ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 7, 8

திருவருள் இல்லாவிட்டால்
ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
                                           ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள்
                                           இல்லையேல்?
அன்று தேவர், அசுரர் வாங்க அலைகடல்
                                           அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய், கொடியேன் பருகு
                                          இன் அமுதே.

அன்றைக்குப் பாற்கடலைக் கடைய எண்ணிய தேவர்களும் அசுரர்களும் அதற்கு வழிதெரியாமல் பின்வாங்கி நின்றார்கள், அப்போது நீ, அலைகளையுடைய கடலிலே, ஒப்பற்ற மந்தரமலையின்மீது வாசுகி என்கிற பாம்பைச் சுற்றிக் கடையச்செய்தாய், அத்தகைய எங்கள் தந்தையே, கொடியவனான நான் பருகுகின்ற இனிய அமுதமே, என்னுடைய உடலில் இருக்கும் ஐம்பொறிகளும், ஒரு பொருளைச் சொல்லி, அந்தக் கருத்திலேயே உறுதியாக நிற்காத கயவர்களாக இருக்கின்றன, உன்னுடைய திருவருள் இல்லாவிட்டால் இந்த வலிமையான கயவர்களை நான் என்றைக்கு வெல்வேன்?

***

பாடல் - 8

இன் அமுது எனத் தோன்றி ஓர் ஐவர்
                               யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயம் எலாம் முழு வேர்
                               அரிந்து என்னை உன்
சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்திக்
                              கைதொழவே அருள் எனக்கு,
என் அம்மா, என் கண்ணா, இமையோர்தம்
                              குல முதலே.

என் அம்மா, என் கண்ணா, வானோர் கூட்டத்தின் முதல்வனே, ஐந்து இந்திரியங்களும் தொடக்கத்தில் இனிய அமுதத்தைப்போல் இன்பம் தருகின்றன, அதன்மூலம் எல்லாரையும் மயக்குகின்றன, இப்படி அனைவரையும் மயக்குவதற்காக இந்த இந்திரியங்களை உண்டாக்கிவைத்தவன் நீயே, (எனக்கு
அந்த மயக்கம் வேண்டாம், இந்திரியங்கள் தரும் போலி இன்பம் வேண்டாம்,) உன்னுடைய அந்தப் பழைய மாயத்தையெல்லாம் நான் முழுமையாக வேரோடு அரிந்துவிடவேண்டும், உன்னுடைய திருச்சின்னங்களையும் திருவுருவத்தையும் சிந்தித்துப் போற்றவேண்டும், கையேந்தித் தொழவேண்டும், அதற்கு எனக்கு அருள்செய்வாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com