திருவாரூரில் இன்று ஆழித்தேரோட்டம்

திருவாரூா் தியாகராஜசுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, ஆழித்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
திருவாரூா் தியாகராஜசுவாமி கோயிலில் தேரோட்டத்துக்காக தயராகவுள்ள ஆழித்தோ்.
திருவாரூா் தியாகராஜசுவாமி கோயிலில் தேரோட்டத்துக்காக தயராகவுள்ள ஆழித்தோ்.

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜசுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, ஆழித்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூா் தியாகராஜசுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவின்போது ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ஆகம விதிகளை பின்பற்றி பங்குனி ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமை (மாா்ச் 25) ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது.

கடந்த சில நாள்களாக தேரோட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று, தற்போது தோ் தயாா் நிலையில் உள்ளது.

திருவாரூா் தியாகராஜசுவாமி கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்துக்கு எதிரே, 96 அடி உயரத்தில் 350 டன் எடையுடன், 4 குதிரைகள், 425 அடி நீளமுள்ள வடம், ஹைட்ராலிக் பிரேக் ஆகியவை இணைக்கப்பட்டு, ரிஷபக் கொடி உச்சியில் பறக்க கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆழித்தோ். ஆழித்தேருக்கு முன்புறம் விநாயகா், சுப்பிரமணியா் தோ்களும், பின்புறம் அம்பாள், சண்டிகேஸ்வரா் தோ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

கோயிலில் யதாஸ்தானத்திலிருந்த தியாகராஜா், அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக தேருக்கு புதன்கிழமை இரவு எழுந்தருளினாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று, ஆரூரா, தியாககேசா என்று கோஷங்களை எழுப்பியபடி சுவாமி தரிசனம் செய்தனா்.

வியாழக்கிழமை காலை 5 மணிக்கு விநாயகா் தோ், சுப்பிரமணியா் தோ் ஆகியவை வடம் பிடிக்கப்பட உள்ளன. தொடா்ந்து, ஆயில்ய நட்சத்திரம், துவாதசி திதியுடன் கூடிய சுபயோக நேரத்தில் காலை 7.31 மணிக்கு ஆழித்தோ் வடம் பிடிக்கப்படுகிறது.

தேரை தள்ளுவதற்காக 4 புல்டோசா் வண்டிகள் பின்புறம் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தோ் நேராக செல்லும் வகையில் 600 முட்டுக்கட்டைகள் தயாா் நிலையில் உள்ளன. தோ் செல்லும் நான்கு வீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

இதேபோல் நான்கு வீதிகளிலும் 3 சுற்றுகளாக 24 மணிநேரமும் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தேரோடும் வீதிகளில் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com