Enable Javscript for better performance
politics poem- Dinamani

சுடச்சுட

  

  அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 3

  By கவிதைமணி  |   Published on : 29th August 2019 11:29 AM  |   அ+அ அ-   |    |  

  banish-office-politics-startup

  அரசியல்

  போராளிகள் ஏமாளிகளாய்
  புரட்சியாளர்கள் உணர்ச்சியற்றவர்களாய்
  மாறினார்கள் அரசியலால்
  வெள்ளையனை விரட்டி
  கொள்ளையனை வரவேற்றோம்
  நிரந்தர அடிமைகளாக
  நல்லவன் யார்
  திருடன் யார்
  கரை படிந்த மனதுக்கு
  தெரியாமல் போனது
  தொழிலாளியை சுரண்டி
  முதலாளியை வளர்த்தான்
  அரசியல்வாதி
  சாதியை தூண்டினான்
  மதத்தை வளர்த்தான்
  இரண்டையும் பற்றவைத்து
  குருதி வெள்ளத்தில் மிதக்கிறான்
  சிம்மாசனத்தில்
  தகுதியற்றவனை தலைவனாக்கி
  தவிக்கிறது நாடு
  நல்ல தலைவனுக்காக

  - தமிழ்ப்பேரொளி ஜீவா காசிநாதன்

  **

  நாடாளவே,  நமையாளவே, செயல் கோர்க்கும் கொள்கை அரசியல் !
  நாமுயரவே, நம் நிலையுயர்த்தும், நோக்கம், ஆக்கம் அரசியல் ! 

  மனித வாழ்வின் பிரிக்கமுடியாத ஒரு தத்துவம், அரசியல் !
  ஓ! ஓ! மனிதா! மனிதா! நீ வாழும் முறைதான் அரசியல் !

  சமுதாய வாழ்வினில், அமைதி வார்க்கும் அற்புதம், அரசியல் !
  சமுதாயம் கூடி வாழ்ந்துக் கோடி நன்மைப்
  பெறத்தான், அரசியல் !

  பொருளியல் ஒழுங்கியல் முறைகட்கு, வழிவகுக்கும் அரசியல் !
  பொருந்திடும் திட்டமும், சட்டமும் சாசனம் ஆக்கும் அரசியல் !

  அறநெறிதனிலே, மானுடமே! மானுடமே! நீ நடந்திடத்தான், அரசியல் !
  அன்பு நெறியுடனே, மானுடமே ! நீ தொண்டு செய்திடத்தான், அரசியல் ! 

  அரசியலின் தத்துவமெல்லாம், மனித வரலாற்று நிகழ்வுகளே !
  அரசியலின் வழித்தடத்தில், சீர்பெறும்,
  நல்லொழுக்கங்களே !

  வாழ்க்கை வாழத் தேவை யாவும்,  எளிதில் வழங்கும் அரசியலே !
  வற்றாதக், குறையாத அறிவுத்துறைதனை, மேம்படுத்தும் அரசியலே !

  பகை அஞ்சி ஓடப், பண்பாடு கெஞ்சிக் கொஞ்சும், அரசியலாலே !
  பரிவானத் தலைவர்களும் தொண்டர்களும் 
  உருவாவது அரசியலாலே !

  - கவி R.அறிவுக்கண்.

  **
  சமூகத்தை சமப்படுத்தும்
  கொள்கைகளின் பிறப்பிடம்!
  சுமூகமான சமூக வாழ்விற்கு
  வழிவகுக்கும் தத்துவம்!
  தனி மனிதனை சமூகமாக வாழ
  அறநெறி வகுக்கும் அமைப்பு!

  ஏழை எளியவர்களின்
  காப்பாளன்!
  எளியவர்களை காக்கும்
  வலிய ஆயுதம்!
  சாமனியர்களையும்
  சமூக உச்சத்திற்கு
  ஏற்றும் ஏணி!

  மக்களின் வாக்கும்
  செல்வாக்கும் பெற்று
  மக்களிடமிருந்து தோன்றும்
  பொதுநலவாதி! அரசியல்வாதி!!
  மக்களின் வாக்கும்
  செல்வாக்கும் பெற்று
  மக்களிடமிருந்து தோன்றும்
  சுயநலவாதி! அரசியலில் வியாதி!!

