ஒருவர் பாடிய பாட்டை நான் பாட மாட்டேன்

மலேசியா வாசுதேவனை அவரது வீட்டில் சந்தித்தேன்
ஒருவர் பாடிய பாட்டை நான் பாட மாட்டேன்

மலேசியா வாசுதேவனை அவரது வீட்டில் சந்தித்தேன்.

நீங்கள் சிரமப்பட்டு பாடி, இது ஹிட்டாகும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு பாடல் தோல்வியடைந்திருக்கிறதா?

அப்படி எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் நீங்கள் சொல்கிறபடி படி, என்னால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பாடல் படத்தில் இடம்பெறாமல் போயிருக்கிறது. 'கிழக்கே போகும் ரயில்' படத்திற்காக 'மலர்களே நாதஸ்வரங்களே' என்ற பாடலை மிகவும் அனுபவித்து பாடி அதன் வெற்றிக்காக காத்திருந்தேன். கடைசியில் படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருத்தமாக இல்லை என்று டைரக்டர் பாரதிராஜா அந்த பாடல் காட்சியை படத்தில் இருந்து நீக்கி விட்டார்.

நீங்கள் சுலபமாகப் பாடி எதிர்பாராமல் வெற்றி பெற்ற பாடல் எது?

கலையான ராமனின் பாடிய 'காதல் வந்துடுச்சு' என்ற பாடலைச் சொல்லலாம். அது இவ்வளவு பாப்புலராகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நீங்கள் பாட வேண்டிய பாடலை மற்றொரு பாடகருக்கு சிபாரிசு செய்திருக்கிறீர்களா? விட்டுக் கொடுத்திருக்கிறீர்களா?

அப்படியொரு சந்தர்ப்பம் இதுவரை எனக்கு கிடைத்ததில்லை. ஆனால் ஒருவர் பாடிய பாட்டை நான் பாட மாட்டேன் என்று சொல்லி போராடி தோல்வி அடையும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

யாராவது தங்கள் பாட வேண்டிய பாடலை உங்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்களா?

யாரும் வீட்டுக் கொடுக்கவில்லை என்றாலும் சூழ்நிலை காரணமாக அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. '16 வயதினிலே படத்தில் சுசீலாவுடன் நான் பாடியிருக்கும் 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான் பாட இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அன்று எஸ்.பி.பிக்கு வாய்ஸ் கட்டிக் கொண்டது.  வேறு யாரையாவது பாடச் சொல்லி ரிக்கார்டிங்கை முடிக்குமாறு எஸ்.பி.பியும் கேட்டுக் கொண்டார்.  அன்று அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் பீல்டில் என்னுடைய முன்னேற்றம் இன்னும் கொஞ்சம் தாமதப்பட்டிருக்கும்.

நீங்கள் பாடியிருப்பவைகளில் உங்கள் மனைவிக்கு பிடித்தமானவை எவை?

என் மனைவி நல்ல ரசிகை. அவளுக்கு நான் தர்ம யுத்தத்தில் பாடிய 'தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு' , கன்னிப் பருவத்தில் பாடிய 'பட்டு வண்ண ரோஜா', வெள்ளை ரோஜாவில் பாடிய 'தேவனின் கோயிலே', சரணாலயத்தில் பாடிய 'எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை'., மவுன கீதங்களில் பாடிய 'டாடி..டாடி' ஆகிய பாடல்கள் மிகவும் பிடிக்கும்.        

இசைத் துறையில் உங்களுடைய வாரிசாக உங்களுடைய பிள்ளைகளில் யாரையாவது உருவாக்குவீர்களா?

என் எட்டு வயதுப் பையன் யுகேந்திரனைத்தான் தயார் பண்ணுகிறேன். நான் சிறு வயதில் கர்னாடிக் மியூசிக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன்.என் ஆசை பல காரணங்களால் நிராசையாகி விட்டது.அதை என் மகன் யுகேந்திரன் மூலமாக நிறைவேற்றி வைக்க முயற்சி செய்து வருகிறேன்.

பேட்டி: இமருதம்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.05.84 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com