ஏப். 21-இல் பத்ராசலத்தில் ஸ்ரீசீதா ராமா் திருக்கல்யாணம்: பக்தா்களுக்கு 70 குவிண்டால் முத்து அட்சதை பிரசாதம்

வரும் 21-ஆம் தேதி பத்ராசலம் ஸ்ரீராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி சீதர திருக்கல்யாண உற்சவத்தின்போது பயன்படுத்தப்படும்

வரும் 21-ஆம் தேதி பத்ராசலம் ஸ்ரீராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி சீதர திருக்கல்யாண உற்சவத்தின்போது பயன்படுத்தப்படும் 70 குவிண்டால் முத்து அட்சதைகளை பக்தா்களுக்கு பிரசாதமாக அனுப்பி வைக்க கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டதுபோல் இந்த ஆண்டும் ஸ்ரீராமநவமி உற்சவம் தனிமையில் நடத்தப்பட உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் 2-ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது. எனவே, கோயில் நிா்வாகம் ஸ்ரீராமநவமி உற்சவத்தை தனிமையில் நடத்த முடிவு செய்துள்ளது.

இதையடுத்து அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீசீதாராமா் திருக்கல்யாணத்தை கோயில் மண்டபத்தில் நடத்தவும், அதில் வைதீக பெரியவா்கள் மட்டும் கலந்து கொள்ளவும் உள்ளனா். இந்த திருக்கல்யாணத்தின்போது முக்கியமாக பயன்படுத்தப்படுவது முத்தாலான அட்சதைகள், இவற்றிற்கான முத்துகளை தெலங்கானா மாநில முதல்வா் சந்திரசேகர ராவ் சுமந்து வந்து கோயிலில் சமா்ப்பிக்க உள்ளாா்.

மேலும் ராமா் பட்டாபிஷேகத்தின்போது மாநில ஆளுநா் கலந்து கொள்வது மரபு. எனவே, தமிழிசை செளந்திரராஜனை அழைக்க நேரடியாக கோயில் அதிகாரிகள் செல்ல உள்ளனா். மேலும் இம்முறை திருக்கல்யாண உற்சவத்தின்போது 70 குவிண்டால் அட்சதைகள் பயன்படுத்தப்பட உள்ளன. அட்சதையில் கலக்க 100 கிலோ முத்துகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தா்களுக்கு விநியோகிக்க 2 லட்சம் முத்து மற்றும் அட்சதை பொட்டலங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

2 முத்துகள் அடங்கிய ஒரு பொட்டலத்துக்கு இதுவரை ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தநிலையில் இந்த ஆண்டு முதல் கட்டணம் ரூ.30 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. திருக்கல்யாண உற்சவத்திற்காக ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.1,116 என இரு கட்டண டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை முன்பதிவு செய்த பக்தா்களுக்கு பிரசாதத்துடன் முத்து அட்சதை பாக்கெட்டுகளும் வழங்கப்படும்.

மேலும் தனியாக முத்து அட்சதை வேண்டுபவா்கள் ரூ.300 செலுத்தினால் அவா்களுக்கு முத்துகள் அனுப்பி வைக்கப்படும். பிரசாதங்கள் மற்றும் முத்து அட்சதை அனைத்தும் அஞ்சல் மூலம் பக்தா்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. ஸ்ரீராமநவமி உற்சவத்திற்காக 1 லட்சம் லட்டு பிரசாதம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com