'மழைமேகம்' கவிதை பகுதி 1

ஆடையில் மலையெலாம் ஆடையே அணிந்திட அடியடி வெடியென வருவாய்
'மழைமேகம்' கவிதை பகுதி 1
Published on
Updated on
3 min read

மழைமேகம்

(தரவு கொச்சகக் கலிப்பா)

மழைமேகம் தந்தருளும் மாண்புகளோ ஏராளம்.!
மழைத்துளியாய் வீழ்ந்திட்டால் மண்தரையை ஏர்ஆளும்.!
தழைச்செடிகள் செழித்தோங்கத் தேடுகின்றோம் மாமழையை.!
விழைந்துவர இயற்கையாக வேண்டிநிற்போம் மழைத்தாயை.!
.
வருகின்ற மழைமேகம் வளமாகத் தந்துவிடும்,!
பெருகின்ற மழைத்துளியே போதுமென ஆகிவிடும்.!
இருக்கின்ற ஏரிகுளம் இனிமேலும் நிரம்பட்டும்.!
உருப்படியாய்ச் சேமித்து உயருதற்கு வழிசெய்வோம்.!
.
மூன்றுபோகம் விளைவிக்க மழைநீரே ஆதாரம்.!
தேன்போன்ற மழைத்துளியைத் தேக்கிவைத்தால் சுகமுண்டு.!
சான்றோர்கள் கட்டிவைத்தார் சாதகமாய் அணைகளெலாம்.!
வான்மேகம் பொழிந்துவிட்டால் வளமுண்டு மண்ணுலகில்.!
.
விண்மேகம் தருகின்ற வானமுதக் கொடைகளெலாம்.!
மண்ணுயிர்கள் நிலைபெறவே மாநிதியாய் மாறிவிடும்.!
கொண்டாடி மகிழத்தான் கொடுப்பாயா மழைநீரை.?
தண்ணீராய் தாய்நீயாய்த் தாகத்தைத் தணித்திடவா.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

கருணையுடன் இயற்கைநிலை நமக்காய் நின்று
காத்திருந்து உதவுதல்தான் அருளே என்றும்
பொருந்திவரும் காலமெல்லாம் பார்த்துப் பார்த்து
புலந்தன்னில் உயிர்களையே போற்றிக் காக்கும்
விருந்தொன்றே படைப்பதுபோல் வேண்டும் எல்லாம்
விண்தொடங்கி நிலந்துளைத்துக் கடமை ஆற்றும்
மருந்தொன்றே நோய்தீர்க்கும் வழிகள் என்று
மகிழ்ந்தளிக்கும் 'மண்ணுயிர்க்கே மழையின் மேகம்’

அகிலொன்றில் நிறைமணத்தை புகுத்தித் தந்து
அளவில்லா பூக்களிலே தேனை வைத்து
தகிக்கின்ற வெப்பத்தில் ஒளியை காட்டி
தழைத்திருக்கத் தருவினிலே குளிரை ஊட்டும்
மகிழ்ந்திருக்க மாதுளையாய் மலைகள் என்றே
மாநதிகள் பாய்ந்தோடித் தாகம் தீர்க்கும்
முகிலிரண்டும் தொட்டணைக்க மலரும் காதல்
முத்தங்கள் 'பொழிந்திருக்கும் மழையாய் மேகம்'

-- கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

**

சூழ் கொண்ட மேகத்தை சூழ்ந்த நட்சத்திரங்கள் 
விவாதத்தில் ஆழ்ந்தன
யார் காரணம் 
கடலா, காற்றா, ரவியா, மதியா
மின்னல் கோபத்தில் வெட்டிப் பிளக்க 
இடியும் குமுற
நடந்தது -புலன் விசாரணை
எவரும் - நான் இல்லை, 
நான் இல்லை எனவே
இந்திரனும் வந்தனன், நாட்டாமையாக,
மேகத்தின் சூழிற்கு காரணம் யார்?
இந்திரன் அமைதியாய் பதிலிறுத்தான்,
அதோ - ஆயிரமாயிரம் மரங்கள் அங்கே 
ஒற்றைக் காலில் புரியும் தவத்தால் தான் 
மேகம் கருவுற்றது எனவே,
நல்ல தீர்ப்பென- உள்ளம் குளிர
மழை தரும் குளிர் தரு மரமென உணர்ந்தேன்,
மரம் வளர்ப்போம் - மழை பெறுவோம்

