தினந்தோறும் திருப்புகழ்
தினந்தோறும் திருப்புகழ் என்ற இந்தப் பகுதியில், திருப்புகழுடைய யாப்பு அமைப்பு, யாப்பில் அதன் தனிப்பட்ட சிறப்பு போன்றவற்றோடு, அன்றாடம் ஒவ்வொரு திருப்புகழை எடுத்துக்கொண்டு, அதற்கு விளக்கமாக சில குறிப்புரைகளையும், அந்தப் பாடலில் அமைந்திருக்கும் பொருளையும் விளக்க இருக்கிறார் ஹரி கிருஷ்ணன்.
திருப்புகழ் குறித்து…
திருவள்ளுவர் தான் இயற்றிய நூலுக்குத் திருக்குறள் என்ற பெயரைச் சூட்டவில்லை. அதற்கு முப்பால் என்றும் வேறு பல பெயர்களும் வழக்கில் இருந்தன. குறள் என்பது இரண்டடியில் இயற்றப்படும் குறள் வெண்பாவுக்கான பெயர். அதுவே, ‘திரு’ என்ற அடைமொழியோடு திருக்குறள் என்ற நூற்பெயராக மாறியது. சொல்லப்போனால், நூலை இயற்றியவர் பெயர் திருவள்ளுவர் என்பதே, பிற்காலத்தில் திருவள்ளுவ மாலைக்குப் பின்னால் எழுந்த பெயர். அவரை தேவர் என்றும் வேறு பல பெயர்களாலும் பழைய நூல்கள் குறிக்கின்றன.
இதைப்போலவே, கம்பன் தன் காப்பியத்துக்கு இராமாவதாரம் என்றுதான் பெயர் சூட்டினான்.
நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே
என்பது கம்பராமாயணம். காலப்போக்கில் இந்தப் பெயர் மறைந்து, இயற்றியவனுடைய பெயராலேயே ‘கம்பராமாயணம்’ என்று மக்களால் அழைக்கப்பட்டு, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. இயற்றியவனுடைய பெயரால் வழங்கப்படும் ஒரே காப்பியம் என்று இக்காப்பியத்தைச் சொல்லலாம்.
ஆனால் திருப்புகழோ, இறைவனாலேயே சூட்டப்பட்ட பெயர். அருணகிரிநாதர் பல இடங்களில் இதைச் சொல்கிறார். எண் வரிசைப்படி, திருப்புகழில் இரண்டாவது பாடலாகக் கொள்ளப்படும் பக்கரை விசித்ரமணியில் அவர் சொல்கிறார் –
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை மறவேனே
விருப்பத்தோடு திருப்புகழைச் சொல் என்று முருகா, நீ எனக்கருளியதை மறவேன் என்கிறார். இப்படிப் பல இடங்கள் உண்டு. செப்டம்பர் 17, 2015, விநாயகர் சதுர்த்தி முதல், திருப்புகழின் அமைப்பு முதலானவற்றை ஒரு பகுதியாகவும், எண் வரிசைப்படியிலான திருப்புகழ்ப் பாக்களை ஒன்றொன்றாகவும் அல்லது பகுதி பகுதியாகவும் பொருள் காண்போம். பொருள் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், திருப்புகழைப் பாராயணமாகக் கொண்டிருக்கும் அன்பர்கள் பலர் உண்டு. பொருளையும் தெரிந்துகொள்வது இந்த அமுதின் சுவையை அறிய உதவும் என்ற கருத்தோடு இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு பாடலுக்கும் பொருள் கூறி முடித்ததும், சந்த முறைப்படி படிக்கும் முறையை ஒலிப்பதிவாகவும் தருவோம். எழுத்து வடிவத்தை வைத்துக்கொண்டு ஒலிப்பதிவை இயக்கி, கூடவே படித்தால் எவராலும் திருப்புகழை ஓதுவதில் பயிற்சியடைய முடியும்.
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்