தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கலாப்பிரியா

தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'. இவர் 30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர் சோமசுந்தரம், புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம்
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கலாப்பிரியா

தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'. இவர் 30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர் சோமசுந்தரம், புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம் இவரது கவிதைகளில் காணலாம். குறுங்காப்பியங்களும், கவிதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார். தற்போது வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சிறுவயதில் எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்து திமுக தொண்டனாக மாறியவர் அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் இரங்கற்பா கவிதை எழுதியவர். வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிகையான பொருஞையில் கவிதை எழுதும்போது தனக்குத்தானே கலாப்பிரியா எனப்பெயர் சூட்டிக் கொண்டார்.

பின்னர் இவரது கவிதைகள் கசடதபறவில் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களின் எழுதி வந்தார். கலாப்ரியாவின் கவிதைகளில் பாலுணர்வு வெளிப்பாடுகளும் சில வேளைகளில் வன்முறையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் கருதியதுண்டு.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையே தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களை கவிதைகளாக பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'.

கவிதைத் தொகுதிகள்:

வெள்ளம் (1973)

தீர்த்தயாத்திரை (1973)

மற்றாங்கே (1980)

எட்டயபுரம் (1982)

சுயம்வரம் மற்றும் கவிதைகள் (1985)

உலகெல்லாம் சூரியன் (1993)

கலாப்ரியா கவிதைகள் (1994)

கலாப்ரியா கவிதைகள் (2000)

அனிச்சம் (2000)

வனம் புகுதல் (2003)

எல்லாம் கலந்த காற்று (2008)

நினைவின் தாழ்வாரங்கள் - கட்டுரைத் தொகுப்பு (2009)

ஓடும் நதி - கட்டுரைத் தொகுப்பு (2010)

கலாப்ரியா கவிதைகள் - பேட்டிகள், திறனாய்வுகள், கருத்துகள் உள்ளடக்கியது (2010)

உருள் பெருந்தேர் - கட்டுரைத் தொகுப்பு (2011)

நான் நீ மீன் - கவிதைகள் (2011)

“ உளமுற்ற தீ - கவிதைகள் (2013)

“ சுவரொட்டி” - கட்டுரைத் தொகுப்பு (2013)

“ காற்றின் பாடல்” - கட்டுரைத் தொகுப்பு (2014)

விருதுகள்:

தமிழக அரசின் கலைமாமணி விருது
 கவிஞர் சிற்பி இலக்கிய விருது,
ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்
நெல்லை சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது
2010ல் சுஜாதா விருது
கண்ணதாசன் இலக்கிய விருது - கோவை - 2012
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - உருள் பெருந்தேர்- உரைநடை/புதினம்- 2012,
கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
கவிதைக் கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது

படித்ததில் கவிதைகளில் சில...

தவறி விழுந்த

குஞ்சுப்பறவை

தாயைப் போலவே

தானும் பறப்பதாய்

நினைத்தது.

தரையில் மோதிச்

சாகும் வரை.

தெற்கிலிருந்து வீசினால் -- தென்றல்

வடக்கிலிருந்து வீசினால் -- வாடை

கிழக்கிலிருந்து வீசினால் -- கொண்டல்

மேற்கிலிருந்து வந்தால் --- மேலை

ஒரு மொழியில் காற்றை மட்டும் விவரிக்க

இத்தனை வார்த்தைகள் உண்டா என

தெரியவில்லை !!!!!

வேராய் ஒளித்து வைக்கும் மொழி

தேடிய வார்த்தையைப்

பூவாய்த் தரும்

ஆகராதி

ஏனையவற்றை

வேராய்

ஒளித்து வைக்கும்

மொழி

சுற்றிப் பார்க்க வந்த

குழந்தைகள்

இரண்டிரண்டாய்

மஹால் தூணைக்

கட்டிப் பிடிக்கின்றன

தொட்டுக்கொள்ளாத

கைகளுக்கிடையே

மௌனமாய்

மொழி

முலையுண்ட

குழந்தைக்கு

ஏப்பம் வரும் வரை

முதுகு நீவும்

தாயுடன்

பரிதவித்து நிற்கிறது

மொழி

தேடுவதை விடுத்து

என்றோ தொலைந்த

பழம் படிமங்களை

அகழ்ந்து வருகிறாயே

முதலில்

பாதாளக் கரண்டியைத்

தொலைத்து முழுக்கு

சொல்கிறது

மொழி

உறுமி பறை

கும்மி குலவை

சகல ஆர்ப்பாட்டங்களுடன்

சாமக் கொடை முடிந்து

சப்பரம் கிளம்பிற்று

தீவட்டி பிடிப்பவனின்

தூங்கி வழியும் கண்ணில்

அமைதியாய்க் குடியேறிய

மொழி

அவ்வப்போது வானேகுகிறது

வெடிச் சத்தமாய்.

சிறிய

ஊரென்றாலும்

பெரிய

உலகினுள்தான்

இரந்து நிற்பவனின்

மிகக் குறைந்த

சொற்களும்

ஈயாமல் விரட்டும்

ஒற்றைச் சொல்லும்

பரந்து கெடச்

சொல்லும்

அறச் சொல்லும்

அனைத்தும்

சேர்ந்தே

உயர்தனிச்

செம்மொழி

அதிகம்

கோருவதுமில்லை

குறைவாய்ச்

சொல்வதுமில்லை

அன்பின் மொழி

போன்ற கவிவரியும் அவரது பரந்து விரிந்த கவிதைக்களமும் கவிதையும் கவித்துவமும் மிக அழகானது. மீண்டும் மீண்டும் சிலாகிக்க வைக்கும் தனியொரு சக்தி அவரது கவிதைகளுக்கு உண்டு. அவரது மொழி ஆளுமை அபாரமானது. ஓரிரு வார்த்தைகளை ஒன்று சேர்த்து புதியதொரு பொருளைக் கொடுக்கும் அதிசயத்தை அவரது கவிதைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com