்கிரன், இவர்களோடு ஆயுள்காரகன் சனியின் பார்வை உச்சம் பெற்ற செவ்வாய் மற்றும் உச்சம் பெற்ற உடல்காரகன், அஷ்டமாதிபதி சந்திரன் மேல் இருந்தது. முக்கியமாக உயிர்காரகன் சூரியன் மற்றும் உடல்காரகன் சந்திரன் சஞ்சாரம் கண்டத்திற்குத் துணை நிற்கும்.

1. அக்னியால் கண்டம் என்பதை பொதுவான விதிகள் ஜோதிட சூட்சமத்தில் எவ்வாறு என்று மாணாக்கர்கள் தெரிந்துகொள்ளுவோம்.  

2. முதல் விதி தசாபுத்தி சாதகமாக இல்லை என்றால், அதுவும் அவரவர் தசாபுத்தி தான் நமக்கு செக் வைக்கும். கண்டதால் உயிர் பிரியவேண்டுமானால் ஆத்மகாரகன்  சூரியன் மற்றும் உடல் காரகன் சந்திரன் கட்டாயம் தசா புத்தி வாயிலாகவோ கோள்சாரம் வழியாகவோ உள்ளே வரவேண்டும்.

3. நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளோடு 3, 6, 8, 12 பாவங்கள் தொடர்பு அல்லது அவற்றின் அதிபதிகள் தொடர்பு கொள்ளும்பொழுது அக்னியால் கண்டம் ஏற்படும். 

4. மரணம் என்பது எவ்வகை என்று அவரவர் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப மற்றும் தெரிந்தும் தெரியாமலும் செய்த முன்ஜென்ம  கர்மாவின் கணக்குக்கு ஏற்ப நடைபெறும். DNA வாயிலாக முன்னோர்களின் சாபத்தில் அல்லது செவ்வாயின் சாபத்திற்கு ஏற்ப நெருப்பால் கண்டங்கள் ஏற்படும்.

5. கர்மகாரகன் சனீஸ்வரனுடன் துணையோடு தண்டனை தீவிரமாகச் செயல்படும்.  சனீஸ்வர பகவான் நெருப்பு கிரகத்தினை பார்க்கும் சமயம், உங்களின் ஜாதகத்தில் அவயோகர்கள் தொடர்பு ஏற்படும்பொழுது மரணம் அக்னியால் நடைபெறும் . 

6. நெருப்பு கிரக பிழம்புகளான சூரியன், செவ்வாய் 3, 6, 8, 12 பாவங்களை பார்த்தாலோ  சேர்க்கை பெற்றாலோ அவற்றின் தசாபுத்திக்கு  ஏற்ப நெருப்பால்  கண்டம் ஏற்படும். 

7. லக்னாதிபதி பாதகாதிபதி வீட்டில் சஞ்சாரம் செய்யும் பொழுது செவ்வாய் சனி தொடர்பு பெரும்  பொழுது இந்த நெருப்பில் கண்டம் ஏற்படும்.

8. பாதகாதிபதி உச்சம் பெறும் பொழுது நெருப்பு கிரகங்கள் பார்வையிட்டால்

9. கோச்சார சனி செவ்வாயின் பார்வை படும்பொழுது மற்றும் தொடர்பு பெரும்பொழுது கண்டம் ஏற்படும்.

10. கோட்சர சனி: அஷ்டம சனியாகவோ, பாத சனியாகவோ - சந்திரனான  உடல்காரகனோடு தொடர்பு பெற்றால் கண்டத்தின் தாக்கம் அதிகம் ஏற்படும்.

11. மரணம் நிகழும் சம்பவம் கட்டாயம் அஷ்டமாதிபதி நிலையின் பலம் தெரியவேண்டும். உயிர்காரகன் சூரியன், ஆயுள் காரகனோடு (சனி), செவ்வாய், ராகு அல்லது கேது அல்லது தேய்பிறை சந்திரனோடு தொடர்பு கொள்ளும் நேரம்  துர்மரணம் ஏற்படும். 

12. நெருப்பு ராசிகளோடு அல்லது நெருப்பு கிரகங்களான சூரியன் செவ்வாய் நட்சத்திரங்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது ஜாதகருக்கு அஷ்டமாதிபதி/ பாதகாதிபதி/ மாரகதிபதிகள் தசை நடைபெறும் காலம் அக்கினியால் பிரச்னை ஏற்படும்.  

இம்மாதிரி சம்பவங்கள் மாரகத்திற்கு ஒப்பான காலகட்டத்தில் இந்த வகை தொடர்பு ஏற்படுமானால் கட்டாயம் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அக்கினியால் ஏற்படும் கண்டதைச் சரிசெய்யப் பரிகாரம் மேற்கொண்டால் நன்று.

பரிகாரம் 

1. திருச்செந்தூர், வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாய்க்குரிய முருகரை தரிசனம் செய்யலாம்.

2. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்யலாம். 

3. பழம்பெரும் குளம் உள்ள சிவன் கோவில்களில் குளித்து தரிசனம் செய்யலாம். 

4. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கச்சூர்  மருந்தீஸ்வரர் ஆலயம், சிங்கப்பெருமாள் கோவில், திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் சென்று, உங்கள் நட்சத்திர காலங்களில் பசும் பால் அபிஷேகம்  செய்து அர்ச்சனை செய்யலாம்.

5. அக்னீஸ்வரர் குடிகொள்ளும் அனைத்து ஆலயங்களுக்கும் செல்லலாம். முக்கியமாக யாகம் செய்யும் அனைத்து கோவிலுக்கும் யாகத்திற்கு உரியப் பொருள்களை வாங்கி கொடுக்கவும்.
 
அப்துல் கலாம் கூற்றுக்கு ஏற்ப "நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்" அதற்கு ஏற்ப நாம் நல்ல கர்மாவை சம்பாதித்து கண்டங்களின் விகிதாச்சாரத்தைக் குறைத்துக் கொள்ளவும். 

குருவே சரணம் 

ஜோதிட சிரோன்மணி தேவி,  

Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com