  -கு.முருகேசன்

  **

  அரசியல் பிழைத்தோர்க்கு
  அறம் கூற்று இது
  அரசுதுறந்த புலவன்அன்று
  அறைந்த கூற்று
  அரசியல் பிழைப்பாளர்
  அதெல்லாம் நேற்று
  வீசிய காற்று; ஏட்டில்
  வீசிய வெறும் பாட்டு

  ஆளவைப்பது மாபெரும்ஓட்டு
  அதற்காகத் தலையாட்டு
  வாழவைக்கும் காசுவிளையாட்டு
  வசந்தத்தை நிலைநாட்டும்
  பாழ்பிணக்காட்டில் தேரோட்டு
  பாலைவனத்தை நீராட்டு
  ஏழைரத்தத்தில் காரோட்டு
  என்று பாடுவார் ஓர்பாட்டு!

  யார்ஆட்சி என்றாலும் இங்கே
  ஆராய்ச்சி மணி இல்லை
  தேர்ஆட்சி தெருவீதியில்
  தேவையின்றி கன்றுசெத்தால்
  ஊராட்சி மன்றத்தில்கூட
  ஓங்கிஅடிக்க மணியில்லை
  பேராட்சி செய்தமனு
  நீதிச் சோழனுமில்லை

  யாரங்கே கையில்
  சிலம்போடு புலம்புவது
  போயந்த கையைவெட்டு
  கொண்டுவா கையில்துட்டு
  நீதியென்ன நியாயமென்ன
  நிற்கட்டும் வரிசையில்
  ஆட்சிமட்டும் நிலைக்கட்டும்
  அதுதானப்பா அரசியல்!

  - கவிஞர் மஹாரதி

  **

  மக்கள் தேர்ந்தெடுக்கும் 
  தலைவன்  நடத்தும் நல் ஆட்சி 
  அதன் பெயர்தான்  அரசியல்! 
  விரும்பும்  தலைவனை 
  தேர்ந்தெடுக்கும்  ஒரு நல்ல வாய்ப்பில் 
  தேர்ந்தெடுப்போம் ஒரு தகுதியான 
  தலைவனை!
  தன்னலமற்ற தேச  பற்றுடைய 
  தலைவன் கிடைத்தால் 
  மலைபோல நம்பி  கொடுப்போம் 
  நம்  அரசியல்  ஆட்சியினை!
  தலைவன்  நல்  வழி நடந்தால் 
  நம் தேசமும் நல்லவழி  நடக்குமே!
  நாடாளும் திறைமை உடைய 
  கோடான கோடி உள்ளங்கள் 
  தேடித் தேடி கொடுப்போம் 
  நம்  அரசியல் ஆட்சியினை! 
  நல் அரசியல் அமைத்தால் 
  வானம் மும்மாரி பொழியும்! 
  இதில் பூமியும் குளிரும்!
  நம்  மனமும் மகிழும்!
  வரவேற்போம் அரசியலை!

  - பிரகதா நவநீதன், மதுரை  

  **
  அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் 
  செவ்வியான் கேடும் - நடக்க ,
  உறுபசியும் - ஓவாப்பிணியும்
  செறு பகையும் - சேர,
  முதலைகளும்- திமிங்கிலங்களும்
  மூச்சு முட்ட குடித்தாடும் - கடற்கரை
  விடுதியாய் |
  மக்கள் தீர்ப்பு - துச்சமாக,
  மாக்களால் நீச்சர்கள் அரியணை ஏற
  ஆணவம் பரிபாலனம் செய்ய
  இறை நீதி மறந்து
  ஈன்றவர் வெறுக்க,
  உலகோர் தூற்ற,
  ஊரோர் ஒறுக்க,
  என்றும் ஊழல்
  ஏன் எனுமாறு,
  ஐம்புலன் வழியில்
  ஒருவர் இருக்க,
  ஓராயிரம் - ஒளவியத்தால்
  ஆயுதமே தொழிலாய் -
  இது எது?
  - இன்றைய அரசியல்.

  - செந்தில்குமார் சுப்பிரமணியன்
   

  **

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai