ஜாதகத்தில் புதன் இருக்கும் இடத்தை வைத்து இவ்வளவு அறியமுடியுமா?

புதன் கிரகம் மிதுன ராசிக்கும் , கன்னி ராசிக்கும் அதிபதியானவர். உச்சம் மற்றும் மூலத்திரிகோண நிலையை அவர் கன்னி ராசியில் அடைகிறார்.
ஜாதகத்தில் புதன் இருக்கும் இடத்தை வைத்து இவ்வளவு அறியமுடியுமா?

புதன் கிரகம் மிதுன ராசிக்கும் , கன்னி ராசிக்கும் அதிபதியானவர். உச்சம் மற்றும் மூலத்திரிகோண நிலையை அவர் கன்னி ராசியில் அடைகிறார். மீனத்தில் நீச்ச நிலை பெறுகிறார். இவருக்கு ஒரே ஒரு பார்வை மட்டும் தான். அது 7-ஆம் பார்வை. இவரின் முக்கிய காரகத்துவம் பேச்சு, அறிவுத் திறன் மற்றும் பல.

ஒருவர், புத்திசாலியா அல்லது முட்டாளா என அறிய ஜனன ஜாதகத்தில், புதன் நின்ற நிலை மற்றும் அவரின் மேல் விழும் வேறு கிரகங்களின் பார்வையால் அறியமுடியும். மிதுனத்தில் புதன் ஒருவரின் ஜாதகத்தில் இருப்பின் அவர் ஒரு துக்கத்தை மறந்து விடுவார்கள். பிறர் செய்த துன்பத்தை மறந்து விடுவார்கள் மற்றும் மன்னித்து விடுவார்கள். ஆனால், கன்னியில் புதன் உள்ளவர்கள் துக்கத்தை எளிதில் மறக்க மாட்டார்கள். பிறர் செய்த துன்பங்களை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். 

முதலில் ஒருவரை பற்றிய அறிவுத்திறனை அறிய புதன் நிற்கும் நிலை, அவர் ஜாதகத்தில் ஏற்படுத்தும்/செயல்படும்  நிலை இவற்றை வைத்தே தீர்மானிக்கப்படும். இவரின் கிழமை புதன் கிழமை மற்றும் இவரின் கடவுள் மகா விஷ்ணு. நிறம் பச்சை, நவரத்தினத்தில் எமரால்டு எனும் பச்சைக் கல் மற்றும் உலோகம் ப்ராஸ் எனும் பித்தளையாகும். ப்ரித்வி தத்துவமும், ரஜோ குணமும், நுகரும் தன்மைக்கு அதிபதியும் ஆகிறார்.

இரவு மற்றும் பகலில் சக்தி பெற்ற இவர் பகல் இரவு இருவேளைகளிலும் சக்தி மிக்கவராக பெண் தன்மையை உடையவராய் இருப்பார். இவர் எந்த கிரகத்தோடு இணைந்து நிற்கிறாரோ அவரின் தன்மையை அடைகிறார். வடக்கு திசையை ஆள்பவர் ஆகிறார். இவரின் ஆளுமைக்கு உட்பட்ட மனித உறுப்புகள் இடுப்பு, நுரையீரல்,தோல் மற்றும்  நரம்பு செயலாக்க திறன் ஆகும். இவருக்கு, தோல் வியாதி, மூளை சீர்குலைவு , ரத்த சோகை, கல்லீரல் போன்ற உறுப்புகளை சார்ந்து அதன் செயல்பாடுகளை பாதிப்பது. மன ஆற்றல், சுருக்க சிந்தனை போன்றவற்றிற்கு காரணகர்த்தா ஆகிறார்.

இவரின் ஆளுமைக்கு உட்பட்ட கல்விகள்  சுத்தமான அனைத்துவித கணித ஆற்றல், வானியல், அனைத்து வித கணக்குகள் செயல்பாடு , ஓவியம் வரைதல், வர்த்தகம் , கட்டிடக்கலை, அனைத்து கல்வி மற்றும் அதனை கற்கும் திறன், நுண்கலைகள், சாமர்த்தியம், இயந்திர திறன் போன்றவற்றிற்கு ஆற்றல் தருபவர் புதன் கிரகம்.

தொழில்களில், அவர் உதவும் இடங்கள் விற்பனையாளர், முகவர்கள், பேச்சாளர், மொழியியலார், கவிதை புனைதல், வேதம், எழுத்தர் பணி, ஜோதிட அறிவு மற்றும் வேத மந்திரங்கள் ஓதுதல் போன்றவை புதன் தரும் ஆற்றல்கள்.
மனித உறவுகளில், தாய் மாமன், அத்தை மற்றும் நண்பர்கள்.

ஒருவரின் ஜாதகத்தில், புதன் நிற்கும் இடத்தை வைத்தே அவரின் புத்திசாலித்தனம், புரிதல் பற்றிய அறிவு வெளிப்பாடு, காதலிக்கும் அறிவுத் தன்மை, (இவரின் அருள் இல்லாமல் காதல் இல்லை ) மற்றும் கோபம் இல்லாத பகை உணர்ச்சி ஆகியவற்றை அறிய முடியும். குரு பிராமனர்களை குறித்தால் ; புதன் பிராமணன் அல்லாத பூணூல் அணிபவர்களை குறிக்கும்.

அறிவாற்றல், நற்சிந்தனை, மற்றவரிடம் தொடர்பு மற்றும்  தகவல் பரிமாற்றத்திற்கு புதனே காரணமாகிறார். இவரின் நிலை ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லாதபோது அவரின் மேற்கூறிய செயல்களில்  தடுமாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவது திண்ணம். அதே சமயம் சில போது சிலரின் தந்திரமான செயல் மற்றும் வாழ்வின் சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறன் இவற்றுக்கும் புதனே காரணம் ஆகிறார். 

இப்படிப்பட்ட புதன் சிலரின் ஜாதகத்தில் அஸ்தங்கம் அடைந்திருப்பின், அவர்கள் தமக்கு எல்லாம் தெரியும் எனும் அதிகப்படியான நம்பிக்கையின் பொருட்டு சில சமயங்களில் தவறான முடிவுகளினால் தோல்வி அடைவதோடு அவமானம் அடையவும் நேரிடும். இப்படிப்பட்டவர்கள் தேர்வுக்கு அனைத்தும் தெரியும் பார்த்துக்கொள்ளலாம் என எண்ணித் தேர்வின்போது தடுமாற்றம் அடைவதோடு, தோல்வியை நிச்சயம் தழுவுவார்கள்.

இதற்கு பரிகாரம், புதன் கிழமை புதன் ஹோரையில் கும்பகோணம் அடுத்து பூம்புகார் அருகில் உள்ள திருவெண்காடு அல்லது சென்னையில் மாங்காடு அருகில் உள்ள கோவூரில்  உள்ள ஈசனை / இறைவனை பூஜித்து வந்தால், நிச்சயம் வெற்றி பெறுவதோடு, தமது அவசர எண்ணத்தை காட்டாமல் நிதானமாக செயல்படுவார்கள். பூஜித்தல் என்றால், இறைவனின் எதிரில் மனம் ஒன்றாக லயித்து அமைதியாக சிறிது நேரம் நின்று வந்தாலே போதும். 

ஜோதிடர் தையூர். வே. லோகநாதன்
தொடர்புக்கு : 98407 17857 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com