ஜன. 22-இல் திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா: ஒருநாள் மட்டுமே நடைபெறும்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் வழக்கமாக 5 நாள்கள் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழா, நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஜனவரி 22-ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 22-இல் திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா: ஒருநாள் மட்டுமே நடைபெறும்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் வழக்கமாக 5 நாள்கள் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழா, நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஜனவரி 22-ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ தியாக ப்ரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்திருப்பது:
சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175-ஆம் ஆண்டு ஆராதனை விழாவை,  ஜனவரி 18- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை 5 நாள்கள் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. 
இந்நிலையில், மிக வேகமாகப் பரவி வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான்  நோய்த் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டும், விழாவில் கலந்து கொள்ளும் இசைக் கலைஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் நலனை உறுதி செய்யும் வகையிலும், விழாக் குழுவினருடன் கலந்து ஆலோசித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது. 
இதனடிப்படையிலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலையான வழிகாட்டு 
நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டும், மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படியும் நிகழாண்டு ஆராதனை விழாவை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி நாளான ஜனவரி 22-ஆம் தேதி ஒருநாள் மட்டும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 
ஜனவரி 18 -ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 22- ஆம் தேதி காலை வழக்கம் போல உஞ்சவிருத்தியும், பின்னர் விழாப் பந்தலில் நாகசுர கச்சேரியும், அதன் பின்னர் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனையும் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவிலான இசைக் கலைஞர்களைக் கொண்டு பஞ்ச ரத்ன கீர்த்தனையுடன் ஆராதனை விழா நிறைவு பெறும். 
மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி, விழா பந்தலுக்குள் 100 பேருக்கு மேல் அனுமதியில்லை என்பதால், விழாவின்போது பந்தலுக்குள் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என விழாக் குழுவினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
சபையின் புரவலர்கள், நல விரும்பிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையிலும், இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் 2 தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com