தேநீர் நேரம் கவிதை பாகம் 1

அன்னை காலை அடுப்படியில் புகுந்தாலே வீட்டில் தேநீர் நேரம்
தேநீர் நேரம் கவிதை பாகம் 1
Published on
Updated on
2 min read


தேநீர் நேரம்

அன்னை காலை அடுப்படியில்
புகுந்தாலே வீட்டில் தேநீர் நேரம்
அப்பா கையிலே நாளிதழ்
செய்திகளுடன் உறவாடி
தேநீர் அருந்தி மகிழ்வார்!
அண்ணன் அக்கா தம்பி
கரங்களில் கைபேசி
இதழ்களில் புன்னகை
இதழ்நுனியில் தேநீர்கோப்பை!
பக்தியுடன் தொலைக்காட்சியில்
பாட்டி தாத்தா அம்மா
சுப்ரபாதம் கேட்டுகொண்டே
சுவைத்து மகிழ்வர் தேநீர்!
உழைப்பாளிகள் களைப்பு
மறைய நின்றுகொண்டே
தேநீர் அருந்தி சுறுசுறுப்பாக
சிரித்து உரையாடுவர்!

- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்,
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

**

எல்லாரும் வாருங்கள்
இளைப்பாறுதல் தருவேன் என்கிறார்
வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரில் இருக்கும்
தேநீர்க் கடையின் உரிமையாளர்

சர்க்கரையில் மொய்க்கும் ஈக்கள் போலவே
தேநீர்க் கடையில்
சுவைஞர்கள்

சர்க்கரை இல்லாத... சர்க்கரை போட்ட...
அரை சர்க்கரை, கால் சர்க்கரை
ஸ்டார்ங்காக
லைட்டாக
மீடியமாக என்றெல்லாம்
நேயர் விருப்பங்கள் இடைவிடாமல்
நாயர் தேநீர்க் கடையில்...
நிறைவேறுகின்றன விருப்பங்கள்
நினைவு தவறாமல்

சாய்ந்துவிழும் அருவியென
மேல்குவளையிலிருந்து
கீழ்க்குவளையில் பாயும் தேநீர் சங்கீதத்தைக்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்

ஆனாலும்
அரசு அலுவலரைப் பார்க்க
எந்த நேரம் சென்றாலும்
தேநீர் அருந்தச் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.

- கோ. மன்றவாணன்

**

அவசர கதியில்
அலுவலகம் சென்றேன்,
வந்த நகரப் பேருந்திலோ
அதீத கூட்டம்
துயரமுடன் ஏறினேன்
படிக்கட்டில் தொற்றினேன்;
கைப் பையை
கை ஒன்று  இழுத்தது
தான் வைத்திருப்பதாக 
ஜாடை சொன்னது
இறங்கும் இடம் வந்த பின்
நன்றி சொல்லி வாங்கினேன்;

இது தொடராக ஆனதும்
வெட்கம் வந்த அவளிடம்
என் துக்கம் போனதாக நினைந்து
வாங்க ஒரு தேநீர் 
சாப்பிடுவோம் என்றேன்;
தாமதத்திற்குப் பின்னே 
தலை அசைத்தாள்;

என் மனக் கோயிலின் 
தெய்வம் என்றேன்;
வெட்கத்துடன் தேநீர் குடித்து
நல்ல நேரம் 
என் அப்பாவைப் பாருங்கள்
என்றாள்.......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**
காலையில் பருகிடும் தேநீர்
...கனவுகளுக்கு புத்துணர்வு தந்தது
மாலையில் பருகிடும் தேநீர்
...மலர்களின் வாசத்தைத் தந்தது
மழைநேரம் பருகிடும் தேநீர்
...மனதிற்கு மகிழ்ச்சி தந்தது
உழைக்கும்நேரம் பருகிடும் தேநீர்
...உடலுக்கு உற்சாகம் தந்தது
களைப்பு நமக்கு வந்தபோது
...கோப்பை தேநீர் போதும்
மூளைக்கும் சுறுசுறுப்பு தந்து
...மனமும் புதுமையாய் மாறும்
தேநீரை நாம்பருகிடும் நேரம்
...மனக்கவலை பறந்தோடும் தூரம்
தேநீரை நாவும் சுவைத்தது
...தேன்போல் வாழ்வும் இனித்தது

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

பசுவின் மடியில் உதிர்ந்த பாலோ ..
பவுடரில் கலந்து வெள்ளையாகிய நீரோ –
நீலகிரி மலையில் விளைந்த தேயிலையோ ..
நீத்துப்போன இலைகளின் பொடித்துகளோ ---
கரும்புச்சாலையில் நசுங்கி வெளிப்பட்ட
வெள்ளைச்சக்கரையோ , வெல்லச்சக்கரையோ---
இவற்றை கலந்து பார் –
அழுத்தமில்லா மின்சாரமாய்
மந்த ஒலியுடன் ஒரு குறை நீர் --- ஆனால் அதே,
  ஒரு மனைவியின் கையுடன்
வாயருகில் கோப்பை வந்தால்
சொர்க்கத்திற்கே ஒரு இஸ்ரோ பயணமாய்
தேநீர் நேரம் ----

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

**

கையில் தினசரி
விரலிடுக்கில் சிகரெட்
வாயில் தேநீர்...
இது
நாகரீக அடையாளங்களெனப்
பழக்கிக் கொள்கிறது மனம்...

சரியான நேரத்தில்
ஞாபகத்தில் துளைத்தெடுக்கும்
போதைக்கு மதுபோல்
நினைவுப் படுத்தி வசப்படுத்தும்
தேநீர் நேரம்...