- கவிதா வாணி, மைசூர்

**

மழை வருதா என வானம் பார்க்கிறோம் 
அந்த வானம் மட்டும் நீல வண்ணமாகவே  இருக்க 
விழைகிறோம் !
ஆனால் மழை மட்டும் வேண்டும் நமக்கு 
இது என்ன நியாயம் ? 
மேகம் இல்லாமல் மழை ஏது ?
கரும் பட்டு உடுத்தி கரு மேகம் 
திரள வேண்டாமா விண்ணில் ? 
கருப்பு பட்டு ஆடை நம்மில் பலருக்குப் 
பிடிக்காமல் இருக்கலாம் ....ஆனால் 
நீல வானம் கரும் பட்டு தரித்து 
மழை மேகத்தில் மறைய விழைகிறதே !
மழை மேகத்துக்கு கருப்பின் மேல் 
அப்படி ஒரு மோகம் ! கரு மேக ஆடை 
உடுத்தி  நீல வானம் சிந்தும் ஆனந்தக் 
கண்ணீர்தான் இந்த மண்ணுக்கு 
மழையோ !

- கந்தசாமி நடராஜன் 

**

வறண்ட நில மீதில் நம்பிக்கை 
மழை மேகமாய் நீ,
புரண்டு படுக்கையில் நனவுகளை 
நனைத்துக் கொட்டித் தீர்த்த - மழை,
திரண்ட நினைவுகளுடே
நெரித்த சுற்றம்,
மரித்த காதல் உயிர்த்தெழும்
பொழுதுகளில் -
அழுது தீராத மழை மேகமாய் 
நம் உறவு,
நீயும் நானு மற்ற அந்த வானம்
அந்தி சாயும் நேரம் இருள் சூழ்ந்து
புதரென மண்டும்,
வாழ்க்கைக்கான - வசவுகளோடு 
யதார்த்தங்கள் நெசவு செய்யப்பட நம்
உருவப் படங்களைப் பார்த்துப் பார்த்து 
வியக்கிறோம் நாம் - என்ன ஒரு நாடகம்
என கலைந்து போகிறது மேகம் - மழை? 
மனதிற்குள் மட்டும்.

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

மழைக் குழந்தையை
பிரசவிக்கத் தயாராகும்
தாய் அல்லவா மழை மேகம் ?

அடடா...! ஆச்சரியம்!
ஆயிரம் கரம் கொண்டு அணைக்கும்
அண்ணலையும்
விழுங்கி விட்டாளே இவள் !

சப்த (சத்த) ஸ்வரங்களுடன்
தாளக் கச்சேரி நடத்த
ஆயத்தம் ஆகின்றாளே
இவள் !

இவள் என்ன அத்தனை அழகா?
இவள் தெருவில் நடக்கும்
போதெல்லாம்
இடி மின்னல் இம்சைகள்
பின் தொடர்கின்றன ?

அடப்பாவி மனிதர்களே !
சில்வர் அயோடைடு
தூவி இவளையும்
வாடகைத்தாய் ஆக்கி
விடுகின்றீர்களே ?
கொஞ்சமாவது அடுக்குமா உங்களுக்கு ?

- த.தினேஷ், கடலூர்.

**

மழை மேகம்

பொதுவாக மழையாகப் பெய்யும் 
மழைமேகம் கூட மாறிவிட்டது.
ஒரு பக்கத்தில் பெய்கிறது.
மறுபக்கத்தில் பொய்க்கிறது.
இது மழைமேகத்தின்
பிழையா?
இல்லை மழை மேகத்தை
திசைதிருப்பும்
காற்றின்  செயலா?
எதற்காக இப்படி நடக்குது?
அப்படியே தான்
காலமும் கடக்குது.
எது எப்படி எப்போது
நடக்கும் என்பதை
அறியமுடியவில்லை.
மழைமேகங்களும்
மாரியைப்பொழியாமல்
மாறிவிட்டது தான்
தற்போதைய எல்லை.
கார்மேகம் கூடினால்
மழைவரும்
மழை வந்தால்
நிலம் குளிரும்
பச்சையம் நிச்சயம்
பயிர்வசம் நீங்காதிருக்கும்.
பூமியின் உயிர்கள்
தாகத்தை விடாமல்
தீர்த்து நிற்கும்.-- அந்த
மழைமேகமே!!
நீ! மாறாமலிரு!
மலை போல
எங்கள் மகிழ்ச்சிகளை
நிலையாக அசையாமல்
உறுதியாக்கி எங்கும்
பொதுவாக போதுமானதாக எங்குமே
பெய்யென பெய்துவிடு!
பொழியட்டும் மழை மேகம்!
அங்கு
வழியட்டும்
மகிழ்ச்சியின் தாகம்
என்றே செய்து விடு!