நேரத்தில்
கிடைக்காத பொழுதுகளில்
தேடி அலைந்து
காணத்துடிக்கும் காதலியாகி விடுவதுண்டு
சுவைக்கும் தேநீரும்...

இது
உழைக்கும் ஏழைகளின் பானம்
இதனுடனேயே
பசிப் போக்கிக் கொள்வதமுண்டு
பொழுதுகள்...

முதல்தர தேயிலை தன்னை
ஏற்றுமதி செய்துவிட்டு
தள்ளுபடியான தேயிலை நம் தலையில்
குப்பையெனக் கொட்டுவதுதான்
விபரீத வேடிக்கை...

-அமிர்தம்நிலா/நத்தமேடு

**

ஓயாத வேலை 
பாயும் சொல்லைக் கேட்டு
கோபத்தை அடக்கி
பம்பரச் சுழலாய் 
சுற்றிக் கொண்டு,

எத்தனை துயரம்
எத்தனை பேரிடம்
தாங்குமா குட்டி இதயம்
தயங்குமோ கனலின் உதயம்;

சீராக்க வேண்டி
சிற்றுண்டி நாடி
சிதறட்டும் மன அழுத்தம் என
ஒரு கோப்பை தேநீர்
நாசிக்குள் மணம் வீட்டு 
உதட்டினுள் சுவைத்திடும் தருணம்
அப்பப்பா புத்துணர்வு 
எப்படி வந்ததோ 
நேரம் தான் ஆரம்பம் ஆச்சுதே..

- சுழிகை ப.வீரக்குமார்

**

தேநீர் நேரமொன்றே  வாழ்வில் 
தித்திப்பான  நல்நேரம்!
எத்தனையோ போர்களைத் தேநீர்
எளிதாய் நிறுத்தியதுண்டு!
உலகத்து அமைதிக்குத் தேநீர்
உதவியது பெரும் வரலாறு!
நட்பின் நல்ல அடையாளம்
நண்பர்களின் தேநீர்தானே!

டீயைக் குடித்து விட்டு 
தீயாய் வேலை செய்யும்
உழைப்பாளர் குழுமங்கள்
உலகத்தில் அநேகமுண்டு!
தேநீரை மட்டுமே சிலரிங்கு
வயிற்றுக்கு   நல்  உணவாக்கி 
வாழ்நாளை மிக எளிதாக்கி
பிறவிக் கடன் தீர்ப்பதுண்டு!

உலகபானம் ஒன்று உண்டென்றால்
அது தேநீர் மட்டுமென்றே
தெளிந்தோர் பலர் கூறல்
உண்மையே! அதனை உலகேற்கும்!
தேநீர் நேர உறவுகளைத்
திகட்டாத பெரும் உறவாக்கி
அமைதிக்கு வழி வகுப்போம்!
அன்பு  கொண்டே மகிழ்ந்திருப்போம்!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**

முதலில் பயமாக இருந்தது
நீச்சல் தெரியாதவன்
ஆழ் கிணற்றில் குதிப்பது போல
தெரியாத மொழியினை
முயன்று புரிந்து கொள்வது போல
வழி தெரியாக் காட்டில்
திகைத்து நிற்பதுபோல
அச்சப்பட்டாலும் துணிந்தேன்
பாம்பு பிடிப்பவன் போலப் 
பைய நெருங்கிக்
கன்னத்தில் தந்த முதல் முத்தம்
காலமெல்லாம் இனிக்கிறது.
முதல் நீச்சல்
முதலில் வண்டி ஓட்டல் போல
இதுவும் மறக்க முடியாதுதான்

**

ஒரு காலத்தில்
கிராமங்களின் தேநீர்க்கடை பெஞ்சுகள்தான்
தேசத்தைத் தீர்மானித்தன...

அது
பெரியவர்களின்
பொழுதுப் போக்கிடமாகவும்
இருந்தது

விடியலோடு
பனிப்புகையில் பரவும் ஆவி
காளைகளுடன் ஏருழச் செல்வோர் நாசிகளில்
தேயிலை வாசத்தோடு இனிப்புச் சுவை
நாவிலூரும்...

குடத்தோடு குளம் போகும் வரும் வஞ்சியர்களை
வாய்ப் பேசாத வாலிபர்களின்
கடைக்கண் பார்வைகள்
பெரியவர்களுக்குத் தெரியாமல்
குரும்புகள் செய்த
கிராமங்களும் விளையாடித்தான்
மகிழ்ந்தன...

வியர்வை வழிய
உறிஞ்சிய உதடுகளில் ஈரம் சுரக்க
அலுப்பை நீக்கிய இடமும்
தேநீர்க் கடைதான்...

ஆனாலும்
இன்னும் கூட ரெட்டைக் குவளை
தொங்குவதைப் பார்த்து
சுதந்திரக் கொடி நிழலும் நெளிகிறது
என் மனம் போல...

- கா.அமீர்ஜான்.திருநின்றவூர்

**

உழைப்பவனுக்கு அது 
ஓய்வு தரும் நேரம்.

பிழைப்பவனுக்கு(தேநீர் வியாபாரிகள்)
அது உழைக்கும் நேரம்.

நாள் தோறும் நடந்து
பல பாதைகள் கடந்து
வயிற்றுப்பசி போக்க
அலையும் மனிதர்களின்
ஓய்வு நேரமே தேநீர் நேரமே!

பலகதைகள் சிறு உரையாடல்கள்
தொழிற்சாலைகளில்
விடும் தேநீர் நேரம்
அங்கு தான் அரைமணி நேரத்திற்கு இவைகள்
அரங்கேறும்
மனங்களும் சற்று இளைப்பாறும்.

தேநீர் நேரம் உழைப்பவருக்கு
தேவையான நேரமே!

- கவிச்சித்தர் களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்.

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.