- கவிச்சித்தர் களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்

**

எங்கள் கண்களில் தெரியும்
விண்ணில் ஓடும் மேகங்களே
மண்ணில் வந்து விளையாடு
மழைநீர் துளிகளாக உறவாடு!
ஓடி விளையாடும் மழை மேகமே
ஆடி பாடி மண்ணில் வந்து
குழந்தையுடன் கொஞ்சி விளையாடு
குளுமை மணம் எங்கும் தந்துவிடு!
மழை மேகங்கள் ஓடுவதைக் கண்டு
மகிழ்வர் காதலர்கள் புன்னகையோடு
மண்ணில் மழைநீர் மலரும்போது
மஞ்சத்தில் கொஞ்சி மகிழ்வர்!
கருமேகம் கண்ட மயில்கள்
விரிக்கும் அதன் தோகையை
பார்க்க வருவாய் அதன் அழகை
கலக்கும் உன் மழை உறவை
அழைக்கும் மழைத் துளிகளோடு!
வாடிய பயிரைக் கண்டு
வாடிய வள்ளல்பெருமான்
ஓடும் உன் மழைநீர் கண்டு
மகிழ்வார் மழை மேகத்தோடு!

- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்,
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

**

விண்ணில் பயணம் செய்யும்
மண்ணில் வர தயாராகும்
கண் போன்ற  மழை மேகமே...
நீ நீர் தர மறுத்தால்
புவி வறண்டு  எங்கள்
ஆவியே துவண்டு விடுமே!
"நீரின்றி அமையாது உலகு!"
என்ற சொற்களின்
பொருள் உணர்ந்து 
அருள் மனம் கொண்டு 
கருணையோடு  கீழே  வர
தயாராகும் உன் பெயர்தான்
மழை மேகமோ!
உணவு இல்லை என்றால்கூட
கனவுடன் வாழ  சிறிது நீர்
போதுமே.......... மழை மேகம் 
கோபம் கொண்டால்  எங்களின்
தாபம் நிறைந்த வாழ்வில்
சாபம் பெற்ற உயிராக  வாடுவோமே!
கோபம் விட்டு
மழையாக  கீழ் நோக்கி  வந்து
தழைக்கும்  சிறப்பை
கொடுக்க......."மழை மேகமே"
உன்னால் மட்டுமே  சாத்தியம்!

- பிரகதா நவநீதன்.  மதுரை

**

ஆடையில் மலையெலாம் ஆடையே அணிந்திட அடியடி வெடியென வருவாய்!
கோடையில் குளித்தவர் குளிர்ந்துடல் சிலிர்த்திட கொண்டலே நீயுடன் வருவாய்!
ஓடையில் ஆற்றினில் ஓடியும் ஒட்டியும் உயர்கரை புரண்டிட வருவாய் !
பாடையாய்க் கிடந்திடும் பல்லுயிர் எழுந்திட பார்வையைப் பதித்துடன் வருவாய்!

புல்லதும் பூண்டதும் பூத்ததும் காய்த்தும் புத்துயிர் பெற்றிட வருவாய் !
நெல்லதும் செடியதும் கொடியதும் மரமதும் நீடுயிர் நிலைத்திட வருவாய் !
கல்லதும் கரைந்திட காடதும் களித்திட கற்கண்டு போலுடன் வருவாய் !
செல்வமி லாதவர் செல்வமே சேர்த்திட சீருடன் சிறப்புடன் வருவாய் !

குடித்திட நீரிலை குமுகமே தவிப்பினில் குறையதை நீக்கிட வருவாய் !
மடிந்துள ஓடையும் ஏரிகுளம் குட்டையும் மகிழ்வுடன் நிறைந்திட வருவாய் !
முடிந்தது வாழ்வென மூலையில் கிடப்பவர் முறுக்குடன் எழுந்திட வருவாய் !
விடிந்தது வாழ்வென விரிந்துளம் மகிழ்ந்திட விழிப்புடன் விரைந்துடன் வருவாய்!

ஊற்றுநீர் எங்கிலும் ஓடியே பெருகிட உவப்புடன் உயிர்ப்புடன் வருவாய் !
ஆற்றுநீர் பெருகிட அழகிய சோலைகள் அணிசெய அறிந்துடன் வருவாய் !
போற்றிடும் மாமழை புவியெலாம் புதுக்கிட புன்னகை பூத்துடன் வருவாய் !
ஏற்றமாம் கார்முகில் இயல்மழை யாகியே இனிதுடன் தொடர்ந்துடன் வருவாய்!

-படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.